30 க்கும் மேற்பட்டவர்கள் புகார் செய்த பின்னரும் ஒரு நிர்வாகம் அலட்சியமாக இருந்திருக்கும் என்பது நம்பக்கூடிய காரணமாக இல்லை. பாதிக்கப்பட்ட பெண்களிலும் ஆகப்பெரும்பான்மையினர் பார்ப்பன சமூகத்தினராகவே இருப்பர். எனவே, பார்ப்பனர் என்ற காரணத்துக்காக ராஜகோபாலை நிர்வாகம் காப்பாற்றியிருக்கிறது என்ற ஊகத்துக்கும் இடமில்லை.
பள்ளியின் இமேஜைக் காப்பாற்றுவதற்காக ராஜகோபாலை காப்பாற்றியிருக்கிறார்கள் என்ற காரணமும் ஏற்கத்தக்கதல்ல. இந்த மாதிரியான பிரச்சனைகளில் குற்றம் செய்த நபரை காதும் காதும் வைத்தாற்போல பள்ளியை விட்டு வெளியேற்றுவதுதான் நடக்கும். பாலியல் அத்துமீறல் விவகாரம் பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணையும் நிர்வாகத்தையும் தவிர வேறு யாருக்கும் விசயம் வெளியே கசியாமல் பார்த்துக் கொள்வார்கள். இவ்வாறு ராஜகோபாலை வெளியேற்றியிருந்தால் அந்தப் பள்ளியின் கவுரவம் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்காது. எனவே “இமேஜைக் காப்பாற்ற” என்று கூறப்படும் காரணமும் ஏற்புடையதல்ல.
உண்மையில் நடந்திருப்பது என்ன?
பள்ளியில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி விசாரிக்கின்ற அதிகாரம் படைத்த, பள்ளியின் உள்ளக விசாரணைக்குழுவில் குற்றவாளி ராஜகோபாலும் ஒரு உறுப்பினராக இருக்கிறார். அதாவது ராஜகோபாலுக்கு எதிராக பல பெண்கள் பல ஆண்டுகளாகப் புகார் செய்திருக்கும் நிலையிலும், நிர்வாகம் அத்தகைய நபருக்கு விசாரணைக்குழு உறுப்பினர் என்ற பதவியை வழங்கியிருக்கிறது என்றால் இதற்கு என்ன பொருள்?
ராஜகோபாலைத் தொடுவதற்கு நிர்வாகிகள் குடும்பத்தினர் அஞ்சியிருக்கிறார்கள். இதற்கு வேறு மர்மமான காரணங்கள் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்ற நடவடிக்கைகளில் நிர்வாகிகள் குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் ஈடுபட்டு அந்த விசயம் ராஜகோபாலுக்கு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ராஜகோபால் உதவியுடன் நடந்திருக்க வேண்டும்.
காஞ்சிபுரம் சங்கரராமன், கொலை செய்யப்படுவதற்கு முன் சங்கரமடத்துக்கு எழுதிய எச்சரிக்கை கடிதங்களை நினைவுபடுத்திப் பாருங்கள். சங்கரமட லீலைகளை அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார். சங்கரராமனின் வாயை அடைக்க பலவிதமாக முயற்சி செய்து முடியாமல் போகவேதான் அது கொலையில் முடிந்தது.
ஒரு நிறுவனத்தின் தலைமை, தன்னுடைய ஒழுக்கக் கேடுகளை மறைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, முதலில் சம்மந்தப்பட்ட நபருடன் சமரசம் பேச முயற்சிக்கும். முடியாத பட்சத்தில் குற்றத்தை அம்பலப்படுத்துபவர் மீது அவதூறுகளைக் கிளப்பிவிடும் அல்லது கொலை செய்யும். சங்கர ராமனும் அபயாவும் ஏன் கொலை செய்யப்பட்டனர் என்பதை நாடே அறியும்.
ராஜகோபால் விவகாரத்தில் நடந்திருப்பது சமரசமாக இருக்க வேண்டும்.
மறைப்பதற்கு பெரிய குற்றங்கள் பல இருப்பதனால்தான் இவர்கள் முந்திக்கொண்டு திமுக அரசின் மீது பழி சுமத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஸ்வாதியைக் கொன்றது பிலால் மாலிக் தான் என்று போலீஸ் விசாரணை தொடங்குவதற்கு முன்னதாகவே ஒய்.ஜி மகேந்திரன் வெளியிட்ட டிவிட்டர் பதிவை பலரும் இப்போது சுட்டிக் காட்டுகிறார்கள்.
மகேந்திரன் மட்டுமா, அவருடைய சகலையான ரஜினிகாந்த், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு காரணம் சமூகவிரோதிகள்தான். என்னிடம் ஆதாரம் இருக்கிறது” என்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கவில்லையா? அதுவும் ஒரு பச்சைப்படுகொலையை மறைப்பதற்கான தந்திரம் தானே...
“ரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி என்னுடைய பாட்டி உருவாக்கிய ஸ்தாபனம்” என்கிறார் மதுவந்தி. பள்ளியின் வளர்ச்சிக்காக யார் யாருடைய ரத்தமெல்லாம் சிந்தப்பட்டிருக்கிறது என்பதை விசாரணையில்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
காமராசர் ஆட்சியில் பொதுநோக்கத்துக்கு கொடுக்கப்பட்ட நிலம் தனியார் கல்விக் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது, எம்.ஜி.ஆர் ஆட்சியில் 100 கிரவுண்டு நிலம் முறைகேடாக தரப்பட்டிருப்பது, கட்டிடங்கள், நீச்சல் குளம் ஆகியவை முறைகேடாக கட்டப்பட்டிருப்பது, சிறுவன் ரஞ்சித்தின் மரணத்தில் குற்றத்தை மறைத்தது… என பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. தங்களுடைய ஆதாயத்துக்காக மேற்படி அத்துமீறல்கள் அனைத்தையும் கூசாமல் செய்ய முடிந்த பிராமணோத்தமர்கள், பாலியல் அத்துமீறலில் மட்டும் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்று நாம் நம்பவேண்டுமா?
2004 இல் சங்கரராமன் கொலைக்காக சங்கராச்சாரி கைது செய்யப்பட்ட போது பார்ப்பன சமூகத்தின் பொது உளவியல் அதனை நம்ப மறுத்தது என்பதை நாம் அறிவோம். பார்ப்பனர்களை விடுங்கள். சங்கராச்சாரி ஒரு பார்ப்பனரை கோயிலில் வைத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டையும், ஜெயேந்திரனின் காமலீலைகள் பற்றிய அனுராதா ரமணனின் வாக்குமூலத்தையும் கேட்டு சங்கர மட எதிர்ப்பாளர்களே கூட கொஞ்சம் “ஜெர்க்” ஆகவில்லையா?
பத்மா சேஷாத்ரி பள்ளி என்பது பாதி சங்கரமடம் – மீதி Export Processing Zone. வேதம், மந்திரம், காயத்ரி, பஜனை என்று அக்கிரஹார மணத்துடன் தயாரிக்கப்படும் அம்பிகளை, அமெரிக்காவின் “பே ஏரியா”வுக்கு
(https :// www. tamilbrahmins . com/ threads/west-coast-brahmins.8845 /) ஏற்றுமதி செய்வதுதான் அங்கே நடக்கும் தொழில்.
சங்கரமடம் ஆன்மீக அதிகார மையம் என்றால், பத்மா சேஷாத்ரி பள்ளி லவுகீக அதிகார மையம். லவுகீகத்தில் பல அட்ஜஸ்ட்மென்டுகளுக்கு “சாஸ்திர சம்மதம்” உண்டு. ராஜகோபால் என்ற “சாக்கடை ஜலத்தை” பத்மா சேஷாத்ரி நிர்வாகத்தினர் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் விசாரிக்கப்பட வேண்டிய விசயம்.
மேலும் 3 ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் வந்திருப்பதாகவும், போலீசிடம் சிக்காமல் அவர்களை நிர்வாகம் பாதுகாத்து வைத்திருப்பதாகவும் இன்றைய தினகரன் நாளேட்டில் செய்தி வெளியாகியிருக்கிறது. விசாரணையை முடக்குவதற்கு அவர்கள் எல்லா தந்திரங்களையும் கையாளுவார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போவார்கள்.
ராஜகோபாலை உள்ளே வைத்துக் கொண்டே விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தயாரித்து விட வேண்டும். அதற்கு முன், சிறையில் இருக்கும் ஸ்ரீமான் ராஜகோபால், கரெண்டு கம்பியைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.