08/03/2021

விமரிசனத்தை எதிர்கொள்ள...

 


நமக்கு முன்னும் பின்னும் மற்றவர்கள் செய்யும் விமரிசனத்திலிருந்து யாரும் தப்ப  முடியாது. நம் வாழ்வில் மகிழ்ச்சியோ துயரமோ, இந்த விமரிசனத்தை எதிர் கொள்வதைப் பொறுத்துத்தான் அமைகின்றன. மற்றவர்கள் செய்யும் விமரிசனத்தை மூன்று வழிகளில் எதிர் கொள்ளலாம்.

உணர்ச்சி வழி : உணர்ச்சி வயப்பட்டு மனம் கொந்தளிப்பது, அதுவும் மற்றவர்கள் விமரிசனம் செய்வதைக் கேட்டு மனம் பதறுவது இயற்கை. அதனால் சினத்துடன் நமது மறுதலிப்பைப் புலப்படுத்துவது மிக எளிது. ஆனால் உணர்ச்சி வசப்படுவது நமக்கு நாமே நஞ்சு ஊட்டிக் கொள்வது போலாகும். முதலில் உணர்ச்சி வசப்படாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்தது. விமரிசனங்களை முன்னரே எதிர் பார்த்தால் வரும் துன்பம் இலேசாக இருக்கும். நம் மனதை அடிக்கடல் போல அமைதியாக வைத்திருக்கப் பழகிக் கொள்ள  வேண்டும். நம்மை விமரிசிப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்பப் பழகிக் கொள்ள வேண்டும்.

பகுத்தறிவு வழி : உண்மையான விமரிசகர்கள் நம்மை சிந்திக்க வைக்கிறார்கள். அது நல்லது தானே. விமரிசனத்தின் உண்மையைக் காண வேண்டுமே தவிர நம்மை விமரிசித்தாரே என்று ஆத்திரம் கொள்ளக் கூடாது. அப்படி அறியும்போது விமரிசனத்தில் உண்மை இருந்தால் ஒப்புக் கொண்டு விடுவது நல்லது. அது விமரிசகர்களின் வாயையும் அடைத்து விடும். விமரிசிப்பவர்கள் நல்லவர் அல்லாதவராய்  இருந்தால் அந்த விமரிசனத்தை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் கூறி நம் பொன்னான நேரத்தை வீணாக்கக் கூடாது. விமரிசகரை ஆய்வதோடு மட்டுமல்லாது ஒருவரின் விமரிசனத்தை நம் காதுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறவர் அதற்குக் காது மூக்கு வைத்து நீட்டியிருக்கிறாரா என்பதையும் ஆராய வேண்டும். அவர்களின் தூண்டுதலுக்கு நாம் ஆளாகி விடக்கூடாது.

செய்முறை வழி : கருணை, பழிவாங்கும் உணர்வைவிட ஆற்றல் மிக்கது. பழிவாங்கும் செயலுக்குப் பணியாதவன் அன்பிற்குப் பணிந்து விடுவான். கடுமையான விமரிசகர்களைக் கூட கனிவுடன் அனைத்தும், இணைத்தும் சென்று வெற்றி காண வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.