கத்தரி இனத்தைச் சேர்ந்ததாகும், மணத்தக்காளி. அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை இச்செடி வளரும். இச்செடியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த சத்துணவாகும்; உணவு மருந்தும் ஆகும்.
மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.
மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது, மணத்தக்காளிக் கீரை, இதன் விஞ்ஞானப் பெயர், சோ(ஸோ)லனம் நைக்ரம் என்பதாகும். இப்போது உலகம் முழுவதும் இது பயிர் செய்யப்படுகிறது.
காரணம், குறைந்த செலவில் சிறந்த உணவாகவும் நோய்களைக் குணப்படுத்தும் மருந்துணவாகவும் இருப்பதால்தான்.
இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, மணித்தக்காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை பலவிருத்தி (Tonic) மணித்தக்காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன.
இக்கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பி விடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும்.
எந்த உறுப்பு எந்தப் பொருளைக் கிரகித்துக் கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்ற வகையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.
குத்தலா? எரிச்சலா?
மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும். உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது.
சிறுநீரகக் கோளாறு தீர்க்கும் இலைக் காய்கறி!
இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.
மலச்சிக்கலா?
மணத்தக்காளிப் பழம்பலவிருத்தி(Tonic) போல மதிப்பு மிகுந்த பழமாகும். பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. வாரத்துக்கு இரு நாள் மட்டுமே மலம் கழிக்கிறவர்கள் இப்பழத்தைச் சாப்பிடலாம். இதனால் கழிவுகள் உடனே வெளியேறும். இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.
நீர்க்கோவை குணமாகும்!
நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.
வயிற்று வலி குணமாகும்!
ஒரு கைப்பிடி அளவு சுத்தம் செய்யப்பட்ட இக்கீரையை சாறாக மாற்றி பிடித்த பழ இரசப் பானம் ஒன்றுடன் இந்தக் கீரைச் சாற்றையும் சேர்த்து அருதினால் வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். மேற்கண்ட வயிறு சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாக இக்கீரையுடன் பாசிப் பருப்பு, வெங்காயம் முதலிய சேர்த்து கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம்.
நல்ல தூக்கம் இல்லையா?
இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் களைப்பு நீங்கும். இத்துடன் நன்கு தூக்கத்தையும் கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.
மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. இதே சாறு கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும் கணிக்கிறது. கல்லீரல் கோளாறுகள் அனைத்தையும் இக்கீரைச்சாறு குணமாக்கும்.
காய்ச்சலுக்கும் மருந்து..
எல்லா வகையான காய்ச்சல்களையும் இக்கீரை தணிக்கும். உலர்ந்த மணத்தக்காளிக் கீரையை (அல்லது கீரைப் பொடி என்றால் ஒரு தேக்கரண்டி) தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். உடனே வடிகட்டி, சூட்டுடன் அருந்த வேண்டும். இது உடனே செயல்பட்டு நோயாளியை நன்கு வியர்க்கச் செய்துவிடும். வயிர்வை வெளியேறுவதால் காய்ச்சலின் தீவிரம் குறையும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும். மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். ஆஸ்துமா நோயாளிகள் சளியுடன் ‘கர்புர்’ என்று சிரமத்துடன் மூச்சு விட்டுக்கொண்டு இருப்பார்கள். இவர்களும் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும்.
நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும்.
தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம்.
நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும்.
மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. காசநோய், ஆஸ்துமாகாரர்கள் தொந்தரவு இன்றி இரவில் அயர்ந்து தூங்க வற்றல் குழம்பு உதவும்.
தினமும் சாப்பிடலாமா?
மனத்திற்கு மகிழ்ச்சியைத் தந்து உடலில் உள்ள நோய்களையும் குணப் படுத்தும் இக்கீரையைத் தினமும் உணவில் உண்ணலாம்.
100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன. நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன.
மகிழ்ச்சி வேண்டுமா?
மேலும், தசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும் கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோஃபிலவின் என்னும் வைட்டமின் பி2ம், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும் ‘பி’ குரூப்பைச் சேர்த்த வைட்டமின் நியாஸினும் உள்ளன. பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது.
நெஞ்சவலி இனி இல்லை! இக்கீரையையும், பழத்தின் விதைகளையும் உலர வைத்துப் பொடியாக்க வேண்டும். அவற்றைத் தலா அரைக் கரண்டி வீதம் காலையும் மாலையும் உட்கொண்டால் நெஞ்சுவலி குணமாகும். காய்ச்சல் நேரத்திலும் நாள்பட்ட புண்கள் இருந்தாலும் இதுபோல் உட்கொள்ள வேண்டும். இப்பொடியைத் தேன் கலந்தும் சாப்பிடலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.