சுயமரியாதைத் திருமணம் மறந்து போனதேன்?
ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணத்தில் வயது வித்தியாசக் கொள்கையை மட்டும் கைவிடவில்லை. தனது வாழ்நாள் முழுக்க எந்த சுயமரியாதைத் திருமணத்தை வலியுறுத்தினாரோ - அந்த சுயமரியாதைத் திருமணத்தையே அவர் தம் திருமணத்தின் போது கடை பிடிக்கவில்லை.
ஆனால் சுயமரியாதைத் திருமணத்தை எந்த அளவுக்கு வலியுறுத்தினார் தெரியுமா?
ஒருவர் இரு பெண்களை மணந்தாலும் பரவாயில்லை, ஆனால் அது சுயமரியாதைத் திருமணமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். தன்னுடைய இயக்கத்தவர்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தையே நடத்தி வைத்தார்.
இந்த அளவுக்கு சுயமரியாதை திருமண விஷயத்தில் கொள்கைப்பிடிப்புடன் இருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்?
திராவிடர்க் கழகத்தில் இருந்தவர்கள் கூட வயது தான் ஈ.வே.ராமாசாமி நாயக்கர் பார்க்கவில்லை யென்றாலும் கூட திருமணத்தையாவது பதிவுத் திருமணமாக இல்லாமல் சுயமரியாதைத் திருமணமாக செய்து கொள்ள பெரியாரை வேண்டினர். ஆனால் பெரியார் கேட்கவில்லை. தன்னுடைய கொள்கைக்கு தானே சமாதி கட்டினார்.
தனது கொள்கைக்கு தானே சமாதி கட்டக் காரணம் என்ன தெரியுமா?அன்று சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாத திருமணம். தனது சொத்துக்கும், இயக்கத்துக்கும் நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட்டார். அதனாலேயே திருமணம் செய்து கொண்டார் என்று சொல்கிறார்கள்.
இருமணம் பிணைக்கப்பட்டு ஒருவரை ஒருவர் அறிந்து கொண்ட பின் திருமணம் எதற்கு என்றெல்லாம் கேட்ட பெரியார்தான் சொத்துக்களுக்காக திருமணம் செய்து கொண்டார்.
சொத்துக்களுக்காக - இயக்கத்துக்காக என்றால் திருமணம் தான் தீர்வா?
கொள்கைப் பிடிப்புக் கொண்ட மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டால்தான் சொத்தை இயக்கத்தை காப்பாற்றுவாரா?
திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால் காப்பற்றமாட்டாரா?
திருமணம் செய்து கொள்ளாமலேயே மணியம்மையாரே சொத்தை இயக்கத்தை காப்பற்றச் சொன்னால் மணியம்மையார் காப்பாற்றமாட்டாரா?
திருமணம் செய்து கொண்டால் தான் காப்பாற்றுவரா?
சொத்தை இயக்கத்தை காப்பாற்ற திருமணம் தான் தீர்வு என்றால்..
அதே சொத்தை - இயக்கத்தைக் காப்பற்ற மணியம்மை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?
ஈ.வே.ராமசாமி நாயக்கரின் வழிமுறைப்படி மணியம்மை இயக்கத்துக்காக - சொத்துக்களுக்காக திருமணம் கொள்ளவில்லையே ஏன்?
அதிலெல்லாம் அக்கறையில்லாததாலா?
சொத்துக்களை காப்பாற்ற பெரியாரும் மணியம்மையாரும் மட்டும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர் என்றால்..
ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சொல்படி 1967 வரை சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட எண்ணற்ற தோழர்களின் குடும்ப சொத்துக்களைப் பற்றியே கவலைப்படாதது ஏன்? (1968-ம் ஆண்டு தான் சுயமரியாதை திருமணம் சட்டப்படி ஆனது. அதில்தான் இதுவரை நடந்த சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சொல்லியது) அவர்கள் சொத்து எக்கேடாவது கெட்டுப்போகட்டும், என் சொத்துமட்டும் என் கையில் இருக்க வேண்டும் என்ற எண்ணப்படித்தானே அன்று சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணத்தை மற்றவர்களுக்கும், சட்டப்படியான பதிவுத் திருமணத்தை தனக்கும் வகுத்துக் கொண்டார். இது தானா கொள்கைப் பிடிப்பு?
சரி ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான் பதிவுத்திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். இதற்கு ஏன் மணியம்மை ஒத்துக்கொண்டார்? மணியம்மை சுயமரியாதை திருமணமே செய்து கொள்ளலாம் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரை வற்புறுத்திச் சொல்லியிருக்கலாமே..
ஒருவேளை சொத்துக்கள் வந்தால் போதும் என்று நினைத்துவிட்டாரா?
தலைவர் கொள்கையில் நழுவும் போது அதைத் தடுத்து நிறுத்துவது தானே தொண்டருக்கு அழகு..
ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கொள்கையிலிருந்து நழுவும் போது மணியம்மையாரும் சம்மதித்தாரே ஏன்?
ஏனென்றால் கொள்கை மற்றவர்களுக்குத்தான் நமக்கு இல்லை என்று மணியம்மையாரும், ஈ.வே. ராமசாமி நாயக்கரும் நினைத்தார்களோ என்னவோ.. அவர்களுக்கே வெளிச்சம்..
தான் பதிவு திருமணம் செய்து கொண்ட பிறகு 1962-ம் ஆண்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்..
பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும், மனைவியுமாக ஏற்று நடக்க சம்மதிக்கிறோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் ‘நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்துக் கொள்வதோடு ஒருவருக்கொருவர் எல்லாத் துறைகளிலும் இன்ப-துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகின்றோம’ என்று சொல்லும் முறையை கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா? (விடுதலை 20-04-1962).
தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு மற்றவர்களுக்கு சுயமரியாதை திருமணத்தை கூறுகிறார் என்றால் இதுதான் கொள்கைப்பிடிப்பா?
தான் ரிஜிஸ்ட்டர் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டு மற்றவர்கள் சுயமரியாதை திருமணத்தை கடை பிடிக்க வேண்டும் என்று சொல்ல ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு என்ன தகுதியிருக்கிறது?
நம்முடையது சம உரிமைத் திருமணம் என்கிறார். அப்படியென்றால் இவர் ஏன் சம உரிமைத் திருமணம் செய்து கொள்ளவில்லை?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.