01/07/2017

கிரிக்கெட்டும் இட ஒதுக்கீடும் - 1...


நீண்ட நாட்களுக்கு முன்னர் இணையத்தில் உலாவிக் கொண்டு இருந்த பொழுது ஒரு குறிப்பிட்ட செய்தியினைத் தாங்கிக் கொண்டு இருந்த ஒரு படத்தினைக் காண நேர்ந்தது. அந்தச் செய்தியின் அடிப்படைக் கரு இது தான்..

"அனைத்து அரசுத் துறைகளிலும் திறமைகள் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்து எடுக்காது சாதியின் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்து எடுத்து அவர்களுக்கு சலுகைகளும் வழங்குகின்றனர்.

பிற்படுத்தப்பட்டோருக்கு இத்தனை சதவீத இடங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு இத்தனை சதவீத இடங்கள் என்று வேலைகளை சாதிகளின் அடிப்படையில் வழங்குகின்றனர்.

இத்தகைய நடைமுறையை கிரிக்கெட் விளையாட்டிலும் அரசு நடைமுறைப்படுத்தலாமே...

இந்திய அணியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இத்தனை இடங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு இத்தனை இடங்கள் என்று இடங்களை வழங்கி அவர்களுக்கு ஏற்ப கிரிக்கெட் ஆட்டத்தின் விதிமுறைகளையும் மாற்றலாமே. தாழ்த்தப்பட்டவர் ஒரு ஓட்டம் எடுத்தால் அதற்கு நான்கு ஓட்டங்கள் வழங்கலாம்... பிற்படுத்தப்பட்டோர் ஒரு ஓட்டம் எடுத்தால்  இரு ஓட்டங்கள் வழங்கலாம்...இவ்வாறு இந்திய கிரிக்கெட் அணியின் சட்டங்களையும் மாற்றலாமே...

திறமைக்குத் தான் இந்நாட்டிலே மதிப்பு கிடையாதே" என்பதே அக்கருத்தின் சாரம்.
http://www.hoaxorfact.com/Politics/wipro-chairman-mr-azim-prem-jis-comment-on-reservation.html
இட ஒதுக்கீட்டை தாக்குவதாக அமைந்து இருக்கும் இக்கருத்தினை விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி கூறியதாகவே இணையத்தில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அது மெய்யா என்பது எனக்குத் தெரியவில்லை...மெய்யாக இருப்பீனும் அக்கருத்தினை கூறியவரைப் பற்றி காணவோ அல்லது விமர்சனம் செய்யவோ நமக்கு எந்த ஒரு தேவையும் இல்லை. நமது இலக்கு அவர்கள் கூறியதாக கூறப்படும் கருத்தே ஆகும்.

இட ஒதுக்கீட்டை கிரிக்கெட் விளையாட்டிலும் கொண்டு வர வேண்டியது தானே என்று நக்கலாக கூறப்பட்டு இருக்கும் கருத்தினைப் பற்றியே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது... கூடவே கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றியும் தான்.

இன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள மக்கள் பலருக்கு விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட் மட்டுமே. கிரிக்கெட் விளையாட்டுக்கு அத்தகைய வரவேற்பு...விளம்பரம்...மோகம் மக்களின் மத்தியில் இருக்கின்றது. இத்தகைய சூழலில் கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றியோ அல்லது அந்த விளையாட்டு வீரர்களை பற்றியோ நாம் மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் கூற ஆரம்பித்தால் இந்திய மக்களால் 'தேச விரோதி..தேச பக்தி இல்லாத அற்பப் பதர்..' என்றும் இன்னபிற வாழ்த்துரைகளிளாலும் சிறப்பிக்கப்படுவது நிச்சயம்.

ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாது நாம் சில விடயங்களைக் கூறியாக வேண்டிய நிலை நமக்கு இருக்கத் தான் செய்கின்றது. சரி இப்பொழுது நம்முடைய கருத்துக்களைக் காணலாம்...

இந்திய கிரிக்கெட் அணியில் நிச்சயமாக இட ஒதுக்கீட்டினை அரசு கொண்டு வந்தாக வேண்டும் என்பதே நமது முதன்மையான கருத்து. வில்லங்கமான கருத்தாகப் படுகின்றது தானே. ஆனால் இந்தக் கருத்தினை இப்போதைக்கு நடைமுறைப்படுத்த முடியாது. ஏனென்றால் எனது இந்தக் கருத்தில் சில பிரச்சனைகள் இருக்கின்றன.

முதல் பிரச்சனை :

இந்திய கிரிக்கெட் அணி என்ற ஒரு அணி உண்மையிலேயே நம் நாட்டில் கிடையாது. பிசிசிஐ (BCCI) என்ற தனியார் நிறுவனத்தின் அணி தான் இன்று இந்திய அணி என்ற பெயரில் விளையாடிக் கொண்டு இருக்கின்றது. மற்றபடி இந்திய அரசுக்கும் அந்த அணிக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.
இரண்டாவது பிரச்சனை,
அரசு நிறுவனங்களில் மட்டுமே இட ஒதுக்கீட்டினை அரசு அமல்படுத்த முடியும். தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை கொண்டு வரும் சட்டத்தினை அரசாங்கம் இன்னும் இயற்றவில்லை. ஆகையினால் பிசிசிஐ தேர்ந்து எடுக்கும் கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீட்டினை இந்திய அரசால் கொண்டு வர முடியாது. நிற்க.

இப்பொழுது சில... இல்லை இல்லை பல கேள்விகளும் மாற்றுக் கருத்துக்களும் உங்களின் மனதில் நிச்சயம் தோன்றி இருக்கும். அவற்றிக்கு நான் விடையினைக் கூற வேண்டும் என்றால் நாம் சில விடயங்களைத் தெளிவாகப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

௧) இந்திய அணி என்றால் என்ன?

இந்திய தேசத்து அணி என்றால் இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியான விளையாட்டுத் துறையின் கீழ் அவை வர வேண்டும். அரசாங்கமே விளையாட்டு வீரர்களையும் அணிகளையும் தேர்வு செய்யும். அவர்களுக்கு உரிய ஊதியங்கள் மற்றும் இன்ன பிற சலுகைகள் ஆகிய அனைத்தையும் அரசே கவனித்துக் கொள்ளும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய அரசாங்கக் கல்லூரிகளை எடுத்துக் கொள்ளுங்கள்... அவற்றின் அனைத்து செயல்பாடுகளும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்... அத்தகைய கல்லூரிகளையே நாம் அரசுக் கல்லூரிகள் என்று ஏற்றுக் கொள்வோம். மாறாக தனியார் கல்லூரிகளை நாம் அரசாங்க கல்லூரிகள் என்று அழைக்க முடியாது. அவ்வாறே இந்திய விளையாட்டு அணிகளிலும் எந்த விளையாட்டுகளில் அனைத்து பொறுப்புகளும் அரசின் வசம் இருக்கின்றனவோ அந்த விளையாட்டு அணிகளே இந்திய அணிகள் ஆகும். மாறாக எந்த ஒரு தனியார் நிறுவனமோ தனது அணியினை இந்திய அணியாக கூறுவது இயலாது... அது சரியான ஒன்றாகவும் இருக்காது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.