18/04/2019

விஷமாய் மாறிவரும் கேன் தண்ணீர். அபாய எச்சரிக்கை...


இன்று ஒரு டீ, காபியின் விலையை விட, ஒரு கேன் தண்ணீரின் விலை என்பது அதிகம். இதில் இருந்தே வரும்காலங்களில் நாம் எவ்வளவு பெரிய பிரச்னையை சந்திக்கப் போகிறோம் என்பதை புரிந்துக்கொள்ளலாம். இதைவிடவும், இவ்வாறு விலை கொடுத்து வாங்கும் குடிநீர் தற்போது மனித உயிர்களுக்கு மிகப்பெரும் ஆபத்தாகி வருகிறது என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? நாள்கணக்கில் அடைத்துவைத்து விற்கப்படும் பாக்கெட், பாட்டில், கேன் தண்ணீர் விஷமாகும் அபாயம், மோசடிகளை அம்பலப்படுத்துகிறது இந்தபதிவு.

உங்கள் கடைக்காரர் விற்கும் கேன் தண்ணீர் தரமானதா ? எப்படி கண்டுபிடிப்பது ?

சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 75 லட்சம் லிட்டர் கேன் தண்ணீர் விற்கப்படுகிறது. ஆனால் கேன்களில் அடைத்து விற்கப்படும் 60 சதவிகிதம் தண்ணீர் தரமற்று இருப்பதாக நுகர்வோர் அமைப்பினர் கூறுகின்றனர். மார்க்கர் பேனாவை வாங்கியவுடன் அது எழுதுகிறதா என்று பார்க்கும் நாம் அதில் எக்ஸ்பைரி டேட் குறிப்பிடவில்லையே என்று ஒரு நாளும் கவலைபட்டதில்லை.

குறிப்பாக நமக்கு கிடைக்கும் கேன் தண்ணீரானது பெயரளவில் மட்டுமே மினரல் வாட்டர், உண்மையில் கடல் நீரையோ, ஆழ்குழாய் நீரையோ சுத்திகரிப்பு செய்தே கேன்களிள் மூலம் வழங்கப்படுகிறது. பொதுவாக இது போன்ற கேன் வாட்டர்கள் இந்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும், Bureau of Indian Standards அமைப்பால் ISI mark பெற்றிருக்க வேண்டும்.

மிகமுக்கியமாக, சான்றிதழ் பெற சில வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு குடிநீர் நிறுவனத்திற்கும் அங்கீகரிக்கப்பட்ட குடிநீர் பரிசோதனை கூடம் அவசியம். அதில் பரிசோதனை செய்த தண்ணீர் மாதிரிகளை இந்திய தர நிர்ணய அமைப்புக்கு அனுப்பி குடிக்கத் தகுந்த தண்ணீர் என்று அனுமதி பெற வேண்டும். அதன் பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

Bureau of Indian Standards அமைப்பு தண்ணீர் நிறுவனங்களில் கச்சா நீரை மாதம் இரு முறை சோதனை செய்யும். குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் பாட்டிலில் அல்லது கேன்களில் தொழில் நுட்ப விவரங்கள், தயாரிக்கப்பட்ட தேதி, பேட்ச் எண், காலாவதி தேதி ஆகியவற்றை தெளிவாக எழுத வேண்டும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இவற்றை எல்லாம் செய்வதில்லை, அப்படியே சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் கூட கேன் தண்ணீரை தயாரிக்கும் போது பல நேரங்களில் முறையான வழிகளை பின்பற்றுவதில்லை.

கேன் தண்ணீர் இப்படியா சுத்திகரிப்படுகிறது ?

தண்ணீர் நிறுவனங்கள் குடிநீரை வடிகட்டி சுத்திகரிப்பதில் சில விதிமுறைகளை பின்பற்றப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத தண்ணீரை கடினத்தன்மையற்றதாக மாற்ற டோஸிங் மெஷின் பயன்படுத்தபடுகிறது. அடுத்து மண் மற்றும் கார்பன் மூலம் வடி கட்ட வேண்டும். பிறகு நீரில் உள்ள தூசி மற்றும் அசுத்தங்களை அகற்ற மைக்கான் காண்டிரேஜ் முறை பின்பற்றப்படும். இதன்பின் ஆர்.ஓ மூலம் தண்ணீரில் இருக்கும் தேவையற்ற உப்புக்கள் நீக்கப்படும். இறுதியாக அல்ட்ரா கதிர்களை பயன்படுத்தி தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும். கொடுமை என்னவென்றால் இந்த முறைகளை பல தண்ணீர் நிறுவனங்கள் முறையாக கடைபிடிப்பதில்லை.

உங்கள் தண்ணீர் கேன் எப்படி இருக்கும்?

கடைக்காரர் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கேன்களை மாற்ற வேண்டும். ஆனால் நமக்கு நன்றாகவே தெரியும் ஒவ்வொரு கடையிலும் தண்ணீர் கேன் பல வருடங்களாக அப்படியே இருக்குமென்று. இதனால் பாக்டீரியாக்கள் உருவாகும், இப்படிப்பட்ட கேன்களில் தண்ணீர் இருந்தால் இரண்டு நாட்களில் பாசி பிடித்து விடும். அடுத்த சில தினங்களில் புழு பூச்சிகள் உருவாகும். சோகம் என்னவென்றால் இப்படிப்பட்ட தண்ணீரையே பெரும்பாலான மக்கள் விலை கொடுத்து வாங்குகின்றனர்.

இப்படிப்பட்ட தண்ணீர் கேன்களால் ஏற்படும் ஆபத்துகள்...

ஒரு லிட்டர் தண்ணீரில் மனித உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் தாதுக்கள் கிடைக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 500 மில்லி கிராம் வரை அந்த தண்ணீரில் உப்பு இருக்க வேண்டும். ஆனால் சுத்திகரிக்கப்படுவதால் முதல் 10 மில்லி கிராம் உப்புதான் கிடைக்கிறது. இதனால் உடம்புக்கு எந்தவித நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்காமல் போய்விடுகிறது. மாறாக நோய் உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதைவிடவும் ஆபத்தானது வயிற்றுப்போக்கு, சுவாச நோய், எலும்பு நோய், சிறுநீரக நோய், தோல் புற்று நோய்கள் உருவாகிறது.

கேன் தண்ணீர் நிறுவனங்களின் மோசடிகள்...

முறையான அனுமதி இல்லாமல் சுமார் 450க்கும் மேற்பட்ட போலி தண்ணீர் நிறுவனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சென்னையின் 10 கேன் தண்ணீர் நிறுவனங்களின், 20லிட்டர் குடிநீர் கேன்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவை அனைத்துமே குடிக்க தகுதியில்லாத நீர் என்ற உண்மை தெரிய வந்தது மட்டுமல்லாமல், அந்த நீரில் கொடிய நச்சுத்தன்மையும், மனித மலத்தில் உற்பத்தியாகும் ஈகோலி, மற்றும் கோலி பார்ம் போன்ற பாக்டீரியாக்களும் இருந்ததாக நுகர்வோர் அமைப்பினர் கூறுகின்றனர். இதுமட்டுமல்லாது மூலிகை நீர் என்று மக்களை ஏமாற்றிய நிறுவனத்தின் மீதும் நஷ்ட ஈடு வழங்க வேண்டி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தெரிந்த மோசடிகள் இவை, நமக்கு தெரியாமல் இன்னும் எவ்வளவோ நடக்கிறது. உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையான தண்ணீரில் இப்படியான மோசடிகளை தடுக்க அரசால் மட்டுமே முடியும்.

கேன் தண்ணீர் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை...

ISI மற்றும் தேதி அச்சிடாமல் வெளிவரும் தண்ணீர் கேன்களை வாங்கக் கூடாது.
அடைக்கப்பட்ட ஒரு தண்ணீர் கேனின் ஆயுட்காலம் 30 நாட்கள் மட்டுமே.

இனி என்ன செய்ய போகிறோம் ?

நமது குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் அளவு ஆறு, குளம், ஏரி எங்கும் நீர்வரப்பு இல்லை. இருக்கும் நீர்நிலைகளும் அழிந்து வருகிறது. இதுபோதாமல், மக்களின் தவறான நடவடிக்கைகளால் நிலத்தடி நீரின் அளவும் குறைந்து வருகிறது. போதிய நீர் இல்லாததால் தரமான குடிநீருக்காக கேன் தண்ணீரையே நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வீடுகளில் ஆழ்குழாய் கிணற்றின் மூலம் பெறப்படும் நீரும் தற்போது வறட்சி காரணமாக அதன் தன்மையை இழந்து விஷமாக மாறி வருகிறது. நிலத்தடி நீரில் க்ளோரைடு, நைட்ரேட், அயர்ன், ப்ளோரைடு பேன்றவை இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இதனால்தான் சென்னையின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் செம்மண்ணாகவும், குடிப்பதற்கு தகுதியற்ற நீராகவும் இருக்கிறது.

இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு மழை நீர் சேகரிப்புத்தான். மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டும். அப்போது தான் நீரின் தன்மை மாற்றம் பெறும். அதிலும் ஆறு, குளம், குட்டைகளில் இருந்து கிடைக்கும் நீரில் ப்ளோரைடு இருக்காது என்பதால் அதனை அருந்துவதுதான் பாதுகாப்பானது என்கின்றனர் ஆய்வாளர்கள். 1000 500 அடி ஆழ்குழாயில் இருந்து எடுக்கப்படும் நிலத்தடி நீரைக்காட்டிலும், நில நீர்மட்டத்தில் இருந்து கிடைக்கும் நீரே சிறந்தது என்பதே உண்மை. மினரல் வாட்டர் என்ற பெயரில் கேன் கேனாக வாங்கும் நமக்கு, இயற்கையான நீர்நிலைகளில் இருக்கும் நீரில்தான் மினரல்ஸ் இருக்கிறது என்ற உண்மை எப்போது புரியும்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.