10/04/2017

குரங்குகளால் வளர்க்கப்பட்ட குழந்தையின் அதிர்ச்சி பின்னணி...


நேற்றைய தினம் இந்தியா உட்பட சர்வதேச செய்தி ஊடகங்கள் பலவற்றிலும் 'குரங்குகளால் வளர்க்கப்பட்ட பெண் குழந்தை' எனும் செய்தி பல ஊடகங்களில்  இடம் பெற்றிருந்தது. ஆனால் இன்று அக்குழந்தை பற்றி மாற்று வகையான அதிர்ச்சிகர கருத்துக்களும் வெளியாகியுள்ளன.

மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள இக்குழந்தை அண்மைய காலத்தில் தான் அதன் பெற்றோர்களால் காட்டின் ஓரம் வீசப்பட்டிருக்கலாம் என்ற புதிய கருத்தும் வெளியாகியுள்ளது.

இக்குழந்தை மீட்கப்பட்டபோது குரங்குகள் அவள் அருகே இருந்ததை மறுக்கவில்லை என்றாலும் குரங்குகளால் நீண்டகாலமாக வளர்க்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் இவள் எப்போது தனித்து விடப்பட்டாள் என அறுதியிட்டு சொல்லவும் முடியவில்லை என்ற கருத்தும் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

உ.பி.யின் பஹ்ரைச் மாவட்ட மருத்துவ அதிகாரி அன்குர் லால் கூறும்போது, இக்குழந்தை மீட்கப்பட்டபோது மிகுந்த சீற்றம் உடையவளாக இருந்தாள், பிற குழந்தைகளைப் போல் இயற்கை உபாதைகளை கழிக்கும் பழக்கம் பெற்றவளாக இருக்கவில்லை என்றும், மனிதர்களுடன் பழகவும் உரையாடவும் தேவையான குணத்தையும் பெற்றிருக்கவில்லை என்பதாலேயே இவள் மிக நீண்டகாலத்திற்கு முன்பாகவே காட்டிற்குள் விடப்பட்டிருக்க வேண்டும் என சிலரால் நம்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட போது தவழ்ந்தவள் தற்போது பயிற்சிக்குப் பின் நடப்பதாலும் இவள் பிறந்தது முதல் காட்டிற்குள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் சமூக ஆர்வலர் ரஞ்ஜனா குமாரி அவர்கள் கூறும் போது, இந்திய சமூகத்தில் ஆண் குழந்தையை போல் பெண் குழந்தைகள் விரும்பப்படுவதில்லை அதிலும் உடற்குறையுடன் ஏழை குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளின் நிலை இன்னும் மோசமானது, அவ்வாறான சமூக காரணங்களாலேயே இக்குழந்தை காட்டிற்குள் கைவிடப்பட்டிருக்கலாம் எனக்கூறினார்.

மீட்கப்பட்ட பெண் குழந்தை தொடர் சிகிச்சைக்குப் பின் தேறி வருவதை தொடர்ந்து லக்னோவில் உள்ள ஒரு குழந்தைகள் நல மையத்தில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையுடனும் அக்கறையுடனும் கண்காணிக்கப்பட்டு வருகிறாள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.