07/04/2019

ஆதிச்சநல்லூர் சந்தேகங்கள்...


ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பில் அமைந்த இடுகாட்டில் கிடைத்த பொருள்கள் சுமார் 100 ஆண்டுகளாக 4 கட்டங்களாக அகழப்பட்டு, ஆய்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தன.

எழுத்தாளர் காமராஜ் அந்த ஆய்வு முடிவுகளை வெளியிடுமாறு வழக்குத் தொடுத்தார். நேற்று இரண்டு சாம்பிள் முடிவுகளைச் சொல்லி தமிழர் வயிற்றில் பால் வார்த்தார்கள். ஆனால்... அதன் பின்னால் பல கேள்விகள் எழுகின்றன.
ஆதிச்சநல்லூர் புதைபொருளில் ஒன்று 905 ஆண்டுகள் பழைமையானது என்பதை ஃபுளோரிடாவுக்கு அனுப்பி நிரூபித்திருக்கிறார்கள். 'பாரத நாடு பழம் பெரும் நாடு' ஆயினும் பழம்பொருளை ஆராய ஃபுளோரிடாவுக்குத்தான் போக வேண்டுமா? இது முதல் கேள்வி.

இரண்டாவது, 1920 முதல் ஆதிச்சநல்லூரில் புதைபொருள் ஆவணங்கள் திரட்டப்பட்டன. சுமார் 8,000 பொருள்கள் எடுக்கப்பட்டதாகச் சொன்னார்கள். அதில் இரண்டு பொருளை மட்டும் தேர்வு செய்து அதன் வயதைக் குறிப்பிடுவது ஏன்?

மூன்றாவது, அங்கிருந்த எழுத்துகள் சுமார் 2,300 ஆண்டுகள் பழைய பிராமி எனச் சொல்லியிருக்கிறார்கள். கீழடி, ஆதிச்சநல்லூர் எல்லா இடத்திலும் காணக்கிடைக்கும் எழுத்துக்கள் 2,300 ஆண்டுகளுக்கு முட்பட்டவை என நிறுத்திவிடுகிறார்கள்.

சமஸ்கிருத இலக்கணத்தை பாமினி 2,400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கினார் என்பது பலகாலமாகச் சொல்லப்பட்டு வரும் செய்தி. தமிழ் எழுத்துக்கள் அதற்கு 100 வயசு கம்மி என்பதைத் தொடர்ந்து சொல்வது நோக்கம். கடந்த 30 ஆண்டுகளாக நானறிந்த செய்தியிலே... எங்கு பானை கிடைத்தாலும் 2000 ஆண்டுகளுக்கு முட்பட்ட பானை கண்டுபிடிப்பு என்றுதான் சொல்வார்கள். எங்கு கல்வெட்டு கிடைத்தாலும் அதே கதைதான். அதற்கே ஒருவர் தொல்லியல் துறை மீது கேஸ் போட்டு இவற்றைச் சொல்ல வைக்க வேண்டியிருக்கிறது.

செம்பியூர் கண்டிகையில் கிடைத்த தமிழ் எழுத்துகள் சிந்துவெளி எழுத்து வகையைச் சார்ந்தது என நிரூபிக்கப்பட்டும் சிந்துவெளியோடு தமிழர்களைத் தொடர்புபடுத்துவதைத் தவிர்க்கும் நோக்கமும் இதில் இருக்கிறது.

சிந்துவெளி நாகரிகம் கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முந்தையது. ஆதிச்ச நல்லூர் நாகரிகமும் அதே காலகட்டத்தில் தெற்கில் இருந்த நாகரிகம். அது நிரூபணம் ஆவது வேத மரபுக்குச் சிக்கலாகிவிடும். இந்தியாவின் தொன்மையை தமிழர் வரலாற்றில் இருந்து  ஆரம்பிக்க வேண்டியிருக்கும். இப்போது கவனமாக  கி.மு.905 ஆவணத்தை வெளியிடுகிறார்கள்.
இத்தனை கோடி பழைய ஆவணங்கள் உள்ள நாட்டில் அதை ஆய்வு செய்வதற்கான ஆராய்ச்சி மையங்களைத் தொடங்குவதில் என்ன தயக்கம்? அதைத் தொடங்கினால் தமிழர் பெருமை உலகுக்குத் தெரிந்துவிடும் என்ற தயக்கம்தான் காரணம்.

100 வருசத்துக்கு முன் தோண்டியெடுக்கப்பட்ட ஆதிச்ச நல்லூர் பானை ஒன்றுக்கு இன்றுதான் விடிவுகாலம் கிடைத்திருக்கிறது. நாம் சட்டப்படி போராட வேண்டிய விவகாரம் நிறைய இருக்கின்றன. சட்டப்படி போராடி வெல்வோம்.

-  தமிழ்மகன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.