திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி(வயது 39). ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் காலை கிருஷ்ணமூர்த்தி தனது லோடு ஆட்டோவில் தண்ணீர் கேன்களை ஏற்றிக்கொண்டு அரும்பாக்கம் பெருமாள்கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல், கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து அண்ணாநகர் உதவி கமிஷனர் குணசேகரன் தலைமையில் அரும்பாக்கம் போலீசார் 2 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக அரும்பாக்கம் மற்றும் கோயம்பேடு பகுதியை சேர்ந்த சங்கர்(29), கார்த்திக்(23), கவிராஜ்(24), அஜீத்குமார்(24), பாபு(24) ஆகிய 5 பேரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.
கைதானவர்களிடம் இருந்து கத்தி, மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான சங்கர், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
அரும்பாக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு எனது சித்தப்பாவும், பா.ம.க. பிரமுகருமான நாகராஜ் கொலை செய்யப்பட்டார். அதற்கு முன்பு அவரது சகோதரர் சரவணன் என்பவரும் கொலை செய்யப்பட்டார்.
இந்த 2 கொலைக்கும் மூல காரணமாக ‘ஸ்கெட்ச்’ போட்டு கொடுத்து செயல்பட்டவர் ரவுடி கிருஷ்ணமூர்த்தி என்பது தெரிந்தது. தந்தை இல்லாத என்னை வளர்த்து ஆளாக்கிய 2 சித்தப்பாக்களின் கொலைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தியை பழிதீர்க்க முடிவு செய்தேன்.
இதற்காக தக்க சமயம் பார்த்துக்கொண்டிருந்த நான், நேற்று முன்தினம் அரும்பாக்கத்துக்கு லோடு ஆட்டோவில் கிருஷ்ணமூர்த்தி வருவதை தெரிந்துகொண்டு 8 ஆண்டுகளுக்கு பிறகு எனது சித்தப்பாக்களின் கொலைக்கு பழிக்குப்பழியாக ரவுடி கிருஷ்ணமூர்த்தியை எனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.