இலக்கு + இயம் = இலக்கியம்...
இலக்கினை உடையது இலக்கியம். இலக்கியத்திற்கு "நூல்' என்னும் மற்றொரு பெயரும் உண்டு.
கட்டடம்கட்டும்பொது கோணல்களைக் கண்டுணர்ந்து சரி செய்ய "நூல்' இட்டுப்பார்ப்பது மரபு. அதுபோல் தனிமனித, சமுதாய அளவி லுள்ள சிக்கல்களையும் காரணங்களையும் சுட்டிக் காட்டித் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் புத்தகங்களே "நூல்' என்று போற்றப்படும். இத்தகைய நூல்கள் ஒரு நாட்டின் பண்பு நலனைமதிப்பீடு செய்ய உதவும் துலாக்கோலாகச் செயல்படுகின்றது. தமிழ் மொழியில், மாந்தர் தம் மனக் கோட்டம் தீர்த்து குணக் குன்றில் ஏற்றவல்ல ஏராளமான இலக்கியங்கள் மின்னி மிளிர்கின்றன. அவற்றை ஒரு பருந்தின் பார்வையில் காணப்போம்.
கடல் கொண்ட முச்சங்கங்கள்:
மதுரை, கபாடபுரம் ஆகிய இடங்களில் முச்சங்கங்கள் வைத்து முத்தமிழ் வளர்த்தனர் நம் முன்னோர்.
முரஞ்சியூர் முடி நாகராயர், தொல்காப்பியர், நக்கீரர் முதலான புலவர்களின் நாவில் நவிலப்பட்ட நற்றமிழ் நூல்கள் ஏராளம்!ஏராளம்!!. கி.மு. 2387-இல் கற்பனைக் கும் எட்டாத "பிரளயம்' ஒன்று உலகில்நிகழ்ந்தது. சீற்றம் கொண்ட ஆழிப் பேரலைகள் முன் உலகின் மிக உயரமான இமயமலைகூடக் கண்ணுக்குப் புலனாக வில்லை. வீசி எறியப்பட்ட கடல்பொருள்களில் பலஉயரமான இமயமலையில் சிக்கி, தங்கி, உறைந்து, படிவங்களாக மாறிப் போயுள்ளன.
அதன் பின்னர் கி.மு. 504 மற்றும் கி.மு. 306-இல் நிகழ்ந்த அடுத்த இருகடல்கோள்கள் என முப்பெரும் கடல்கோள்கள் தெற்கே பரந்து விரிந்திருந்த தமிழகத்தையே வழித்து வாரிக் கொண்டு போன நிலையில், எண்ணிறந்த பல தமிழ்நூல்களும் கடல்வாய்ப்பட்டு அழிந்தன. முச்சங்க நூல் களுள் சிலவாகியமுதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, மாபுராணம், பூத புராணம், இசைநுணுக்கம், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை, பெருங்கலி, வெண்டாழி, வியாழமாலை, அகவல் என்னும் நூல்கள் பற்றிய குறிப்பு இறை யனார் களவியல் உரை யின்மூலம் வெளிப்படுகின்றது. கடல் கோள் களில் எஞ்சிய நூல்கள் தொல்காப்பியம்,பரி பாடல், நெடுந்தொகை (அகநானூறு), குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை ஆகியனவே.
எட்டுத்தொகை நூல்கள..
மேற்காண் நூல்களுள் தொல்காப்பியம் நீங்கலான எட்டு நூல்களும், "எட்டுத்தொகை'நூல்க ள் எனப்படும். எட்டுத் தொகையின் ஒவ்வொரு நூலும் பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. எட்டுத் தொகையுள் "பதிற்றுப்பத்து'என்னும் பத்துச் சேர மன்னர்களைப் பத்துச்சேரநாட்டுப் புலவர்கள்பாடியது.
சேரநாடுஎன்பது இன்றையகேரளா..
தமிழிலிருந்து தெலுங்கு, கன்னட மொழிகளுக்குப் பிறகு கடைசியாகப் பிரிந்த தென் திராவிட மொழியான மலையாள இலக்கியத்தின் மூத்தநூலான பதிற்றுப்பத்து, தமிழ் எழுத்து வடிவத்திலேயே சங்க எட்டுத் தொகையுள் ஒன்றாக இருப்பது தமிழின் தொன்மையையும், மலையாளத்தின் "பின்மை'யையும் உணர்த்தும் ஆவணம் எனலாம்.
பத்துப்பாட்டு நூல்கள் :
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை,குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலை படுகடாம் (கூத்தராற்றுப் படை)என்னும் பத்து நூல்களும் கடல் கோள்களுக்குப் பின்னர் நிறுவப்பட்ட சங்கத்துநூல்கள். இவற்றுள் ஒவ்வொரு நூலும் ஒரு மன்னரை புலவரொருவர் பாடிய பாங்கில் அமைந்துள்ளன. "பேராசிரியர்' (கி.பி.13) என்னும் உரையாசிரியரே இப்பத்துநூல்களையும் ஒன்றாகச் சேர்த்து "பத்துப்பாட்டு' என முதன்முதலில் இனம்காட்டினார். இப்பத்து நூல்களுள் செம்பாகி ஆற்றுப் படை நூல்கள்.
இவ்வாற்றுப்படை நூல்கள் இன்றைய "பயண இலக்கியத்தின் முன்னோடி'யாகத்திகழ்கிறது.
திணை இலக்கியங்களும் வீரநிலை இலக்கியங்களும்..
பொதுவாக சங்க இலக்கியங்களை அக இலக்கியங் கள், புற இலக்கியங்கள் என இருவகையாகப் பகுக் கலாம். அக நூல்களில் குறிப்பிட்ட எவரின் பெயரும்குறிக்கப்படாமல் அகச்செய்திகளை மட்டும் கூறும் மாண்புகாக்கப்பட்டிருக்கும். அக இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளின் அடிப் படையில் பாடப்பட்டுள்ளதால்"திணை இலக்கியங்கள்' எனப் போற்றப்படுகின்றன: வெட்சி, கரந்தை, வஞ்சி,காஞ்சி, நொச்சி, சழிஞை, தும்பை, வாகை என்னும் போர்முறை களைப் பாடுவதால் புறப்பாடல்கள் "வீரநிலை இலக்கியங்கள்' எனச் சிறப்பிக்கப்படுகின்றன.
காப்பிய நூல்கள் :
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் கூறுவன பெருங்காப்பியங்கள். வீடு நீங்கலாக ஏனையவற்றைக் கூறுவன சிறுகாப்பியங்கள். கி.பி. 2-9- இல் ஐம்பெருங்காப்பியங்களும், கி.பி. 6-16-இல் ஐஞ்சிறுங்காப்பியங்களும் தோன்றின. காப்பிய வகைக்கு வித்திட்ட இளங்கோவடிகளின் சிலம்பும், சாத்த னாரின் மேகலையும் முதல் தமிழ்க் காப்பியங்களாவதோடு பெண்ணின் பெருமை பேணும் காப்பியங்களாகவும் மிளிர்கின்றன.
இவற்றோடு சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசியும் சேர்ந்து ஐந்தும் பெருங்காப்பியங்கள். நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், உதயண குமாரகாவியம், நாககுமார காவியம் என்பன ஐஞ்சிறுகாப்பியங்கள். இவற்றுள் மேகலையும், குண்டலகேசியும் மட்டும் பௌத்த சமயத்தைப் பாட ஏனைய 8காப்பியங்களும் சமணம் போற்றுகின்றது. இது, அக்கால கட்டத்தில் சமணம் பெற்றிருந்த செல்வாக்கைச் சுட்டுகிறது.
ஐம்பெருங்காப்பியம் பட்டியலுக்குள் வராவிட்டாலும் பெருங்கதை (கி.பி. 6) பெருங்காப்பிய வரிசையுள் மூன்றாவதாக வரிசைப்படுத்தத் தக்க சிறப்புடையது. கம்பரின் கம்பராமாயணத்தை அடியொற்றிஇரகுவம் (கி.பி. 15), இராமாயண நூல் களுக்கு மறுதலையாக எழுந்த புலவர் குழந்தையின் இராவண காவியம் (கி.பி. 1946) தமிழர்ப் பண்பாட்டைப் பேணுவதற்காகவே எழுந்தது. இவற்றைத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களுள் கண்ணதாசனின் இயேசு காவிய மும், சிற்பியின் "மௌன மயக்கமும்' கவிஞர் வைரமுத்துவின் "கவிராஜன் கதை'யும் குறிப்பிடத்தக்கன.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் :
காலம் ஏறக்குறைய 4 (அ)-ஆம் நூற்றாண்டு கணக்கு = நூல். 50 முதல் 500 முடியஅதிக அடிகளைக் கொண்ட நூல் மேற்கணக்கு நூல்கள். அவற்றைவிடக் குறைந்தஅடிகளைக் கொண்டவை கீழ்க்கணக்கு நூல்கள். கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது,ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலைஎன்னும் ஆறும் அகநூல்கள்: பொய்கையார் பாடிய களவிழி நாற்பது மட்டும்புறநூல்: ஏனைய நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக்கோவை, பழ மொழி, சிறுபஞ்சமூலம், முதல்மொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் 11 நூல்களும் அறநூல்கள்.
இவற்றுள் திருக்குறள் "உலகப் பொது மறை' என்னும் அரியணை ஏறியது.
பதினொண்கீழ்க்கணக்கின் அறநூல்கள் அடியாற்றிப் பிற்காலத்தில் பல அறநூல்கள்எழுந்தன. ஔவையாரின், கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஆத்திசூடி முதலியனவையும் அறநூல்கள். ஔவையின் ஆத்தி சூடியைப் பின்பற்றி பாரதி, பாரதிதாசன் முதல் வாணிதாசன் முடிய ஒன்பதின்மர் "ஆத்திசூடி வகை' நூல்களை இயற்றியுள்ளனர். மேலும், உலகநீதி, நீதிநெறி விளக்கம், பெண் மதிமாலை முதலானவும் அறநூல்களாக அணி செய்கின்றன...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.