இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஈ.வே இராமசாமிப் பெரியார் கட்டியமைத்த திராவிடர் கழகத்தின் தொடக்கக் கால உறுப்பினர் யாருமே இருக்க மாட்டார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய தலை மக்கள் யாருமே இருக்கப் போவதில்லை அவற்றின் வழி வந்த பிற கழகங்களோ பெயருக்குதாம் அவற்றின் கொள்கை வழி நிற்பன.
செத்த உடம்பை ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு சாகக் கிடக்கின்ற அதன் திராவிடக் கொள்கையை இந்நிலையில் ஆழமாக அலச வேண்டி உள்ளது.
வளர்ந்துவரும் தமிழ்த் தேசிய ஓர்மைக்கு நல்ல ஊட்டமும் தெளிவும் கிடைக்கும் என்பதைக் கருதியே இந்த ஆய்வை நடத்த வேண்டி உள்ளது.
அதை திராவிடக் கொள்கை தமிழக அரசியல் வாழ்வியலின் மீது முக்கால் நூற்றாண்டுகளாக அழுந்தக் குந்திக் கிடந்ததனால் தமிழுக்கும் தமிழரினத்திற்கும் நன்மைகளை விடத் தீமைகளே மிகுந்தன வென்பதைத் தமிழரில் இளந்தலைமுறையினருக்கு மிகத் தெளிவாக உணர்த்தியே ஆக வேண்டும்.
இதனால் எட்டிக் கசப்பான சில உண்மைகளையும் உள்ளடக்க நேர்ந்தது.
குறுநூலாக வடிவெடுத்துள்ள இந்தக் கட்டுரை நல்ல தூசியைக் கிளப்பும் என்பதை நூலாசிரியன் என்னும் வகையில் நன்கறிவேன்.
தமிழரினத்தின் நலன் கருதி ஒரு வரலாற்றுப் பணியைச் செய்யாமலிருக்க இயலவில்லை. உண்மை விளங்கியும் அதைப் புலப்படுத்தாமை கயமையாகுமன்றோ ?
அதை மனத்தில் கொண்டே சில கருத்துக்களைக் கட்டுரையாக்கித் தமிழ் மக்களின் முன்னால் படைத்திடத் துணிந்தேன் போற்றல்களாயினும் தூற்றல்களாயினும் அவற்றையெல்லாம் கட்டிச் சுமக்கத் தானே வேண்டும் ?
அவையாவும் காலம் என்மேல் ஏற்றிட்ட பொதியே எனக் கருதி விளைவைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஏடெடுத்தென் எழுதுவதற்கு.
அறிஞர் குணா.. நன்றியும் நெகிழ்வும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.