11/04/2017

சித்தர் ஆவது எப்படி - 7...


அக குருவின் பெருமை...

ஒரு குருவின் துணையின்றி நமது சித்தத்தை ஒரு போதும் சீர் செய்ய முடியாது... அகத்திலிருந்து செயல் படும் சித்தத்தின் வேகத்தை அதே அகத்திலே வாழும் கனலை தாங்கிய புத்தி என்ற பூதம் மட்டுமே எதிர்கொண்டு, சமாளிக்கவும், கையாளவும், முடியும்... வேறு எந்த காரிய குருக்களான புற குருக்களால் சரிவர அந்த பணியினை செய்ய முடியாது..

புற குருக்கள் ஆசையென்ற வார்த்தைகளை அள்ளி வீசி மேலும் மேலும் சித்தத்தை வலு படுத்தி, அதன் ஆதிக்கத்தை அதிகப் படுத்தவே செய்வார்களே தவிர, சித்தத்தை சீர் செய்யவும், தெளிய வைக்க வகையறியாது தவிப்பார்கள்..

இதயத்தில் அன்பு இருந்தாலும் அவர்களுக்குள் அறியாமை ஒன்று உள்ளதே.. என்ன செய்வது ? சித்தம் தெளிய மருந்து அக குருவாகிய பலப்பட்ட குருவிடம் மட்டுமே உள்ளது...

மந்திரங்கள், உபதேசங்கள், சாஸ்திரங்கள், வேத ஆகம நூல்கள், எல்லாம் ஏறக்குறைய நன்மை செய்வது போல், மாயை காட்டி முடிவில் பக்க விளைவாக சித்தத்தை பலப் படுத்தி குரு பீடத்தை அணுகாமலேயே, கால விரையத்தை ஏற்படுத்துகின்றன...

உதாரணங்களுக்கு உலக விவகாரங்களை காட்டி காட்டி, மேலும் மேலும் வெளிச்சத்தையே காட்ட முயன்று, முடிவில் கனல் குறைந்து, ஆற்றல் குறைந்து, மரணத்தை நோக்கியே பயணப் பட வைக்கின்றன...

அகக்குரு பலப்பட, அமைதியும், சாந்தமும் மௌனமான சூழ்நிலைதான் தேவையே தவிர, சித்தம் கொதிக்க வைக்கும் இலக்கிய சிந்தனைகள், பாரத போர் சூர சம்காரம் போன்ற உணர்ச்சி கொப்பளிக்கும் காட்சி பாவனைகள், உச்ச கட்ட உணர்ச்சியை தட்டி எழுப்ப கூடிய மத போதனைகள், மத கருத்துக்கள் எல்லாம் புத்தியில் நிறைந்து இருக்க வேண்டிய சூனிய தன்மையான இருப்பு தன்மையை, கட்டாயம் நாசம் செய்து அதில் கனல் பெருக்கம் துளியும் ஏற்படாமல் பெரும் தீமையே செய்யும்...

குரு பீடத்திற்கு பீடை அதாவது நோய் தான் கவ்வும்.. இதனால் தான் சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் ஆகியவற்றின் ஆசார சங்கல்ப விகற்பங்கள் எம்மை பற்றாதவண்ணம் காத்து அருள் புரிதல் வேண்டும் என அருள் பெருஞ்சோதியை எங்கேயும் எப்போதும் முதலிலேயே வேண்டி கொள்கின்றார் வள்ளலார்...

முழுமையாகவே வெளிச்சத்தை கக்கும் தன்மை உடைய சித்தத்தை பலப் படுத்தும் மத சமூக போதனைகள் தரும் தீங்கை புத்தி பலம் உள்ளவர்கள் மட்டுமே உணர முடியும்...

கனல் என்றால் பேரண்ட ஆற்றலின் வரவு.. அந்த வரவின் சமயம் அது உணர்வாக தோன்றும்...

 எண்ணம் என்பது ஆற்றலின் செலவு.. அது வெளிச்சமாக பொறி புலன்கள் மூலம் வெளியேறும்....

உணர்வும் எண்ணமும் வட துருவம் தென் துருவம் போல.. இரவும் பகலும் போல... ஒன்று இருந்தால் மற்றொன்று இருக்காது.. இதை ஒரு நாளும் மறக்கக் கூடாது...

இந்த விதியை பயன் படுத்தி தான் கனல் பெருக்கும் வழியினை இனி விரிவாக காணப்போகிறோம்...

பேரண்ட சக்தி நாம் பெறுகின்ற போது, நமது பஞ்ச பூதங்கள் பெறுகின்ற உருமாற்ற பட்ட சக்தியை அந்த அந்த பூதங்களுக்கு ஏற்றவாறு அழைக்கிறோம்..

நம்மில் அறிவு அனுபவ சக்தியாகவும், புத்தி கனல் சக்தியாகவும் மனம் வெளிச்ச சக்தியாகவும், சித்தம் உந்தல் சக்தியாகவும், தேகம் பொருள் இயக்க சக்தியாகவும் அழைக்கப் படுகிறது... புத்தி அறிவோடு இயல்பாகவே அதிக தொடர்பு உடையது..

மனம் சித்தத்தோடு இயல்பாகவே அதிக தொடர்பு உடையது... அதனால் தான் பொறிபுலன் வழியாக சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தின் உந்தல் சக்தியால் மனம் வெளிச்சமாக எதையாவது செய்ய முனையும்....

கனல் என்பது புத்தியின் சக்தி.. அது அனுபவ அறிவோடு இணைந்து, தகுந்த முடிவு எடுக்க வல்லது... இந்த கனல் சக்தி பெருக்கத்தில் தான் புத்தி தகுந்த முடிவு எடுக்கும்.. இதனையே உள் குருவாக கொள்ள வேண்டும்..

இந்த புத்தியாகிய உள் குருவே நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படியெல்லாம் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் தான் பெற்ற கனல் சக்தியின் அளவினை பொறுத்து தகுந்த, உறுதியான, சரியான முடிவு எடுக்கும்...

ஆகவே நாம் வெளி குருவை போற்றுவதை காட்டிலும் பல மடங்கு உள் குருவாகிய புத்தியை போற்றி அதை பெருக்கும் வழியினை எந்த வகையிலாவது உயர்த்திக் கொள்ள வேண்டும்..

வெளி குருவை போற்றுவதில் தவறு எதுவும் இல்லை.. ஆனால் உள் குருவின் துணையின்றி கடுகளவும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண முடியாது..

உள் குருவின், அக குருவின் பலத்தை பெற்று விட்டால் ஆன்மீகத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சரியான அடியாகவே இருக்கும்..

வெளி குருக்களின் அறியாமை விளைவாக, நம்மை எப்படி எல்லாம் பின் தங்க வைக்கிறார்கள் என்பது நன்கு புரியும்.. அக குருவின் பலத்தை பெற்ற பின் இதுவரை வெளி குருகளிடம் கற்றதை மறக்கும் பணியை செய்யவேண்டி உள்ளதால், இன்னும் நமக்கு கால விரையம் ஏற்படும்..

அந்த நிலையில் தான் கற்ற தெல்லாம் வீணே என்ற வள்ளலார் கூற்று நினைவுக்கு வரும்..

நன்றாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. நமக்குள் இருக்கும் குரு நமது அல்ல.. இதில் நாம் என்ற ஆணவ குறிப்பு உள் குருவை தனதாக பாவிக்கின்ற மாயை தோற்றம்..

அக்குரு அண்ட சராசரம் முழுமைக்கும் பேராட்சி நடத்திக் கொண்டு இருக்கும் பேரறிவின் அம்சம் அல்லவா?

நான் நாம் என்ற குறுகிய வட்டத்தில் அரசாட்சி செய்து கொண்டு இருக்கும் ஆணவம் தான் தனது என உரிமை கொண்டாடுவதால், பேரறிவின் கசிவிலிருந்து வரும் கனலை உடைய புத்தியை, தன்னை விட உயர்ந்ததாக கருதாது..

ஆணவம் என்பது மனதின் பொறி புலன்கள் மேல் உள்ள ஆதிக்கமும், பேரண்ட பேராற்றலால் காரிய பட்ட ஒடுங்கிய செத்த நிலையில் உள்ள புற பொருள்களின் மேல் உள்ள ஆதிக்கமே...

உலக பொருள்கள் எல்லாம் பிரபஞ்சத்தால் தோற்றுவிக்கப் பட்டாலும், அவைகள் அத்தனையும் பிரபஞ்ச கழிவுகள்.. கழிவுகளை ஆதிக்கம் செய்வதால் ஏதோ பிரபஞ்சத்தையே ஆதிக்கம் செய்ய கூடிய அறியாமை தான், மனத்தினுடைய ஆணவம் என்பது....

நம்முள் உள்ள புத்தி ஆணவத்திற்கு சொந்தம் அல்ல.. அது பேரண்ட புனிதத்தின் செயல் பாடு..

இப்படியாக ஆணவத்திற்கு சொந்தமாக பாராட்டாமல் அதனை பேரறிவின் உடமையாக கொண்டதால் தான், தன்னுள் குடிகொண்ட புனித புத்தியின் மூலம், சித்தர்கள் அளப்பறிய ஆற்றல் உடைய சித்தர்கள் ஆக முடிந்தது..

புத்திமானே பலவான் என்ற கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உடைய நாம், நம் அக குருவை போற்றி போற்றி, வணங்கி வணங்கி, கனல் பெருக்கும் மார்க்கத்தில், நம்மிடம் உள்ள குரு பீடத்தை திடமாக்குவோம் வலுவாக்குவோம், சித்தராவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.