இது News18 எனும் ஒரு சேனலோடு சுருக்கி பார்க்கவேண்டிய விசயமல்ல. 2014 முதலே இந்த நெருக்கடியை எல்லா ஊடகங்களும் சந்திக்கிறது. பாராளுமன்ற தேர்தலின்போது ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதுபோல் தமிழக தேர்தலுக்கான நெருக்கடியை இப்போதே தருவதாக உணர்கிறேன்.
இது என்னோடு முடிந்துவிடும் பிரச்சினை அல்ல. எனக்கு பிறகும் சில முக்கியமானவர்களை ஊடகத்துறையில் இருந்து விரட்ட முழு முனைப்போடு செயல்படுகிறார்கள்.
எனக்கும் கறுப்பர் கூட்டத்திற்கும் தொடர்பு உள்ளது என கூறுபவர்கள் ஒரே ஒரு ஆதாரத்தை கொடுத்தால் நான் ஊடகத்தை விட்டும், சங்கத்தை விட்டும் சென்றுவிடுகிறேன் என சவால் விட்டும் இதுவரை ஒருவர்கூட அதற்கு ஆதாரம் தரவில்லை.
என் பக்கம்தான் நியாயம் உள்ளது என பாஜகவை சார்ந்த அனைவருக்கும் தெரியும். நாராயணன், ராம சுப்ரமணியன் ஆகிய இருவர்களை தவிர வேறு யாரும் எனக்கு ஆதரவு தரவில்லை. எச்.ராஜாவிடம் நேரடியாக போனில் பேசியும் அவர் என்ன நோக்கத்தில் என்னை குறித்து ட்வீட் செய்தார் என தெரியவில்லை.
சென்னை மாநகர காவல் ஆணையரிடம் என்மீது அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என புகார் கொடுத்த அதே தினம்தான் பாஜகவின் சார்பில் கறுப்பர் கூட்டம் மீது நடவடிக்கை எடுக்ககூறியும் புகார் கொடுத்தார்கள். அவர்கள் புகாரை ஏற்று அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்த காவல்துறை ஏன் என் சம்பந்தமாக எந்த நகர்வையும் எடுக்கவில்லை என்பது விளங்கவில்லை. குறைந்தபட்சம் மாரிதாஸை கூட அழைத்து விசாரிக்கவில்லை.
ஆனால் ஒன்று நண்பர்களே. வட இந்தியாவிற்கும் தென் இந்தியாவிற்கும் அரசியலில் வேறுபாடுகள் இருப்பது போல் தென்னிந்தியாவில் தமிழகத்திற்கு என ஒரு சிறப்பம்சம் உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மத சகிப்புத்தன்மையும், சகோதரத்துவமும் தலைத்தோங்குகிறது.
நம் மாநிலத்தில் மட்டும்தான் இஸ்லாமியனான ஒருவனுக்கு முஸ்லிம் என்ற வட்டத்தை தாண்டி அதிகமான பிறமத நண்பர்கள் உள்ளார்கள். அவர்களை நெருங்கிய நண்பர்களாகவும் ஏற்று கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட தமிழகத்தில் மத மோதல்களை விளைவிக்க முயல்பவர்களின் செயல்களை சாதாரணமாக கடந்து செல்வது பிற்காலத்தில் ஆபத்தானது.
எனக்கு ஆதரவாக நின்று குரல் கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. அதிலும் முஸ்லிம் அல்லாத நண்பர்கள் என்மீது நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுத்தது பெரு மகிழ்ச்சி. தொடர்ந்து போராடி இந்த ஊடகத்துறையில் குரலற்றவர்களின் குரலாய் நிச்சயம் பயணிப்பேன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.