10/09/2020

பழந்தமிழனின் வழிபாட்டு முறை...



ஆதித் தமிழனின் வழிபாட்டு முறையானது இறந்து போன வீரர்களின் நினைவாக கல்நட்டு, அவனுக்குப் பிடித்த உணவு வகைகளை படையலிட்டு, பலியிட்டு வணங்குவதாகும்.

இறந்து போன மனிதனின் உடலோடு அவன் பயன்படுத்திய ஆயுதம் மற்றும் பொருட்கள், அந்த குலத்தின் சின்னம் ஆகியவற்றையும் சேர்த்து புதைத்து தனது முன்னோரை தமிழன் வழிபட்டு வந்தான்.

இறந்தவர்களின் நினைவும், அது சார்ந்த நம்பிக்கையும் தங்களுக்கு ஆற்றலை வழங்கும் என்ற கருத்தியலின் அடிப்படையிலேயே நடுக்கல் வழிபாடென்பது அமைந்தது.

நடுக்கல்லுக்கு பூக்களைச் சூடி மயில் தோகையை அணிவித்து வழிபாடு செய்ததை அகநானூறும் கரையை அழிப்பது போல் பீறிட்டு வரும் வெள்ளத்தை அணை தடுத்து நிறுத்தியது போல் பாய்ந்து வரும் பகைவர் படையை தடுத்து நிறுத்திய வீரர்களுக்கு நடப்பட்ட நடுக்கற்களைப் பற்றி புறநானூறும் பேசுகின்றன.

இறந்தவர்களின் நினைவாக நடப்பட்ட நடுக்கல் வழிபாட்டில் ஆடு, கோழி வெட்டப்படுவதும், கள் படைக்கப்பட்டதும் முக்கிய இடம் பிடித்தது.

இல்லடு கள்ளின் சில் குடிச் சிறூர்ப்
புடை நடு கல்லின் நாட்பலி யூட்டி (புறம்:329).

நடுகற் பீலி சூட்டி நார் அரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ (புறம்:232).

நடுகள் பீலி சூட்டி துடுப்படுத்துத்
தோப்பி கள்ளொடு துரூ உப்பலி கொடுக்கும் (அகம்:35).

இறந்தவனின் நினைவிடத்தில் அவன் விரும்பி உண்ட மதுவும், பலி கொடுக்கப்பட்ட ஆடும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட செய்தியை மேற்கண்ட சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

நடுக்கல்லை வழிபட்டுக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு சிறு பகுதியினர் சமுதாய வளர்ச்சியையொட்டி புதிய மாற்றத்தை நோக்கி சென்றனர்.

குழுவாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் அடுத்தக் கட்டத்தை அடைந்தனர்.

அரசு என்ற நிறுவனம் தோன்றியது; உடமை வர்க்கம் சான்றோர்களையும், உயர்ந்தோர்களையும் உருவாக்கியது; உழைப்போடு நேரடியாக தொடர்பில்லாத இந்த முலாம் பூசிய கூட்டமே ஆதிக்கத்தை தங்கள் கையில் வைத்திருந்தது.

இனக்குழு காலத்திலிருந்த பொதுவான நிலைமை மாறி, உயர்ந்தோர், தாழ்ந்தோர், மேலோர், கீழோர் என்ற இரண்டு கருத்துக்களும் அதனையொட்டி இரண்டு வகையான சமூக வாழ்வும், பழக்க வழக்கங்களும், கடவுள்களும் உருவாயின.

அரசுகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளவும் தொடர்ந்து யுத்தங்களை நடத்திக் கொண்டே இருந்தன. யுத்தங்களில் மனிதர்கள் முன்பு போலவே செத்து மடிந்தனர்.

ஆனால் இப்பொழுது செத்துப் போன சான்றோர்களுக்கு மேல் உலகமும், வீர சொர்க்கமும் உருவாக்கப்பட்டது. ஆனால் கீழோர்களுக்கு வழக்கம் போல் ஊர் எல்லைகளில், காட்டுப் பாதைகளில் நடுக்கற்கள் நிறுத்தப்பட்டன. அவைகளையே தங்களின் தெய்வங்களாகவும் கருதினர்.

உடமை வர்க்கம் இறந்து போன சான்றோர்களுக்காக மேலே ஒரு உலகத்தை கட்டி அமைத்து, அவர்களுக்காக வேள்விகள் நடத்தி, எரியும் அக்னியின் வழியே மேல் உலகில் இருப்பவர்களுக்கான படையலை அனுப்பியது.

ஆனால் உடமைகள் அற்றக் கூட்டம் இறந்து போன தங்களின் முன்னோர்களுக்கு தாங்கள் உண்ணும் உணவை படையலிட்டு, ஆடு, கோழி வெட்டி பலியிட்டு அவர்கள் நினைவாக தாங்களே அதை உட் கொண்டு புதிய நம்பிக்கையுடன் வாழ்வை தொடர்ந்தனர்.

இன்று எண்ணிலடங்கா கிராம தெய்வங்களான அய்யனார், மாடன், காடன், மாயன், சுடலை, விருமன், கருப்பு, முனி பேச்சி, ஒச்சு, காத்தாயி, வீராயி என அனைவரும் மேல் உலகத்திற்கும், வீர சொர்க்கத்திற்கும் சான்றோர்களால் அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப் பட்டவர்களே.

வைதீக கருத்தியலின் அடிப்படையில் புறக் கணிக்கப்பட்ட ஒடுக்கு முறையின் வடிவங்களே.

ஒடுக்குமுறை என்பதும், சுரண்டல் என்பதும் பொருளியல் தளத்தில் மட்டும் தனித்து நடப்பதல்ல. சமூக வாழ்வின் மேல் கட்டுமானமான சாதி, சமயம், சட்டம், இலக்கியமென அனைத்திலும் அது நடக்கிறது.

இந்திய சமய மரபில் நிகழ்த்தப்பட்ட ஒடுக்கு முறையின் ஒரு முக்கிய பகுதி கீழோர்களின் தெய்வகள் மீதும், அவர்களின் வழிபாட்டு முறைகளின் மீதுமான தாக்குதலாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.