26/03/2019

வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை ஏன் விரட்டப்பட வேண்டும்?


அனில் அகர்வால் என்ற லண்டனில் குடியேறிய இந்தியரின் 'வேதாந்தா' தொழிற்சாலைக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் வேதாந்தாவின் தாமிர உருக்கு ஆலை அமைக்க முயன்று, தோற்றுப் போய் பின்னர் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் 12.12.1989இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராடியதால், அம்மாநில முதல்வர் சரத்பவார் ஆலை அமைக்க அனுமதி மறுத்து 1.5.1994இல் கட்டுமானப் பணிக்குத் தடை விதித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 30.10.1994 அன்று ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து, கட்டுமானப் பணிக்கு அடிக்கல்லும் நாட்டினார். அதனால் 18.3.1996 அன்று தூத்துக்குடி வந்த ஜெயலலிதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கருப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பல் 20.3.1996 அன்று ஆழ்கடலில் தடுத்து மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டது. கப்பல் கொச்சிக்கு சென்றது. 78 விசைப்படகுகள், 24 நாட்டுப்படகுகள் கொண்ட சுமார் 500 பேர் கொண்ட சிறிய மீனவர் படைதான் இதனை செய்தது.

பின்னர் 10.4.1996 முதல் இரு பெண்கள் உள்ளிட்ட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். அரசின் சார்பில் 18.4.1996 முதல் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள் குழாய்கள் மூலம் கடலில் கலக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.

மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து 1996 இல் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பரதவர், நாடார் இடையே திட்டமிட்ட சாதி மோதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பள்ளர், தேவர் இடையே சாதி மோதல்கள் வீரியமானது. இதன் பிண்ணனியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தன.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என்ற - தமிழ்மாந்தன் தலைமையிலான - அமல்ராஜ் என்ற இறையரசு, ராஜேஸ் என்ற கடலரசன், செ.ரெ.வெனி இளங்குமரன், சி.சற்குணம், ம.சான்சன், ம.அன்வர், முத்துராஜ், அ.அருள்ராஜ் ஆகியோரைக் கொண்ட அமைப்பு 20.7.1996 அன்று நடத்திய ஸ்டெர்லைட் மாநாட்டில் திரளான மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

சாதியின் பெயரால் பிரிந்து கிடந்த மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி கொச்சியில் இருந்து லாரிகள் மூலம் தாமிரத் தாதுக்கள் கொண்டு வரப்பட்டதோடு, 19.10.1996 இல் எம்.வி.பரங்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேரிடையாகவே தாமிரத்தாதுவை சுமந்து வந்து சேர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுகத் தொழிற்சங்கத் தலைவர் சி.பசுபதிபாண்டியன் தலைமையிலான தொழிலாளர்கள் 20.10.1996 முதல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க மறுத்துப் போராடினர். 152 விசைப்படகுகள், 36 நாட்டுப் படகுகளில் ஒன்று திரண்ட மீனவர்கள் 24.10.1996 இல் அக்கப்பலை முற்றுகையிட்டு துறைமுகத்தை விட்டே வெளியேற்றினர்.

இதற்கிடையில் 1996 இறுதியில் தமிழக முதல்வரான கருணாநிதி அனுமதி கொடுத்ததால் 1997 முதல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்தது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடை இல்லா சான்றிதழை 1.8.1994ல் இரு கட்டுப்பாடுகளோடு கொடுத்தது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும். தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் உருவாக்க வேண்டும். ஆனால் ஆலை 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பசுமை வளையம் குறிப்பிட்ட அளவில் அமைக்கவில்லை.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

14.10.1996ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற் சாலையில் 1,70,000 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக ‘தூய சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக் கட்டளை’ என்ற அமைப்பின் வழக்குரைஞர் வி.பிரகாஷ் 7.11.1996 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். கனகராஜ், சி.பி.ஐ.அப்பாத்துரை உள்ளிட்டோர் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.

இதற்கிடையில் 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அதில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்து 2.3.1999 அன்று அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் 11 பேர் ஸ்டெர்லைட் நச்சு வாயுக் கசிவால் மயங்கி விழுந்தனர்.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி டாக்டர் கண்ணா தலைமையில் நீரி அமைப்பினர் 1998 இல் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தனர். அதனடிப்படையில் நடந்த விவாதத்தின் முடிவாக 23.11.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் லிபரான், பத்மநாபன் குழு உத்தரவிட்டது. அதன் பின்னர் நீதியரசர் அகர்வால் தலைமையிலான அமர்விற்கு வழக்கு மாற்றப்பட்டு 25.12.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நாக்பூர் நீரி நிறுவனம், 1998-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு அறிக்கை தந்து இருந்தது. 1999-ஆம் ஆண்டில் பல்டியடித்த நீரி நிறுவனம், 2003-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆய்வு அறிக்கை தந்தது.

இதற்கு காரணம் 1998 நவம்பர் அறிக்கைக்கு பின்னர் 1.22 கோடி ரூபாய் நீரி அமைப்பில் உள்ள அறிவியலாளர்களுக்கு ஆலோசனைக் கட்டணமாக ஸ்டெர்லைட் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்கப்பட்ட விதிப்படி ஆண்டுக்கு 1,36,850 டன்னை மட்டுமே இந்த ஆலை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், 2003 டிசம்பரில் வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச் சந்தையில் தனது குழும நிறுவனங்களை பட்டியலிட்டபோது ஆண்டுக்கு 1,80,000 டன் உற்பத்தி செய்வதாக தெரிவித்தனர். இது விதியை மீறிய செயல் ஆகும்.

21.9.2004 இல் முனைவர் தியாகராசன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அப்போது அனைத்து விதிகளும் மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது உள்ள உற்பத்தி திறனுக்கு ஏற்ற அளவு கழிவுகளை சுத்திகரிக்கவும், பராமரிக்கவும் தேவையான கட்டமைப்பு இந்த ஆலையில் இல்லை. ஆதலால் இந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் இசைவு அளிக்கக்கூடாது என்றும், முன்னரே இசைவு அளித்திருப்பின் அதை திரும்பப் பெறுமாறும் உச்ச நீதிமன்றத்தின் குழு அறிவுறுத்தியது. ஆனால், மறுநாளே 22.9.2004 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது.

2004 நவம்பரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் உரிமம் அளிக்கப்பட்டுள்ள 70,000 டன்கள் ஆனோடை விட அதிகமாக, அதாவது 1,64,236 டன்கள் ஆனோடை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்துள்ளது.

இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.

ஆனால், 2005 இல் உச்சநீதிமன்ற ஆய்வுக் குழு இதனையெல்லாம் குறைத்து மதிப்பிட்டு அறிக்கை தயார் செய்தது.

அனுமதியின்றி கட்டப்பட்ட கந்தக அமிலப் பிரிவு தனது உற்பத்தியை 2005 இல் துவக்கியது. அனுமதி அளிக்கப்பட்ட 3,71,000 டன் கந்தக அமில உற்பத்தியைவிட அதிகமாக 5,46,647 டன் கந்தக அமிலம் 2004 ஏப்ரல்- 2005 மார்ச் வரை உற்பத்தி செய்யப்பட்டது. இது உரிமம் வழங்கப்பட்டதை விட 47% அதிகம்.

உச்சநீதிமன்றத்தின் முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட பகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆலோசனை கூறியது.

7.4.2005 இல் சுற்றுச்சூழல் அமைச்சக தலைமை இயக்குநரான முனைவர் இந்திராணி சந்திரசேகர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, "உச்ச நீதிமன்ற குழுவின் பரிந்துரைப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கலாம்” என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி, 19.4.2005 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான முனைவர் கிரிஜா வைத்தியநாதன் விதிமுறையை மீறி கட்டப் பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் புதிய பிரிவுகளுக்கு அனுமதி அளித்தார்.

பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டு வந்த நிலையில் 24.7.2010 அன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் ரூ.750 கோடி வரிஏய்ப்பு செய்ததாக கைது செய்யப்பட்டார். அப்போது மீண்டும் துவங்கிய போராட்டம் மனித உரிமை பாதுகாப்பு மையம், நாம் தமிழர் அமைப்பு உள்ளிட்ட வழக்குரைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரதராஜன் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார்.

மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், பேரா.பாத்திமா பாபு முன்னிலையில் தாமிரபரணி பாதுகாப்பு பேரவையின் அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் 26.7.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் 28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை  நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், வழக்கை நடத்தாமல் வேதாந்தா குழுமம் இழுத்தடித்தது. 2012 இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்றன.

தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 2000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தாமிரம் உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுபடுத்துகின்றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை தாமிரம் உள்ளது, ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.

அமெரிக்காவில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளார், டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகள் இவற்றின் மாதிரிகளை, சோதனைச் சாலையில் ஆய்வு செய்து தந்த ஆய்வு அறிக்கையில், ”மண்ணும், நீரும் நச்சுத் தன்மை வாய்ந்த உலோகங்களின் தாக்கம் கொண்டு இருப்பதாகவும், கால்நடைகள் செத்துப்போகும், மனிதர்கள் புற்று நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள், மனிதர்கள் ஆயுட்காலம் இவற்றால் குறையும்” என்று பல்வேறு புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்தான், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2013 மார்ச் 23 அதிகாலையில் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். கதிர்வீச்சு கலந்து இருந்த இந்த நச்சுக் காற்றால், பனித்துளிகள் படர்ந்து இருந்த செடிகள்,மரங்களின் இலைகளும், பூக்களும், நிறம் மாறி, கருகி உதிர்ந்தன.

அதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே மயக்கமடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை விபத்திற்கான பொறுப்பை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 1997 மற்றும் 1998 இரு ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை மொத்தம் ஒன்பது லட்சத்து நாற்பதாயிரம் அபராதம் கட்டியுள்ளனர்.

1994 முதல், 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமுற்று உள்ளனர். 13 பேர் இறந்து உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மர்மமாக இறந்துள்ளனர்.

அமெரிக்காவில், 1890 ஆம் ஆண்டு, வாஷிங்டனுக்கு அருகில் அமைக்கப்பட்ட அசார்கோ (Asarco) எனும் தாமிர ஆலை, மக்கள் எதிர்ப்பால், 1984 இல் மூடப்பட்டது. கொள்ளை இலாபம் இந்த ஆலையில் கிடைக்கிறது என்பதால், அமெரிக்காவிலும், சிலியிலும் பயனற்றது என்று தூக்கி எறியப்பட்ட பழைய இயந்திரங்களையும், 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய தொழில்நுட்பத்தையும் கொண்டு, தமிழ்நாட்டில் இந்த ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணியில் இருந்து முறைகேடாக, திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.

தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது. இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியுள்ளது.

மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை. அதனால் தங்களது உயிர் காக்க, தலைமுறைகள் தழைக்க, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், சத்திஸ்கரில் பால்கோ, ஒரிசாவில் வேதாந்தா அலுமினியம் கோவாவில் சேசா கோவா என்று இந்தியாவையே வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு 2011 ஆம் ஆண்டில் $2.01 மில்லியனும் (சுமார் ரூ 11 கோடி), கடந்த (2010 -2012) மூன்று ஆண்டுகளில் மொத்தம் $5.69 மில்லியனும் (சுமார் ரூ 28 கோடி) நன்கொடையாக கொடுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடந்த 2009-10-ம் ஆண்டில் வேதாந்தாவிடமிருந்து $3.66 மில்லியன் பணத்தை பெற்றிருக்கின்றன இந்திய அரசியல் கட்சிகள்.

ஆளும் பாஜக கட்சிக்கும், எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் வேதாந்தா தொடர்ந்து நன்கொடைகளை வழங்கி வந்திருக்கிறது. இந்துத்துவா குழுக்களால் நடத்தப்படும் லண்டனில் இருக்கும் கிருஷ்ணா அவந்தி தொடக்கப் பள்ளிக்கும் வேதாந்தா நிதி அளிக்கிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநராக கடந்த 2004 ஆம் ஆண்டு வரை ப.சிதம்பரம் பதவி வகித்து வந்தார். அதனால் பெரிய அளவில் அரசியல் நெருக்கடி ஏதுமின்றி தொடர்ந்து தப்பித்து வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை.

எனினும் மக்கள் மன்றத்தில் தீர்ப்புகள் எழுதப்படும் போது பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

நன்றி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.