மூச்சுப்பயிற்சி என்றாலே அது ஒரு சிக்கலான விஷயம் என்பதுபோல நினைக்க வேண்டியதாக இருக்கிறது.
காரணம் அது சம்பந்தமாக விதிக்கப்படும் அல்லது சொல்லப்படும் பயிற்சி முறைகளே.
எதற்காக மூச்சுப்பயிற்சி செய்கிறோம்? சுவாசத்தை சிரமமில்லாமல் எளிதாக்குவதற்கு.
எதற்காக சுவாசத்தை எளிதாக்கவேண்டும்? அப்போதுதான் நிறையக் காற்றை உள்ளிளுக்கவும் வெளிவிடவும் முடியும்.
எதற்காக நிறையக்காற்றை உள்ளிளுக்கவும் வெளிவிடவும் வேண்டும்?
அப்போதான் உள்ளிழுக்கப்படும் காற்றில் பிராணவாயு கூடுதலாக இருக்கும்.
எதற்காகப் பிராணவாயு கூடுதலாக இருக்கவேண்டும்? அப்போதுதான் இதயத்திலிருந்து சுத்திகரிப்புக்காக நுரையீரலுக்கு வரும் ரத்தம் உடனுக்குடன் பிராணவாயுமூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தடையில்லாமல் மீண்டும் இதயத்துக்கும் அதைத் தொடர்ந்து உடல் முழுவதும் வேகமாக எடுத்துச் செல்லப்படும்.
அப்படி வேகமாக எடுத்துச் செல்லாவிட்டால் என்ன ஆகும்? அதற்காகக் காத்திருக்கும் உடல் கட்டமைப்புகளில் இருக்கும் உட்கூறுகள் தங்களின் இயக்கத்துக்குத் தேவை யான சுத்த ரத்தம் உடன் கிடைக்காத நிலையில் திணறவேண்டி வரும்.
அது சரிப்படுமா? சாதரணமாகவே திணறல் ஏற்பட்டால் கடுமையாக உழைக்கும்போது, விளையாடும்போது, ஒடும்போது, படி ஏறும்போதெல்லாம் அதிகசக்தி தேவைப்படுவதால் அதிக ரத்த ஒட்டம் தேவைப்படுமே அதற்கு என்ன செய்வது?
அதற்குத்தான் பயிற்சியின்மூலம் நிறையக் காற்றை உள்ளிழுக்கவும் அதை நுரையீரலில் வைத்து சுத்திகரித்து உடனுக்குடன் தேவைக்குப் பற்றாக்குறை ஏற்படாமல் அனுப்பப் பயிற்சி மேற்கொள்வது.
அந்தப் பயிற்சியின்போது என்ன ஆகிறது?
சாதாரணமாக அதிகப்படியான வேலையோ விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற பழக்கமோ இல்லாதவர்களுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படாததால் காற்றிலிருந்து பிராணவாயுவைப் பிரித்தெடுக்கும் பணி நுரையீரலில் அதிகமாக நடக்காததால் அந்தப் பணி நடப்பதற்கான நுண்ணறைகள் குறைவான அளவே இயங்கு நிலையில் இருக்கும். மற்றவை எல்லாம் சுருங்கியோ அல்லது வேறு சிலவற்றால் அடைபட்டோ இருக்கும்.
அந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் வேலை செய்தாலோ மாடிப்படிகள் ஏறினாலோ கொஞ்சதூரம் ஓடமுயன்றாலோ வேகமாக நடந்தால்கூட வியர்த்து விறுவிறுத்து மூச்சிரைக்க ஆரம்பித்துவிடும். காரணம் அந்த கூடுதல் வேலைக்குத் தேவையான அளவு கூடுதல் ரத்த சுத்திகரிப்புப் பணி நுரையீரலில் நடக்க முடியவில்லை என்பதுதான் காரணம்.
இப்போது ஏன் மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதை அறிந்து கொண்டோமல்லவா?
அதை எப்படிச் செய்வது?
இந்த இடத்தில் ஒரு சிக்கல் உள்ளது. ஆதாவது இந்தத் துறையில் உள்ள யாராவது ஒருவரைக் கேட்டால் அவர் சொல்வதைப் பின்பற்றுவது அப்போதைக்கு எளிதாகத் தெரியும் ஆனால் பின்னால் அதைப் பெரும்பாலோர் செய்யமாட்டோம்.
காரணம் மூச்சுப்பயிற்சிக்கென்றே சொல்லப்பட்டிருக்கும் சில பல முறைகளைச் சொல்வார்.
நிச்சயம் பிராணாயாமத்தைச் சொல்வார். பிராணாயாமம் என்பது ராஜயோகம் கற்றுக்கொள்பவர்கள் அதன் எட்டுப்படிகளில் நான்காவது படியாக பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி வருகிறது. அதை அவர்கள் முழுமையாகப் பயின்றால்தான் அடுத்தடுத்த படிகள் வழியாக சமாதி நிலை என்னும் உச்ச நிலைக்குச் செல்ல முடியும்.
அதற்காக மூச்சை எப்படி இழுக்கவேண்டும், எப்படி விடவேண்டும், இரண்டு நாசிகளையும் மாற்றிமாற்றி எப்படிச் செய்யவேண்டும் உள்ளிளுப்பது, உள்ளே அடக்கி நிறுத்துவது, வெளியே விடுவது, வெளியில் நிறுத்துவது இப்படிப்பட்ட நிலைகளை எப்படிக் கையாள்வது, ஒவ்வொன்றுக்கும் எத்தனை வினாடிகள் எடுத்துக்கொள்வது, அந்த நேரத்தைப் படிப்படியாக எந்ந அளவு உயர்த்துவது போன்ற பலவிதமான முறைகளில் பயிற்சியைப் பெறவேண்டும்.
இதுவெல்லாம் சாதாரண வாழ்க்கை வாழ்பவருக்கு நடைமுறை சாத்தியமானது அல்ல. நிறையப் பேரைப் பார்க்கலாம். ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து மூச்சுப் பயிற்சிக்குப் போவார்கள். போகும் வரை நான் யோகா வகுப்புக்குப் போகிறேன் என்று பெருமையாகச் சொல்வதைத் தவிர அதன்படி நடப்பவர் ஒரு சதவிகிதம்கூடப் பார்க்கமுடியாது.அதனால் என்ன பயன்?
ஆகையால் மூச்சுப் பயிற்சியால் என்ன பயனோ அதனைமட்டும் அடைவதற்காக நாம் சில எளிய முளைகளைக் கையாளலாம்.
ஆதாவது கீழே ஒரு விரிப்பின்மேல் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டோ அல்லது பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டோ ஓரிரு நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பயிற்சியைத் துவங்கவேண்டும். உடம்பை வளைக்காமல் நேராக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்குப் பக்கத்தில் சுவற்றில் ஒரு கடிகாரம் இருப்பது நல்லது. கீழே தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில்கூட நேராக நிமிர்ந்து வசதியாக உட்கார்ந்து கொள்ளலாம்.
அதன்பின் ஒரு பத்துத் தடவை முடிந்த வரை காற்றை உள்ளிழுத்து மெதுவாக வெளிவிடவேண்டும். சுவாசம் சீரானதும் ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கத் துவங்கும்போதும் சுவர்க்கடிகாரத்தில் ஒலிக்கும் வினாடிமுள் நகரும் சப்தத்தை எண்ணிக்கொள்ளவேண்டும்.
எத்தனை வினாடிகள் உள்ளிழுப்பதற்கு ஆகிறது என்று எண்ணிக்கொண்டு உள்ளிழுக்க முடியவில்லை என்றால் உடனே வெளிவிடத் துவங்க வேண்டும். வெளிவிடும் நேரம் எவ்வளவு என்பதையும் கணக்கிட்டுக்கொண்டு வெளிவிட முடியவில்லை என்றால் உடனே உள்ளிழுக்கவேண்டும்.
உள்ளிழுப்பதைவிட வெளிவிடுவதற்குக் கொஞ்சம் கூடுதல் நேரம் ஆகும். உள்ளிழுக்கும் நேரமும் வெளிவிடும் நேரமும் சேர்ந்ததுதான் ஒரு மூச்சுக்கான நேரம்.
ஒரே மாதிரி நேரக் கணக்கில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மூச்சு விட்ட பின்பு மிகவும் எளிதாக இருந்தால் மூச்சின் நேரத்ததை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விநாடிகள் அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதை ஒரே நாளில் செய்யவேண்டிய அவசியம் இல்லை. மெதுவாக எப்போது முடியுமோ அப்போது உயர்த்திக் கொள்ளலாம். மூச்சுத் திணறாத அளவு எந்த அளவு வேண்டுமானாலும் நேரத்தைக் கூட்டிக்கொண்டே கொள்ளலாம்.
இந்தப் பயிற்சியின் காரணமாக நுரையீரலின் காற்றை உள்ளிழுக்கும் திறனும் அதன்மூலம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணிக்காகப் பிராணவாயுவை அளிக்கும் திறனும் அதிகரிக்கின்றது. காரணம் அதுவரை நுரையீரலின் திறக்காத அறைகளெல்லாம் திறக்கிறது. அங்கு இதற்கு முன் நடக்காத வேலைகள் எல்லாம் நடக்கிறது. அவ்வளவே!
இந்தப் பயிற்சிக்கு சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் தேவையில்லை. கெட்ட பழக்கங்கள் இல்லாமல் உடலைத் தூய்மையாக வைத்திருக்குமளவு இதன் பயன் கூடுதலாக இருக்கும்.
இந்தப் பயிற்சியினால் இதயத்துக்கும் ஓரளவு பயிற்சி கிடைக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.