இந்தக் கோயில் எங்கேயிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களோ தெரியாது. ஆப்பிரிக்க கிழக்குக் கரையோரச் சமுத்திரத் தீவான மொரிசியசு என்னும் நாட்டில்...
மொரிசியசில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறிய 1721ஆம் ஆண்டளவில் தமிழர்கள் பயிற்சி பெற்ற தொழிலாளர்களாகவும் வெள்ளைகாரர்களின் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாகவும் வந்துசேர்ந்தார்கள். ஏனைய இந்தியக் குடியேற்றவாசிகள் போன்றே தமிழர்களும் புத்திசீவிகளாகவும் வணிகர்களாகவும் சிறந்து விளங்குகிறார்கள்.
இவர்கள் மத்தியில் கொடை வள்ளல்களுக்கும் குறைவில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகும். இயலாதவர்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தையும் தட்டிக்கேட்கவும் இவர்கள் தயங்குவதில்லை.
இங்கு தமிழும் சைவமும் தளைத்தோங்குவதை இவர்கள் பெருமையுடன் இன்றும் கூறுகிறார்கள்.
கோயில் திருவிழாக்களில் காவடியும் தீமிதிப்பும் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் நடைபெறுவதுபொலவே இங்கும் நடைபெறுகின்றன.
முதலில் 1850 இல் Terre Rouge என்னுமிடத்தில் தமிழ் செல்வந்தர்களால் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி துரோபதை அம்மன் கோயில் நிர்மாணிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து லூயிஸ் துறையில் ஸ்ரீ சொக்கலிங்க மீனாட்சி அம்மன் கோயிலும் கிளெமென்சியாவில் அருள்மிகு பாலதந்தை கோயிலும் Plaines des Roches என்னும் நகரில் சிவ சுப்பிரமணியன் கோயிலும் நிர்மாணிக்கப்பட்டன.
இக்கோயில் நிர்மாணிப்புப் பணிகளில் காலத்துக்குக் காலம் வந்த தமிழக அரசாங்கங்கள் எண்ணற்ற உதவிகளைக் கொடுத்துதவின என்பதையும் இங்கு நான் நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.
சமயமே தமிழர்களை இணைப்பதும் ஒற்றுமைப்படுத்துவதுமான சக்தியென இவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
நமது கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருக்கும் இந்த உடன்பிறப்புகளின் வாழ்வில் சுகமும் செல்வமும் சகோதரத்துவமும் வளர வாழ்த்துவோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.