கோவை: வீண் பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்து போலீசாருக்கான 'பாடி ஓன் கேமரா திட்டம்' மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
வாகன தணிக்கையின் போது, போக்குவரத்துக் போலீசார் வரம்பு மீறுவதாகவும், பிரச்னையில் ஈடுபடுவதாகவும், அதேபோல வாகன ஓட்டிகள் போலீசாருடன் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால், பணியில் உள்ள போக்குவரத்து போலீஸ் மற்றும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் வகையில், 'பாடி ஓன் கேமிரா' திட்டம் அமல்படுத்தப்பட்டது.
போலீசாரின் சட்டையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் இருதரப்பையும் கண்காணிக்க முடியும். போலீசார், வாகன ஓட்டிகள் இடையிலான தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்க முடியும். பல்வேறு காரணங்களால், இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் போலீசார் கண்காணிப்பு கேமரா பொருத்தி பணியில் ஈடுபட வேண்டும் என்ற மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதையடுத்து தற்போது இந்நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறுகையில், ''இதன் மூலமாக போலீசார், வாகன ஓட்டிகள் இடையே பிரச்னை எழும் போது யார் மீது தவறு உள்ளது என்பதை எளிதில் கண்டறிய முடியும். மேலும், இருதரப்பினரும் தாங்கள் கண்காணிக்கப்படுவதை உணர்வதால், எச்சரிக்கையுடன் நடந்து கொள்வர். கோவை போக்குவரத்து போலீசாருக்கு, 69 பாடி ஓன் கேமிராக்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து போலீசார் அவற்றை அணிந்து பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.