06/10/2020

நாதசுவரம்...

 


தென்ஆப்பிரிக்கா உலக கோப்பை போட்டியில், உவுசலா என்ற இசைக்கருவியும் முக்கிய இடம் பிடித்துள்ளது. இக்கருவி நாதசுவரம் போன்று இருக்கும். உவுசலா பிளாஸ்டிக்கால் ஆனது. நீல்வான் சால்விக் என்ற 37 வயது தென்ஆப்பிரிக்கக்காரர், 15 வருடங்களுக்கு முன் விளையாட்டாக கண்டு பிடித்த நம் தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி நாதசுவரம் போன்ற இருக்கும்.  நாதசுவரம் வாசிக்க ஞானம் வேண்டும். உவுசலாவுக்கு அதெல்லாம் தேவை இல்லை.

நம்முடைய அனைத்து பாரம்பரிய இசைக்கருவிகளையும் முறையாக கற்றுக் கொண்டு ஸாதகம் செய்தால் மட்டுமே வாசிக்க முடியும். நாம் திருமணம், திருவிழா போன்ற இடங்களில் மிகவும் பரவலாக காணும் ஓர் இசைக்கருவி நாதசுவரம். தவுலும் நாதசுவரமும் ஒன்றாகச் சேர்த்து வாசிப்பர்.

நாதசுவரம் துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி ஆகும். இதனை நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை, மலேசியா போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. மிகவும் இனிமையான இசையைத் தரவல்லது இக்கருவி.

தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலகரமான இசைக்கருவியாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலன கோவில்களில் இந்தக் கருவி வாசிக்கப்படுவதுண்டு. நேரடியாக இசைக்காவிட்டாலும் பல ஆலயங்களில் இவ்விசைப் பதிவு செய்யப்பட்ட குருந்தட்டுகளைப் வழிபாட்டின் போது ஒலிபரப்புச் செய்கின்றனர்.

இதைத்தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.

இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த அடிப் பகுதியையும் கொண்டது.

நாதசுவரம் ஆச்சாமரம் என்னும் மரத்தால் செய்யப்படுகின்றது. இதன் பாகங்கள் வட்டவடிவமாக விரிந்து காணப்படும் அணைசு, உள் கூடான நீண்ட மரக்குழலால் ஆன உடல் , உடலின் மேற் பொருத்தப்படும் கெண்டை (செப்புத் தகடு) அவ்வப்போது வைத்து இசைக்கப்படும் சீவாளி.  உடலின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன. மேலிருந்து வரும் 7 துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை. மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள்.

நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 அடி.

நாதசுரத்திற்கு சுருதி கருவியாக விளங்குவது ஒத்து என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார். இன்று இந்தக்கருவிக்குப் பதிலாக சுருதிப்பெட்டி பயன்படுத்தப்படுகின்றது.

பெரியமேளம்நாதஸ்வரத்துக்கு தாளக் கருவியாக அமைவது தவில் (அல்லது தவுல்) என்ற தோற்கருவியாகும். இதனால் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பொதுவாகத் தவில் இசைக் கலைஞருடன் சேர்ந்து குழுக்களாகவே செயல் படுவது வழக்கம். நாதஸ்வரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாளக் கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவைப் பெரியமேளம் என அழைப்பர்.

நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரி, பாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.