29/08/2020

பீட்சா வரலாறு...



பீட்சா, பிட்சா, பிசா, பிச்சா என பலவிதங்களில் அழைக்கப்படும் பிட்சா நாகரீக இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இன்று தமிழில் ஒரு திரைப்படம் கூட பீட்சா என்று வந்து விட்டது .

ஆனால் உண்மையில் பிட்சா ஏதோ இன்று நேற்று பிறந்த உணவல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதனை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.

ஆனால் இத்தாலி ராணியின் கடைக்கண் பார்வை கிட்டிய பிறகுதான் இதற்கு உலகப் புகழ் கிடைத்தது என்பது ஓர் சுவாரஸ்யமான கதை.

1889ஆம் ஆண்டில், ஒருநாள் இத்தாலி ராணி மெர்கரிட்டா, தனது கணவர் ராக் உம்பர்டோவுடன் நகர்வலம் வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஏழைகள் பலரும் தட்டையான ரொட்டி ஒன்றை மிகவும் ரசித்து ருசித்து உண்பதை பார்த்தார்.

தானும் ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுப் பார்க்க, அப்படியே அதன் ருசியில் மனம் சொக்கிப் போனார் ராணி மெர்கரிட்டா.

பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு, என்றபடியே அதனை அப்படியே அரண்மனைக்குள் அழைத்து வந்துவிட்டார்..

அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேல், ஏழைகளின் இந்த எளிய உணவுக்கு மேலும் மெருகூட்டினார்.

சிவப்பு நிறத் தக்காளி, வெள்ளை நிற பாலாடைக் கட்டி, பச்சைத் துளசி போன்றவற்றை மேலே தூவி இத்தாலியின் தேசியக் கொடி போல பிட்சாவை உருமாற்றி விட்டார்.

போதாக்குறைக்கு அதற்கு மெர்கரிட்டா பிட்சா என ராணியின் பெயரையும் வைத்து ராணிக்கு ஐஸ் வைத்துவிட்டார்.

இப்படி உள்ளூரில் பிரபலமான பிட்சா, இரண்டாம் உலகப் போருக்கு பின் உலகை சுற்ற ஆரம்பித்துவிட்டது.

இத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய படை வீரர்களை பிட்சா சிறைபிடித்து விட்டது.

ஒரு துண்டை வாயில் போட்டவுடனேயே அதன் சுவைக்கு அந்த வீரர்கள் அடிமையாகிவிட்டார்கள்.

பின்னர் போர் முடிந்ததும் நாடு திரும்பும் போது பிட்சாவையும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு உடன் எடுத்துச் சென்றனர்.

அவ்வளவு தான் சர்வதேச தரத்திற்கு பிட்சா உயர்ந்துவிட்டது.

விளைவு இன்று பட்டிதொட்டிகளில் எல்லாம் பிட்சா ஹட், பிட்சா கார்னர்கள் முளைத்துவிட்டன.

பிட்சா பிரியர்கள், பிப்ரவரி 9ஆம் தேதியை உலக பிட்சா தினமாக கொண்டாடும் அளவுக்கு பிட்சா சர்வதேச சூப்பர் ஸ்டாராகிவிட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.