03/06/2017

கேரளத்தையாவது பிடிப்போம்.. தமிழகம் தேறாது.. நாடாளுமன்ற தேர்தலை குறி வைக்கும் பாஜக...


தமிழகத்தில் கால் பதிக்க பாஜகவால் முடியாத நிலையில் கேரளாவில் தங்களுக்கான இடத்தைப் பிடித்துக் கொள்ள பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தென்னிந்தியாவில் கால் பதிக்க முதலில் பாஜக தேர்ந்தெடுத்த இடம் புதியதாக உருவான தெலுங்கானா மாநிலம். அடுத்ததாக பாஜக அடுத்த பார்வையை தென்னிந்தியாவில் உள்ள கேரளா மீது வீசியுள்ளது.

கேரளாவை கைப்பற்றுவதற்கான வேலைகளை வேகமாக செய்து வருகிறார் அமித்ஷா. குறிப்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கான தொடர் வேலைகளின் ஒரு பகுதியாக அமித்ஷா கேரளாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வர உள்ளார். மாட்டிறைச்சிக்கு தடை என்ற மத்திய அரசின் உத்தரவால் கொதித்துப் போயுள்ள கேரளாவிற்கு அமித்ஷா வர உள்ளது கடுமையான எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கேரளாவிற்கு வரும் அமித்ஷா கொச்சியில் உள்ள பிஷப்பை சனிக்கிழமை சந்திக்க உள்ளார். இதன் மூலம் இரு சமூகத்தினிடையே உறவை ஏற்படுத்தும் முகமாக அவர் செயல்படுவதாகக் கூறப்பட்டாலும் கேரளாவில் 18 சதவீதம் கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் குறி வைத்து வேலை செய்கிறது பாஜக. அதற்கான படிப்படியான நகர்வுகளை செய்து வருகிறது. அதற்காகத்தான் மதத் தலைவர்களை சந்தித்து பிற மதங்களோடு பிணக்கம் இல்லாததது போல் காண்பிக்க அமித்ஷா முயற்சி செய்து வருகிறார்.

2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒரே ஒரு எம்எல்ஏவை மட்டுமே பாஜக வென்றது. ஆனால் 16 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் பாஜக நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.