29/06/2020

முட்டாள்தனமான முரட்டுக் காவலர்கள் சிலருக்கு முன்னாள் DSP-யின் சில அறிவுரைகள...


(1) கோவிட்-19 நம் நாட்டை, தாக்க ஆரம்பித்த நாள் முதல் தமிழ் நாடு காவல் துறை, நம் நாட்டு மக்களுக்காக   அல்லும் பகலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து செய்த சேவையால் ஈட்டிய நற்பெயர் அனைத்தும், சாத்தான்குளம் காவல் நிலைய சம்பவம்
 ஒன்று நம் மொத்த காவல் துறையையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டது, என்று சொன்னால் அது மிகையில்லை.

(2) அதற்குக் காரணம், காவல் நிலையத்தில் சட்டத்தை செயல் படுத்தும் இடத்தில் உள்ள ஆய்வாளர் முதல்- இரண்டாம் நிலைக் காவலர்கள் வரை உள்ள அனைவரும்,  தங்களைத் தாங்களே சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவும்,
ஏதோ அப்பகுதி சமஸ்தானத்தின் பாளையக்கரர்களாகவும் பாவித்து, இறுமாப்பாக  எண்ணிக்கொள்ளும் ”ஈகோ” (EGO) நிலையின் காரணமாக, தங்கள் சரகத்தில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களின் சுட்டு விரலுக்கு அடிபணிய வேண்டும், தன் கண்ஜாடைக்கு கட்டுப்பட வேண்டும்,  என்ற மன்னர் கால மமதை கொண்டிருக்கும் போக்கு
 மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல;  அந்த மன்னர்கால மமதையான போக்கு உடனடியாக களையப்பட வேண்டியது என்பதை உணரவேண்டும்.

(3) ஜனநாயக நாட்டில், காவல்துறை என்பது, ஒரு CIVIL AUTHORITY (சமூக அதிகார அமைப்பு) மட்டுமே என்பதையும், நாம் ஒரு ராணுவ அமைப்போ, அல்லது துணை ராணுவ அமைப்போ அல்ல என்பதையும் காவல்நிலைய பணியாளர்கள் அனைவரும், கண்டிப்பாக  உணர வேண்டும்.

(4) காவல் நிலையத்தில் நீங்கள் விசாரிக்கும் ஒவ்வொரு வழக்கு விசாரணைக்கும் நீங்கள்தான் மாஸ்டர் என்றோ, நீங்கள் எழுதுவதே இறுதிமுடிவு என்றோ, உங்கள் முடிவுதான் சட்டம் என்றோ,  இறுமாப்புடன் நடந்து கொள்ளாதீர்கள். ஏனெனில், உங்கள் முடிவு தவறாக இருக்கும் பட்சத்தில், வேறு ஒரு புலன் விசாரணை ஏஜன்ஸி அதே வழக்கை விசாரணைக்கு எடுத்து, தவறாக முடிவு செய்த உங்களையும், அதே வழக்கில் கூடுதல் குற்றவாளிகளாகச் சேர்க்கக் கூடிய சூழ்நிலைகளும் உருவாகும் என்பதை உணர்ந்து கவனமாகச் செயல் படவும்..

(5) காவல்நிலையத்தில் பணியாற்றும் ஒவ்வொரு காவலரும், ஒவ்வொரு சார்நிலை அலுவலர்களும் தங்களின் நிலை என்ன? தங்களின் உயரம் என்ன? என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும். காவல் நிலையத்திற்கு ஒரு பிரச்சினைக்குறிய வழக்கு வருகிறது என்றால், உடனடியாக உங்களுடைய உயர் அதிகாரிகளுக்கு அதைத் தெரிவித்து  அவ்வழக்கை எப்படிக் கையாளுவது என்று கேட்டுத்தெரிந்து செயல் படவேண்டும். தான்-தோன்றித்தனமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று  செயல் படக்கூடாது.

(6) காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் செய்யும் தவறுகள் பூதாகரமாக உருமாறி, பின்னர்  பொதுமக்களால் விமர்சிக்கப்படும் விசுவரூபப் பிரச்சினையாக மாறும்பட்சத்தில்,  பொதுமக்களின் டார்கெட் (TARGET) காவல் நிலையத்தில் பணிபுரியும் நீங்கள் மட்டும்அல்ல; நீங்கள் சார்ந்த  மொத்த தமிழ்நாடு காவல்துறையும், அரசும்,    பொதுமக்களின் மொத்த டார்கெட்டாக (TARGET) மாறிவிடும் என்பதை அறியவும்.

எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவலரின் தவறான செய்கையால், ஒரு மாநிலத்தின் காவல் துறைக்கும், அரசுக்கும்,  களங்கம் ஏற்படுகிறது என்றால், தவறு செய்த அக்காவலர் கண்டிப்பாக தண்டிக்கபட வேண்டும்.
 
(7) காவல்நிலையத்தில் உள்ள ஒவ்வொரு காவலரும், அரசு அமைப்புக்களின் HIERARCHIAL SYSTEM-( அரசு அமைப்புக்களின் பணிப்படி நிலை)-என்பதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். காவல் நிலையத்திற்கு, ஒரு ஜூனியர்  நிலை காவலர் ஒருவரை அழைத்து வந்தால், அது குறித்து, காவல் நிலைய அதிகாரியாக (SHO) பொறுப்பில் உள்ளவர் தலையிட்டு விசாரித்து உண்மை நிலையைக் கண்டறிந்து, ஜூனியர் நிலை அலுவலர் அந்த வெளி நபரை வேண்டுமென்றோ அல்லது தனிப்பட்ட காரணத்திற்காகவோ கொண்டு வந்ததாகத் தெரிந்தால், உடனடியாக அப்படி கொண்டு வரப்பட்டவரை சாட்சிகள் முன்னிலையில் காவல் நிலையத்திலிருந்து அனுப்பி வைத்து விட்டு , அது குறித்த விபரத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதைவிடுத்து, கொண்டு வந்தவர் தன்னுடன் பணிபுரியும் காவலர் என்பதால், அவருடன் சேர்ந்து கொண்டு, அக்காவலரின் தவறுக்கு துணை போகக் கூடாது.

(8) காவல் நிலையத்தில் ஒரு கைதியை விசாரிக்கும் சூழ்நிலை ஏற்படும் போது, விசாரிக்கும் பொறுப்பில் உள்ள அலுவலர்களைத்தவிர, காவல்நிலைய வெயிட்டிங்கில் இருப்பவர்கள், இதர பணியில் உள்ளவர்கள் எவரும் அக்கைதியிடம் ஆளாளுக்குச் சென்று விசாரிக்கிக்கும் தொணியில் அத்து மீறல் செய்யக்கூடாது. அப்படி, சம்பந்தமில்லாத காவலர்கள் கைதியிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், அந்த விசாரணை அதிகாரி, மனம்போனபோக்கில் ”தர்ம அடி” என்ற பெயரில் தவறிழைக்கும் காவலர்கள் மீது உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும்.

(9) கைதிகளை அணுகும் போது, ஒவ்வொரு காவலரும் அக்கைதி செய்த குற்றத்தின் தன்மை என்ன என்பதையும், அக்குற்றத்தின் வீரியம் என்ன என்பதையும் புரிந்து கொண்டு, அதற்கேற்றவகையில் அணுக வேண்டும். NUISANCE வழக்குகளையும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடுங்குற்ற வழக்குகளையும்- ஒன்றாக பாவிக்கக் கூடாது இரண்டு வகையான வழக்குகளின் GRAVITY பற்றிய வித்தியாசத்தை உணர வேண்டும். 

(10) இதே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், 154 கு.வி.மு.ச. பிரகாரம் கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்யப்படவேண்டிய எத்தனையோ வாரண்ட்-வழக்குகள்  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமல், அம்மனுக்கள்  குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுக் கிடக்கின்ற போது,  சாதாரண சம்மன்ஸ்-வழக்குகளுக்காக, அதுவும் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே அளித்த புகாரில் பதிவு செய்த  ஒரு சாதாரண சம்மன்ஸ் வழக்கில் , இரவோடு இரவாக ஜெயராஜ், மற்றும் ஃபெனிக்ஸ் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து இரவோடு இரவாக ரிமாண்டுக்கு அனுப்பவேண்டிய அவசியமென்ன..?

(11)  காவல் நிலயத்தில் கைதிகளை விசாரிக்கும் சூழ்நிலைகளில், விசாரணையில் ஈடுபடும் காவலர்கள் எவரேனும் கைதியிடம் கூடுதலாக அத்துமீறும் நிலை ஏற்பட்டால், மற்ற காவலர்கள் உடனே தலையிட்டு அத்து மீறும் காவலர்களை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், அந்தக் கைதிக்கு விசாரணை செய்தவர்களால் ஒரு பிரச்சினை என்றால், விசாரணை என்ற பெயரில் அத்து மீறிய காவலர்களுடன், அதே காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவலர்களையும் சேர்த்துத்தான் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை அறியவும்.

மேலும், காவல் நிலையத்தில் தனி மனிதனாக அடைபட்டுள்ள ஒருவனுக்கு எதிராக, காவல்நிலையத்தில் ஆஜரில் உள்ள காவலர்கள் , சார் நிலை அலுவலர்கள்  அனைவரும்   மொத்தமாக எதிர் முகாம் போல் அமைத்துச்  செயல் படுவது , அத்தனிமனிதனை உளவியல் ரீதியாகப் பாதிக்கும் என்பதை உணரவும்.

(12)“Dissolute Terror Officers would one day meet the Terror-End."- என்று காவல்துறையில் கூறுவதுண்டு அதாவது, காவல்துறையில் சேந்தவுடன், சினிமாவில் வருவது போல்,  தன்னை அப்பகுதி மக்கள் TERROR OFFICER- என்ற அடைமொழியுடன் அழைக்கவேண்டும் என்ற அற்பத்தனமான ஆசையில் முரட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் தடாலடித்தனமாக செயல்பட்டு, அந்த தடாலடிக் காவலர்கள், ஒருகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் வெறுக்கும் வெகுஜனவிரோதியாக மாறிவிடுகிறார்கள், என்பதை புதிதாக காவல் பணிக்கு வருபவர்கள் உணர வேண்டும்

 மாறாக ,தாங்கள் காவல் துறைக்கு பணியமர்த்தப் பட்டதன் முக்கிய நோக்கம், சமூகத்தையும், பொதுமக்களையும் பாதுகாப்பதற்கும், குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கும் என்பதை உணரவேண்டும்.  . 

🙏 நன்றி🙏
க.மாணிக்கவாசகம். D.S.P. Retd...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.