30/10/2020

வற்றிப்போன கடல்...

 


1960 களில் அந்த கடலில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்கள் மீன்களை அள்ளி எடுத்தார்கள்.  அப்படிப்பட்ட நீர் பரப்பு வற்றிப் போனது ஏன்?

உலக வெப்பமயமாதலினால் அது வற்றி போனதற்கு காரணமா ? என்றால் அதுவும் இல்லை பின் என்னதான் காரணமாக இருக்க முடியும் ? கடல் வற்றி விட்டதா ?

தொடர்ந்து வாசியுங்கள்...

சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் மிச்சிகன் ஏரியை விடவும் நீர்பரப்பில் பெரிதாக இருந்தது அது. அது உலகத்தின் நான்காவது மிகப்பெரிய ஏரியாக இருந்தது. ஏரி என்பதை விடவும் அதை கடல் என்று சொல்லலாம் அந்த அளவு விரிந்து பரந்தது. தாஷ்கண்ட் நகரத்தில் இருந்து 400 மைல்கள் தொலைவில் இருந்தது. அமுதர்யா, ஸைர்தர்யா எனு இரண்டு ஆறுகள் ஆஃப்கனிஸ்தான், தஜ்கிஸ்தான் மற்றும் க்ரிஜிஸ்தான் மலைத் தொடர்களில் உருவாகி ஓடி வளம் கொடுத்து இந்த ஏரியில் சங்கமித்தன.

நிலப்பரப்பிற்குள் பெரிய தண்ணீர் தீவு போல இருந்ததாலோ என்னவோ இதற்கு ஏரல் கடல் என அழைத்தனர்.  (அவர்கள் மொழியில் ஏரல் = தீவு ) 1100 குட்டித்தீவுகள் இதனுள் இருந்தன. அப்போது இதன் பரப்பளவு 68000 சதுர கிலோமீட்டர்கள்.

சோவியத்தின் பொருளாதார வல்லுநர்கள் ஒரு முடிவெடுத்தனர். அதாவது மத்திய ஆசியாவின் வரண்ட நிலப்பரப்பை வளமாக்க வேண்டுமானால் அந்த பகுதியில் பருத்தி செடிகளை விளைவித்து பசுமையை வரவழைத்து பஞ்சத்தை பஞ்சாக பறக்க வைத்துவிடலாம் என்ற அபார முடிவெடுத்தனர். ஆனால் அதை செயல் படுத்திய விதத்தில் சொதப்பி விட்டனர். அமோக விளைச்சலை கொண்டுவர அதிக அளவில் வேதியல் மற்றும் உரங்களை பயன் படுத்தினர். மேற்சொன்ன இரண்டு ஆறுகளின் நீர் வளத்தை இதற்காக திருப்பி விட்டனர்.  ஏரலுக்கு வரும் நீரை வீழலுக்கு இறைத்தனர்.  நீர் வரத்து குறையத்தொடங்கியது. 1960ல் 4 மில்லியன் பாசனப் பரப்பு 1980ல் இரண்டு மடங்காக அதிகரித்தது. ஆறுகளின் 90 சதவீத தண்ணீர் பருத்தி பயிர் விளைவிப்பதற்காக உபயோகிக்கப் பட்டன.

1970ல் 6 அடிகள் நீர் மட்டம் குறைந்தது.  மட்டம் குறைய குறைய நீரின் உப்பளவு அதிகமானது. அத்தோடு இருந்தால் கூட ஏரல் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால் வேதியல் கழிவுகளை முழுக்க முழுக்க ஏரலில் கொட்டினர்.

ஒரு சில மீன் இனங்கள் மட்டுமே ஏரலில் தாக்கு பிடித்த நிலையில் 80 களின் ஆரம்பத்தில் சுத்தமாக அழிந்து போய்விட்டன. மீன் வளம் மட்டுமல்ல அதை சார்ந்து வாழ்ந்த பறவை இனங்களும் விலங்கினங்களும் காணாமல் போயின.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகளை எதிர்ப்பதற்காக பெரிய பெரிய போர் கப்பல்கள் இந்த ஏரலில் நங்கூர மிட்டிருந்தன.  அவைகள் மெல்ல மெல்ல கரை தட்டி மண்ணுக்குள் புதைந்தன.

1991ல் சோவியத் யூனியன் பிளவுபட்ட போது உஸ்பெகிஸ்தான், கஸக்ஸ்தான் கைகளுக்குள் வந்தது ஏரல் ஆனாலும் சோவியத்தின் விவசாய பார்முலாவை விடாமல் பின்பற்றி ஏரலுக்கு சாவு மணி அடித்தன. இதன் மொத்த நீர் பரப்பானது பத்தில் ஒன்றாக சுருங்கிப் போனது.

தண்ணீர் பரப்பு குறைய குறைய அதன் அடிவண்டலில் தடிமனாக படிந்து இருந்த வேதி படிமங்கள் சுழற்காற்றில் அப்பகுதி முழுக்க புளுதிக் காடாக மாற்றியது. இதன் பாதிப்பினால் 10 க்கு 1 குழந்தை ஒருவயதுக்கு முன்னால் மரணித்துப் போனது.

ஆரோக்கியமான சூழ்நிலையில் இருந்த பகுதியை பேராசையாலும் தவரான திட்டங்களாலும் மிதமிஞ்சிய வேதி உரங்களாலும் ”பிசாசுப் பகுதி “ ஆக மாற்றிவிட்டான் மனிதன்.

பின் எப்போதும் மீட்டெடுக்க முடியாத அதல பாதாளத்தில் புதைந்து போனது ஏரல் கடல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.