திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த ஆவூர் பெரிய ஏரியில் இன்று காலை கரும்புகை வந்தது. இதையறிந்த அப்பகுதியினர் சிலர் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது எரிந்த நிலையில் சிறுவன் பிணமாக கிடந்தான். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் வேட்டவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நாகராஜன், மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
சிறுவனுக்கு 12 வயது இருக்கும். அவனின் தலை, முகம், உடல், கால்கள் கருகிய நிலையில் கிடந்தது. சிறுவன் மீதும் அவனை சுற்றியும் கோழிகளின் இறகு கழிவுகள் கொட்டப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டிருந்தது. பிணம் எரித்திருந்த சிறிது தூரத்தில் மண்ணெண்ணை கேன் வீசப்பட்டு கிடந்தது. எனவே சிறுவனை யாரோ எரித்து கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.
சம்பவ இடத்திற்கு எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி, கலால் டி.எஸ்.பி. பழனி, திருவண்ணாமலை டி.எஸ்.பி. அண்ணாதுரை ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினர்.
பிணத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுவன் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா அல்லது கொலை செய்து மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்பட்டாரா? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி வந்து ரேகைகளை பதிவு செய்தார்.
திருவண்ணாமலையில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் பெசி, பிணத்தை சுற்றி சுற்றி வந்தது. பின்னர் நடுப்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையையொட்டி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கல்வி பிடிக்கவில்லை. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.