13/05/2021

உயிரணுக்களின் (Cellular memory) ஊடே தொடரும் நினைவுகளும் குணங்களும்...

 


பொதுவாக மனிதனின் மூளையே நினைவுகளை சேர்த்துவைத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது.

ஆனால் மூளையுடன் நமது உயிரணுக்களும், நினைவுகளையும், குணங்களையும் எடுத்துச்செல்கிறது என்பது உறுப்புதானம் வழி தெரிய வந்திருக்கிறது.

இதயத்தை தானம் பெற்றவர்களிடம் காணப்பட்ட மாறுபட்ட குணநலன்கள், விருப்பங்கள், சிந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டு உயிரணுக்கள் நினைவுகளைச் சுமக்கின்றனவா என்ற ஆராய்ச்சிக்கு துவக்கமாக அமைந்தது.

ஒருவரிடமிருந்து உறுப்புதானம் பெறும்பொழுது, தானம் கொடுத்தவரின் குணநலன்களின் ஒரு பகுதியும் தானம் பெற்றவருக்கு சென்றிருக்கக் கூடுமா?

வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்தகைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் தானம் கொடுப்பவருடைய விபரங்கள் சட்டப்படி ஒளிவு மறைவாகவே வைக்கப்பட்டுள்ளது.

எனவே உறுப்புதானம் கொடுப்பவருடைய முழு குண நலன்களைப் பற்றிய விபரங்களைப் பெறுவது கடினமான காரியம்.

இத்தகைய சூழலில் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சியைத் தொடர்கின்றனர்..

1970-ல் கிளாரியா சில்வியா என்ற பெண்மணி, இதயம் மற்றும் நுரையீரலை 18 வயது ஆடவரிடமிருந்து தானமாகப் பெற்றார். தானம் கொடுத்த இளைஞன், ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தவர். அவர் இறந்ததனால் அவரது உறுப்புக்கள் தானமாக கொடுக்கப்பட்டன.

தானம் கொடுத்தவரைப்பற்றி கிளாரியாவுக்கு எந்தவிதமான விபரமும் தெரியாது. மாற்று உறுப்பு ஆபரேஷன் முடிந்தவுடன், சிக்கன் உருண்டைகள், மது, குடமிளகாய் முதலிய உணவுகளை உட்கொள்ள தன் மனம் மிகவும் ஏங்கியதாக கூறியுள்ளார்.

ஆபரேஷனுக்கு முன் அவருக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. திடீரென்று தன்னுடைய உணவுப் பழக்கங்களில் மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதை அவர் உணர்ந்துள்ளார். தன்னுடைய உணர்வுகளை A change of heart என்று ஒரு புத்தகமாகவும் எழுதியுள்ளார்.

அறிவியலாளர்கள் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்த, உயிரணுக்களின் நினைவுகளின் தொடர்ச்சி எட்டு வயது சிறுமிக்கு நிகழந்தது.

எட்டு வயது சிறுமி, பத்துவயது சிறுமியிடமிருந்து இதயத்தைப் பெற்றாள். இதய மாற்று ஆபரேஷனுக்குப் பிறகு, தொடர்ச்சியாக ஒரு சிறுமியை ஒருவர் கொலை செய்வது போன்று அந்த எட்டு வயது சிறுமிக்கு கனவுகள் தொடர்ந்தன.

மனோதத்துவ நிபுணர், உயிரணுவின் நினைவுகள் பத்து வயது சிறுமியிடமிருந்து தொடர்வதால் கனவுகள் தொடர்வதாக நம்பினார்.

உண்மையில், தானமாக பெற்ற இதயத்தைத் கொடுத்த சிறுமியை, யாரோ கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.

இதயத்தைப் பெற்ற சிறுமி, கனவில் தான் கண்ட கொலைகாரனின் அடையாளங்களை காவல் துறையிடம் கூறியிருக்கிறாள். அந்த அடையாளங்களின் உதவியுடன், காவல்துறையினர் கொலைகாரனை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.