டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண வசூல், சாலை வரி உயர்வு, ஆகியவற்றை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (22ஆம் தேதி) லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெகன் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’கரோனா ஊரடங்கு காலத்திலும் டீசல் விலை 15 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் லாரிகளுக்கு அதிகப்படியான சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. 15 சதவீதத்திற்கும் மேலாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது லாரி தொழிலை நஷ்டம் அடைய செய்துள்ளது.
இது தவிர சாலை வரி உயர்வு, லாரிகளுக்கான மாதத் தவணைகள் உள்ளிட்டவை லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது. இதுகுறித்து பலமுறை அரசுக்கு மனு அனுப்பி இருந்தோம். ஆனால் இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நாளை 22ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமாக லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது..
நாளை நடைபெறும் வேலைநிறுத்தத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் லாரிகள் பங்கேற்கிறது. இதனால் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லும் சரக்குகள் தேக்கமடையும், உப்பு உற்பத்தி முதலான பணிகளும் பாதிக்கும். ஆகவே அரசு எங்களின் கோரிக்கைகளை ஏற்று காலாவதியான சுங்கச் சாவடிகளை மூடவேண்டும், லாரிகளுக்கான மாத தவனை காலத்தை மேலும் 6 மாதம் நீடித்து தர வேண்டும். டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.