புகாரளித்து 20 நாள்களுக்கு மேல் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி காவல்நிலையம் முன்பு போராட்டம்..
பூலாங்குறிச்சியில் உறவினர் தாக்கப்பட்டது குறித்து புகாரளித்து 20 நாள்களுக்கு மேல் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, காவல் நிலைய வாயில் முன் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் வசிப்பவர் செந்தில். செந்தில் மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினி கடந்த 20 நாட்களுக்கு முன்பு ரோட்டில் நடந்து செல்லும் போது, முன் விரோதம் காரணமாக பிரகாஷ், மற்றும் அவரது உறவினர்கள் பவித்ரா, பழனிச்சாமி, பஞ்சு மற்றும் மச்சக்கண்ணு ஆகியோர் குடும்பத்தோடு சேர்ந்து அவர்களை நடு ரோட்டில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் செந்திலின் கை எலும்பு முறிந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து செந்தில் உறவினர்கள் பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் காவல்துறையினர், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பூலாங்குறிச்சி காவல் துறையினரை கண்டித்து அதே ஊரில் வசித்து வரும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்வம் தலைமையில், காவல் நிலையம் முன்பு செந்தில் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புகார் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பிய நிலையில், காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.