தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் 11 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு வருகிற டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழும உறுப்பினர் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமமானது இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை - ஆண், பெண் மற்றும் திருநங்கை), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை - ஆண்கள்), இரண்டாம் நிலை சிறைக்காவலர் (ஆண், பெண்) மற்றும் தீயணைப்பாளர் (ஆண்) பதவிகளுக்கான தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
www.tnusrbonline.org எனும் இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதர வழிகளில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முன்பு மேற்கண்ட இணையதளத்தில் உள்ள தகவல் சிற்றேடு மற்றும் விண்ணப்பத்தை எப்படி சமர்ப்பிப்பது? என்பது குறித்த அறிவுரைகளை படித்து பார்த்து, பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
மொத்த காலிப்பணியிடங்கள் 10 ஆயிரத்து 906 ஆகும். இதில் காவல்துறையில் 10 ஆயிரத்து 329 இடங்களும், சிறைத்துறையில் 119 இடங்களும், தீயணைப்பு துறையில் 458 பணியிடங்களும் அடங்கும். இதுதவிர 72 பின்னடைவு காலி பணியிடங்களும் உள்ளன. ஊதியம் ரூ.18 ஆயிரத்து 200 முதல் ரூ.52 ஆயிரத்து 900 வரையில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2020 அன்று 18 வயது நிறைவடைந்தவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது 1.7.2002 அன்று அல்லது அதற்கு முன்பு பிறந்தவராகவோ, 1.7.1996 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவோ இருத்தல் வேண்டும். சில பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு வகுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு 26 ஆகவும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினருக்கு, திருநங்கைகளுக்கு 29 ஆகவும், ஆதரவற்ற விதவைகளுக்கு 35 ஆகவும், முன்னாள் ராணுவத்தினருக்கு 45 ஆகவும் உச்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
எழுத்துத்தேர்வு 80 மதிப்பெண்களும், உடற்திறன் போட்டிகளுக்கு 15 மதிப்பெண்களும், சிறப்பு மதிப்பெண்கள் 5 என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். எழுத்துத்தேர்வு 37 மாவட்ட மையங்களில் நடைபெறும். இதன் விவரங்களை தகவல் சிற்றேட்டில் பார்க்கலாம். தேர்வு கட்டணம் ரூ.130 ஆகும். இணையவழி விண்ணப்பம் பதிவேற்றம் தொடங்கும் நாள் வருகிற 26-ந்தேதி ஆகும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 26-ந்தேதி ஆகும். எழுத்துத்தேர்வு டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
இணையவழி மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் கண்டறியப்படும் பட்சத்திலோ, தகவல் போலியானது என்று தெரியவந்தாலோ விண்ணப்பம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.