17/04/2019

குமரிக்கண்டம் தாண்டி இராவணன் ஆண்ட இலங்கை...


உண்மையில் இராவணன் ஆண்ட இலங்கை தற்போதைய இலங்கைத் தீவு கிடையாது. இதைக் கம்பரே கூறுகிறார்.

இராமாயணத்தில் சீதையைத் தேடி அனுமன் தென்திசையில் செல்கிறான்.
அகத்தியர் தமிழ்ச்சங்கம் அமைத்த பொதிகை மலையில் பொருநை (தாமிரபரணி) ஆறு ஓடுவதையும்
அதற்கடுத்து மயேந்திரமலை (கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தற்போதைய மகேந்திரகிரி) இருப்பது குறிப்பிடப்படுகிறது.

கிட்கிந்தா காண்டம் நாடவிட்ட படலத்தில் இது வருகிறது..

தென்தமிழ் நாட்டு அகன்பொதியின் "திருமுனிவன் தமிழ்ச்சங்கம்..."
"பொருநையெனும் திருநதிபின்..."
"மயேந்திரமா நெடுவரையும்..."

அங்கேயிருந்து நூறு ஓசனை (யோசனை) தொலைவில் நடுக்கடலில் இலங்கை இருக்கிறது என்றும் வருகிறது.

இது கிட்கிந்தா காண்டம்,
சம்பாதிப் படலத்தில்,
"ஓசனை ஒருநூறு கொண்டால் ஒலிகடல் இலங்கை..."
என்றும்,

கிட்கிந்தா காண்டம் மயேந்திரப் படலத்தில்
"ஓசனை ஒன்று நூறும்...."
என்றும் வருகிறது.

யோசனை என்றால் எவ்வளவு?

பொறிஞர் கொடுமுடி சண்முகத்தின் "பழந்தமிழர் பொறியியல் நுட்பத் திறன்" என்ற புத்தகத்தில் பழந்தமிழ் அளவீடுகளுக்கான தற்போதைய அளவுகள் தரப்பட்டுள்ளன. அவை...

1 விரல் = 3.48958 cm
6 விரல் = 1 சாண் = 21cm
2 சாண் = 1 முழம் = 42 cm
2 முழம் = 1 கோல் = 84 cm
4 கோல் = 1 தண்டம் = 3.35 m
500 தண்டம் = 1 கூப்பீடு= 1.675Km
4 கூப்பீடு = 1 காதம் = 6.7 Km
4 காதம் = 1 யோசனை = 26.82 Km

எனில் 100 யோசனை என்பது 2682 கி.மீ. தொலைவு ஆகும்.

அதாவது கிட்டத்தட்ட காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி (2750 கி.மீ, வான்வழி) இருக்கும் தூரம் ஆகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.