27/05/2017

தமிழர் வாழ்வில் புலால் (Non-veg) உணவு...


புலால் (Non-Veg) தமிழர் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கம்...

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவையில் காய் கனிகள் மட்டுமல்லாது, ஏராளமாய் புலால் உணவும் அன்றைய ஐந்து திணையிலும் இருந்தது.

ஆட்டிறைச்சி, மாட்டியிறைச்சியில் இருந்து ஆமை, மூஞ்சூறு, முதலை வரை அனைவற்றிலும் நம் அப்பத்தாக்கள்  லெக் பீஸ், ஹெட் பீஸ் என போட்டு வெளுத்து வாங்கிய வரலாறு சங்க இலக்கியம் முதல் தொட்டே உள்ளது. கோழி, காடை, கவுதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலாலில்லை.

பச்சை ஊனைப் புசித்து புறங்கையில் வழியும் குருதியையும், புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன் குறித்து சங்க இலக்கியம் பல இடங்களில் பேசும்.

(உடனே வீரமாய் பச்சை ஊன் பிரியாணி ஒரு பிளேட் எனக் கேட்டுக் கிளம்பிவிட வேண்டாம். சரியாய் சமைக்காத கறியில் உள்ள பூச்சி முட்டைகள் மூளை இரத்த நாளங்களின் முடிவில் சென்று அடைத்து ஏற்படும் Cysticircosis  நோய் வந்துவிடும்)

சில 100 ஆண்டுகள் சமணமும், பவுத்தமும் தமிழகத்தை ஆண்டதில்தான் நம் சாமியும்கூட சுத்த வெஜிடேரியன் ஆகிவிட்டது. புலால் உண்ணாமையும், கள் உண்ணாமையும் வள்ளுவனால் கற்பிக்கப்பட்டவுடன், புலால் மெல்ல உழைக்கும் வர்க்கத்தில் மட்டும் ஒட்டிக் கொண்டது.

நான் வெஜ் சாப்பிட்டால் உடம்பு வளரும், மூளை வளராது என்ற பொய்ப் புராணங்கள் கற்பிக்கப்பட்டதில், புலாலைப் பார்த்தவுடன் ஐய்யே உவ்வே என்பது அதிகமாகிவிட்டது.

100 க்கு 100 வாங்கி என்  பையன் புரபஷனல் காலேஜில் ஐக்கியமாகிவிடவேண்டும் என முக்கி முனகும் பெற்றோருக்கு ஒரு விஷயம். 90 சதவீதம் நோபெல் பரிசு வாங்கியவர்களும், உலகை உலுக்கி மாற்றிய மைக்ரோசாஃப்;ட், ஆப்பிள் முதலாளிகளும் மூணு வேளையும் நான் வெஜ்ஜர்கள்தான்.

புலாலில் உள்ள புரதமும், சில நுண் சத்துக்களும் பொதுவாய் காய்கறிகளில் குறைவு. உதாரணத்திற்கு 100 கிராம் ஈரலில் 6000 மைக்ரோகிராம் இரும்பு உண்டு. 100 கிராம் கேரட்டில் 3000 மைக்ரோகிராம்தான் இரும்பு.

எதை, எப்போது, எவ்வளவு சாப்பிடனும் என்பதை மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

அன்று போருக்குப் போன வீரன் சாப்பிட்டதைப்போல இன்று காரில் போகும் சுகவாசி உண்டால் சரிப்படாது. நெடுஞ்சாணாய் நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாய் லைட் டின்னரில் ஃபிஷ் பிரை ஆர்டர் செய்யும் நபருக்கு சரிவராது.

உழைக்கும் அளவும், வாழும் நிலமும்தான் உண்ணும் அளவை இனி தீர்மானிக்க வேண்டும்.

- மருத்துவர். கு.சிவராமன் (நல்லுணவும், நலவாழ்வும் என்ற புத்தகத்தில்)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.