02/05/2017

நெடுவாசலில் 20வது நாளாக போராட்டம்: ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் எங்கள் உயிரை மாய்த்து கொள்வோம்...


புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக பெண்கள் மற்றும் இளைஞர்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த 12ம் தேதி துவக்கினர். பல்வேறு விதமான நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நடந்த போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்பகுதி விவசாயிகள்  விஷம் குடித்து தற்கொலை செய்வது போல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இன்று 20வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. சிறுவர், சிறுமியர், பெண்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதி பெண்கள், சிறுவர்கள் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை ரத்து செய்து எழுத்துபூர்வமான உத்தரவாதம் அளிக்கவேண்டும். அப்படி உத்தரவாதம் அளிக்கவில்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

விவசாயிகள் கூறுகையில், நாங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம்.திட்டம் செயல்படுத்தப்பட்டால் நோய் வந்து இறப்பதற்கு பதிலாக நாங்களே எங்கள் உயிரை மாய்த்துக்கொள்வோம் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக நாங்கள் விஷம் குடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

மேலும், மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை கைவிடும் வரை எங்களது நூதன போராட்டங்கள் தொடரும் என்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.