அப்படி பேசியவர்களை தலைவர்கள் என்று தமிழர்களே தலையில் தூக்கி சுமக்கவும் செய்த கொடுமை தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.
தமிழின எதிரிகள் திட்டமிட்டு தமிழர்களுக்கு எந்த பண்பாடும் நாகரீகமும் அறிவும் இல்லை என்ற பொய்ப்பரப்புரை செய்து வெற்றி பெற்றுள்ளனர் என்பதை நாம் அறிதல் வேண்டும்.
சரி, அப்படி எத்தகைய அறிவை பண்டைய தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதை நாம் ஆய்வு செய்தல் அவசியமாகும்.
சங்க கால தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள்.
வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு சொன்னவர்கள்.
தமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார், கனிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் முதலிய பெயர்கள் சான்று பகர்கின்றன.
சிலேட்டர் என்னும் வானியல் அறிஞர் தமிழருடைய வானநூற்கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதங்களிலும் சிறப்பானது என்னும் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.
விசும்பில் ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு - பரிபாடல்-2
இந்த பரிபாடல் பாடலடிகள் முறையாகத் தோன்றும் ஊழிக் காலங்களை வெளிப்படுத்துகிறது.
முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றிய நிகழ்வு இன்றைய அறிவியலாரும் உடன்படு கருத்தாகும்.
வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிறு - நற்றிணை:163
இந்த நற்றிணைப் பாடலில், உலக உயிர்கள் ஞாயிறின் கதிர்களால் உயிர் வாழ்கின்றன. இல்லையேல் இவ்வுலகம் பனிமண்டி உலக அழிவு ஏற்படும் என்ற உண்மை புலப்பட்டு நிற்கிறது. மேலும், நற்றிணை பாடலொன்று, ஞாயிறு இருளைப்போக்க அதன் உட்பகுதி நெருப்பினால் எரிந்து கொண்டிருக்கிறது என்றும் அதைச் சுற்றிலும் ஒளிப்படலம் உள்ளது என்றும் கூறுகிறது.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. திருக்குறள் 1031
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது என்ற கருத்தை வெளிபடுத்தும் இக்குறளில் உலகம் தொடர்ச்சியாக சுழன்று கொண்டிருக்கிறது என்ற அறிவியலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படுத்துகிறது.
வள்ளலார் வழங்கிய அருட்பெருஞ்சோதி அகவல் வரிகளில் வரும் வானியல் பற்றியும் பார்ப்போம் ..
113. எண்டர முடியா திலங்கிய பற்பல
அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
எண்ணில் அடங்காத அண்டங்களுக்கு நிறைந்த ஒளியை கொடுத்துக் கொண்டிருக்கிறது அருட்பெருஞ்சோதி என்ற பேராற்றல்.
276. புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரின் மேல் புவியும் , புவியின் மேல் மலைகளும் , நிலப்பரப்பும் இவை அனைத்தும் நெருப்பின் மேல் நிலைத்திருக்கும் படி இயற்கை வகுத்துள்ளது என்ற புவியியல் அறிவை வெளிபடுத்தியுள்ளார் வள்ளலார்.
மேலும் அண்டப் பெருவெளியில் இருந்து ஒளி அண்டங்களை பார்வையிட்ட தருணத்தில் இந்த மாபெரும் ஒளி அண்டங்கள் எல்லாம் சிறு அணுக்களாக காட்சி அளித்தது என்றும் கூறியுள்ளார் வள்ளலார். நவீன விஞ்ஞானத்தில் மிகப்பெரிய தொலைநோக்கி கருவியை வைத்து மட்டுமே பார்க்கப்படும் இக்காட்சியை மிக எளிமையாக காட்சிப் படுத்தியுள்ளார் வள்ளலார்.
தமிழர்கள் வானியலை மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன் .
தமிழ் இலக்கியங்கள் மூலமாகவே ஆரிய புராணங்களும் பல அரிய செய்திகளை கடன்பெற்று கதைகளாக உலகிற்கு வழங்கின.
தமிழர்கள் கண்டு பிடித்ததை தாங்கள் கண்டுபிடித்ததாக வாய்க் கூசாமல் பொய் கூறினர் ஆரிய மதத்தினர். ஆரிய கட்டுக் கதை புராணங்களில் தமிழர் அறிவியலையும் , மெய்யியலையும் நிறையவே நாம் காணலாம்.
சரி , இப்படியான அறிவுக்கு சொந்தக்கார்களான தமிழர்களுக்கு அந்த அறிவு இப்போது விளங்காமல் போன காரணம் என்ன?
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் , தமிழர்கள் அந்த அறிவின் தொடர்ச்சியை பெரிதளவு இழந்து விட்டார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
இருப்பினும் தமிழர்கள் அதை முற்றிலும் இழக்கவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இன்றும் வானியல் ஆய்வை பல தமிழர்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். வானியலையும் தமிழர் மெய்யியலையும் பிரிக்க முடியாது .
மெய்யியல் விழைவோர் நிச்சயம் வானியல் ஆய்வுகள் மேற்கொண்டு தான் ஆக வேண்டும். அப்படி மெய்யியல் ஆய்வு செய்வோர் தற்போது உள்ள வானியல் ஆய்வுகளைக் காட்டிலும் பல உண்மைகளை தெரிந்து வைத்துள்ளனர். அந்த வானியல் அறிவு மரபு இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த மரபை அழியாமல் பார்த்துக் கொண்டும் வருகின்றனர் சில தமிழர்கள். நிச்சயம் இவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை, ஆய்வுகளை, மெய்யியல் உண்மைகளை ஒவ்வொரு காலத்திலும் உலகிற்கு வெளிக் கொண்டு வருகிறார்கள், வருவார்கள்.
அத்தகைய ஆய்வுகள் உலகிற்கே வழிகாட்டும் படியும் அமையும் என்பதை தமிழர்கள் நாம் எண்ணிப் பெருமை படவேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.