திருப்பூர் கல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 43). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ரேவதி(38). இந்த நிலையில் இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் மாதாந்திர சீட்டு நடத்தி வந்தனர். கடந்த பல வருடங்களாக சீட்டு நடத்தி வந்ததால் இதை நம்பிய 100-க்கும் மேற்பட்டவர்கள் இவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் பல லட்சம் வரையில் சீட்டில் இணைந்து பணம் கட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு சீட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலருக்கு சீட்டு காலம் முடிந்த பின்னரும் அவர்களுக்கான தொகையை தம்பதியினரால் வழங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. சீட்டுதாரர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே 3 மாதங்களில் மொத்த பணத்தையும் தந்து விடுவதாக அவர்களுக்கு உறுதி கூறியுள்ளனர்.
ஆனால் இதுவரை அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் இணைந்து, தம்பதியினர் தங்களிடம் இருந்து பல லட்சம் ரூபாயை சீட்டு நடத்தி மோசடி செய்ததாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின்படி லட்சுமணன் மற்றும் அவரது மனைவி ரேவதி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நேற்று கைது செய்தனர். இந்த தம்பதியினர் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளனரா? என்பது குறித்தும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.