18/08/2022

உலக நாகரிகங்களில் தமிழனின் தடம்...

 


வருடம் கி.மு. 3000 அதாவது இன்றிலிருந்து மிகச் சரியாக 5000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய (Arab) நாட்டை தெற்கு வடக்காக கடந்து Persian Gulf-யை அடைந்து பிறகு Euphrates நதிக்கரையில் அமைந்திருக்கும் அந்த புகழ்பெற்ற நகரத்தை நோக்கி ஒரு வணிக கூட்டம் போய்கொண்டிருக்கிறது.

அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டே போகிறார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பேசுவது தமிழ் மொழி, ஆம் அவர்கள் தமிழில் தான் பேசிக் கொள்கிறார்கள்.

அவர்களை நாம் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள். அடக் கடவுளே அவர்கள் தமிழ் வணிகர்கள். தமிழக வணிகர்களுக்கு இங்கு என்ன வேலை? இந்து மா கடலையும், அரேபியாவின் பாலை வனங்களையும் கடந்து இவர்கள் எங்கே போய் கொண்டிருக்கிறார்கள்?

ஊர் (Ur), அந்த தமிழ் வணிகர்கள் போய்கொண்டிருப்பது இந்த நகரத்தை நோக்கித்தான். அவர்களில் சிலர் ஊர்க் (Urk) என்கிற நகரத்தை நோக்கி பிறகு செல்வார்கள்.

இந்த ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் எங்கே இருக்கின்றன என்று நீங்கள் புருவம் உயர்த்தினால் இதை படியுங்கள்.

இந்த இரண்டு நகரங்களும் Mesopotamia நாகரீகம் செழித்து வளர்ந்த Sumeria-யாவில் இருக்கின்றன. Euphrates மற்றும் Tigris நதிகள் ஓடும் இன்றைய Iran, Iraq பகுதிகளைத்தான் 5000 வருடங்களுக்கு முன்பு சுமேரியா (Sumeria) என்று அழைத்தார்கள். மனித நாகரீகத்தின் தொட்டில் என்று சுமேரிய நாகரீகத்தை வரலாற்று அறிஞர்கள் அழைக்கிறார்கள்.

ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் இரண்டும் சுமேரிய நாகரீகத்தின் முதல் பெருநகரங்கள். இன்றைய Metropolitan City-களுக்கு ஒப்பானவை. அக்கேடிய அரசு, ஊர் நகரத்திலிருந்தே தொடங்கியது. இங்கிருந்து அரசாண்ட அனைத்து சுமேரிய அரசர்களும் தங்களின் பெயர்களுக்கு முன்னால் இந்த ஊர் என்கிற வார்த்தையை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிரமிடுகள் (Pyramid) போன்ற அமைப்புடைய மிக பிரம்மாண்டமான சிகுராத்கள் (Ziggurat) இந்த நகரங்களில் இருந்தது. சிகுராத் என்பது சுமேரியர்களின் வழிபடும் இடம். ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ என்கிற இந்த வார்த்தைகள் தமிழ் மொழியில் இருந்து பெறப்பட்டதாக நடுநிலை வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இப்படி அறிஞர்கள் கருதுவதற்கு காரணம் இந்த இரண்டு நகரங்களிலும் இருந்த தமிழர்களின் செல்வாக்கு.

இன்றையிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ நகரங்கள் தமிழ் வணிகர்களின் குடியேற்ற நகரங்களாக இருந்திருக்கின்றன. பொதுவாக தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதியை ‘ஊர்’ என்று அழைப்பது வழக்கம். எந்தவித சிறப்பு பெயரும் இல்லாம் ‘ஊர்’ என்கிற ஒற்றை சொல்லே ஒரு நகர்புறத்தை குறிக்கும்.

நான் ஊருக்கு போனேன், அந்த ஊரு ரொம்ப தூரம் போன்ற சொல் வழக்குளில் ஒரு இடத்தின் பெயர் குறிக்கப்படவில்லை என்றாலும் ஊர் என்கிற ஒற்றை சொல்லே நாம் பேசும் நகரத்தை குறிப்பிட்டு விடுகின்றது.

தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தாலும் அவர்கள் வாழும் பகுதி ஊர் என்று அழைக்கப்படுகின்ற காரணத்தாலும் சுமேரியாவின் Euphrates நதிக்கரையிலிருந்த இந்த நகரங்கள் ‘ஊர்’ என்றும் ‘ஊர்க்’ என்றும் காரணப் பெயராக அழைக்கப்பட்டிருக்கிறது. ஊர்க் என்பது ஊர் என்ற சொல்லின் மருவிய வடிவம்.

தமிழர்களின் செல்வாக்கால் பெயர் பெற்ற ‘ஊர்’ நகரம் விவிலியத்திலும், மனித நாகரீகத்தின் முதல் நாவல் என்று அழைக்கப்படும் கில்காமேசிலும் (Gilgamesh) குறிக்கப்பட்டிருக்கிறது.

5000 ஆண்டுகளுக்கு முன்பு, சுமேரியாவின் எந்த பகுதிக்கு சென்றும் நான் தமிழன் என்று ஒருவர் சொன்னால் உடனே அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்.

அதாவது இன்று ஒரு அமெரிக்கர் உலகின் எந்த இடத்திலும் அடையாளம் கண்டு கொள்ளப்படுவது போல். இன்றைக்கு தமிழன் தமிழ்நாட்டிலேயே தன்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ள முடிவதில்லை. இனவெறியன், பிரிவினைவாதி என்று ஆபாசமாக முத்திரைக்குத்தப்படுகிறான். ஈழத்தில் தன் தாய் மண்ணில் இனப்படுக் கொலைக்கு ஆளாகிறான்.

தமிழகத்தில் கிடைத்த உபரி உற்பத்தியை தமிழர்கள் சுமேரிய நாகரீகத்துடன் வணிகம் செய்திருக்கிறார்கள். சுமேரிய உபரி உற்பத்தியை தமிழகம் கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கிடைக்கும் ஆடம்பர பொருட்களை சுமேரிய அரசர்கள் தாங்கள் இறந்தும் தங்களுடைய கல்லறைகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.

சுமேரியாவிற்கு வணிகத்திற்கு சென்ற தமிழன் சுமேரியாவின் நகர நாகரீக வளர்ச்சிக்கும் உதவி செய்திருக்கிறான். சுமேரியா மற்றும் எகிப்திற்கான கடல் வணிக பாதையை உருவாக்கியது தமிழன் என்றால் அது மிகையாகாது.

சுமேரியாவின் வரலாற்றை எழுதும் எவரும் தமிழர்களின் தொடர்புகளை புரக்கணித்துவிட முடியாது. ஆனால் ஏனோ நம்முடைய வரலாற்று நூல்கள் தமிழர்களின் இத்தகைய சிறப்புகளை இருட்டடிப்பு செய்கின்றன.

இந்திய வரலாற்று அறிஞர்களில் பலர் அகண்ட பாரதத்தை கட்டி எழுப்பும் வரலாற்று புணுகு மூட்டைகளையே ஓட்டு மொத்த இந்திய வரலாறாக அவிழ்த்து விட துடிக்கிறார்கள். ஆரியர் தன்மானமே இந்தியாவின் மானம் என்று கைகூசாமல் எழுதி குவிக்கிறார்கள்.

எகிப்து, சுமேரிய நாகரீகங்களுடனான தமிழர்களின் தொடர்புகளைப் பற்றியும், சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்பதைப் பற்றியும் எழுத துணிச்சல் அற்ற இந்திய பாட நூல் கழகம், தமிழர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது.

இன்றையிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்பு மூன்றே மூன்று நாகரீகங்கள்தான் நாகரீக கலாச்சாரத்தை முன்னெடுத்து இருக்கின்றன.

ஒன்று எகிப்தியர்களுடையது, அடுத்தது சுமேரியர்களுடையது மற்றது தமிழர்களுடையது.

சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்கிற காரணத்தால் அது தனியாக இங்கே குறிப்பிடபடவில்லை. உலக வரலாற்று அறிஞர்கள் தமிழர்களின் தொடர்புகளை வெளிகொண்டு வந்து புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள். இல்லையென்றால் தமிழன் வரும் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் தூங்கிக் கொண்டே தான் இருப்பான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.