29/04/2019

சேலம் மாநகரில் ஒரே நாளில் 35 ரவுடிகள் அதிரடி கைது...


சேலம் மாநகரில் சமீபகாலமாக வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ரவுடிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மாலை நேரங்களில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ரவுடிகள் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் வந்தன.

இதனால் அவர்களின் அட்டகாசத்தை தடுக்கவும், பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்கும் வகையிலும் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், குற்ற பின்னணியில் உள்ள ரவுடிகளை உடனடியாக கைது செய்ய அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் உத்தரவிட்டார்.

இந்தநிலையில், சேலம் மாநகரில் நேற்று ஒரேநாளில் 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதாவது, சேலம் மாநகரில் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி குற்ற செயலில் ஈடுபட்டு வரும் ரவுடிகளின் பட்டியலை அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தயாரித்து அவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பல்லுகுமார் (வயது 35), ஜெகதீஸ்வரன் (27), பூபாலன் (24), விக்கி என்கிற விக்னேஸ்வரன் (24), ஜெயக்குமார் (27), செல்வம் (24), கணேசன் (25) உள்பட 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதேபோல், சூரமங்கலத்தில் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த சரவணன், கந்தம்பட்டியை சேர்ந்த சபரிநாதன் ஆகிய 2 பேரும், செவ்வாய்பேட்டையில் மாதேஸ்வரன், கோவிந்தராஜ் ஆகிய 2 பேரும், அஸ்தம்பட்டியில் 3 பேரும், வீராணத்தில் 3 பேரும், கன்னங்குறிச்சியில் 4 பேரும், அழகாபுரத்தில் 2 பேரும், பள்ளப்பட்டியில் 2 பேரும், அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டியில் தலா ஒருவர் வீதம் மொத்தம் சேலம் மாநகரில் நேற்று ஒரேநாளில் 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள ரவுடிகள் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.