யார் இவர்?
1944ம் ஆண்டு நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் மே மாதம் 22ம் தேதி பிறந்தவர் வை.கோபால்சாமி.
பள்ளிப்படிப்பில் எட்டு வயது முதல் கல்லூரி படிப்பு வரை பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்துக் கொண்டவர்களில் இவரே முதல் பரிசுக்குச் சொந்தக்காரர்.
பேச்சுப் போட்டி மட்டுமா, வாலிபால் விளையாட்டு வீரர்.
தமிழ் இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர்.
உலக வரலாறுகளை மடை திறந்த ஆறாய் ஓடும்.
1965ம் ஆண்டு, சென்னை போலீஸார் நடத்திய கட்டுரைப்போட்டியில், மாநிலக் கல்லூரி மாணவரான கோபால்சாமிக்கே முதல் பரிசு.
1969ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சிறந்த பேச்சாளர் விருது வாங்கியவர்.
தி.மு.க.வில் மாணவர் காலத்திலிருந்தே ஈடுபாடு கொண்டவர்.
மேடையில் ஏறினால், எந்த குறிப்புகளையும் பார்க்காமல் மணிக்கணக்கில், கேட்பர்களின் மனம் ஈர்க்கும் வகையில் பேசக்கூடிய பேச்சாளர்.
1971-77 வரை குருவிக்குளம் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்.
1977ல் மிசா கைதி.
1977-79 நெல்லை-குமரி மாவட்ட தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர்.
மூன்று முறை மாநிலங்களவை எம்.பி.
இரண்டு முறை மக்களவை எம்.பி.
30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
தி.மு.க.வின் போர்வாள் என்று கலைஞரின் வர்ணனைக்குள்ளானவர்.
தி.மு.க.வின் மேடை பேச்சாளர்களில், 1980 முதல் தி.மு.க.வில் அதிகம் ஈர்க்கப்பட்டவர் வை.கோபால்சாமி.
தி.மு.க..வில் வைகோவின் வளர்ச்சி என்பது செயற்கையானது அல்ல. அவரது வளர்ச்சி என்பது திட்டமிடாத ஓர் வளர்ச்சி. கலைஞரின் அன்புக்கு பாத்திரமானத்தால், அக்கட்சியில் அவருக்கு எல்லாம் சாத்தியமாகியது.
1989ம் ஆண்டு வரை வைகோவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். ஆனால், யாருக்கும் தெரியாமல், ஏன் கலைஞருக்கே தெரியாமல் தமிழ் ஈழத்துக்கு ரகசியமாக பாஸ்போர்ட் இல்லாமல், கள்ளத்தோணி மூலம் சென்றார். 23 நாட்கள் அவர் அங்கே தங்கி இருந்தார். அவர் சென்ற பிறகே, கலைஞருக்கு தகவல் கிடைக்கச் செய்தார். அதுதான் கலைஞருக்கு வைகோ மீது ஏற்பட்ட முதல் கசப்பு.
வைகோ ஈழத்திலிருந்து வெளியே வரும் வரை கலைஞரும், வைகோ பயணத்தை வெளியிடாமல் இருந்தார்.
ஈழத்திலிருந்து வந்ததும், கலைஞர் சந்தித்து மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு கலைஞருக்கும் வைகோவுக்கும் சில மனக்கசப்புகள் வளர்ந்துக் கொண்டே இருந்தன.
அந்த நேரத்தில் அ.தி.மு.க.வில் காட்டு தர்பார் போல ஆட்சி நடந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடியது. அ.தி.மு.க.வை எதிர்த்து தி.மு.க.வில் ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு பொதுக்கூட்டங்கள் நடந்தன. பல மேடைகளில் வைகோவின் குரல் ஒலித்தது.
தி.மு.க.வில் வைகோவின் இமேஜ் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் வைகோவை தி.மு.க.வின் போர்வாள் என்று வர்ணிக்கத் தொடங்கினார் கலைஞர். நிலைமை இப்படி இருக்க, கலைஞரின் மனசாட்சி(?) என்று தி.மு.க.வினர் பின்னாளில் புளங்காகிதம் அடைந்த முரசொலி மாறன், வைகோவை ஓரம்கட்டும்படி மாமாவிடம் புகார் வாசிக்கிறார்.
காரணம், டெல்லியில் முரசொலி மாறனைவிட வைகோவுக்கு அதிக செல்வாக்கு இருப்பது. இந்த காரணத்தை மாமா ஏற்றுக் கொள்வாரோ இல்லையோ என்று நினைத்து, இரண்டாவதாக, கட்சியில் ஸ்டாலினை வாரிசாக கொண்டு வரும் வேளையில் வைகோவுக்கு அபரிதமான வளர்ச்சியும் செல்வாக்கும் இருப்பது நல்லதில்லை என்று சொல்கிறார் மாறன்.
குடும்பத்திற்காக அன்று முதல் பலி கொடுக்கப்பட்டவர் தான் வைகோ.
திட்டமிட்டு, அவரை கட்சி ஒதுக்குகிறது. அவரை யாரும் மேடைகளில் பேச அழைக்க வேண்டாம் என்று ரகசிய உத்தரவுகள். இது கட்சியினருக்கு அரசல் புரசலாக தெரிய, கட்சியின் ஒரு சாரார் வைகோவை ஆதரிக்க முற்படுகின்றனர்.
இந்த ஆதரவுக் கூட்டத்தில் முக்கியமானவர் நாஞ்சில் மனோகரன்.
அவர் கலைஞர் கருணாநிதியை தாக்கி, ‘கருவின் குற்றம்’ என்று எழுதிய கவிதை, தினகரன் நாளிதழில் வெளியானது. இதற்கு மறுப்புக் கவிதை எழுதி, அதே நாளிதழில் வெளியிடச் செய்தார் கருணாநிதி. அதை எழுதிய கவிஞர், அன்றைய செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் மதுராந்தகம் ஆறுமுகம்.
கருணாநிதிக்காக, மறுப்புக் கவிதை எழுதும் அளவுக்கு மதுராந்தகம் ஆறுமுகத்துக்கு ஆற்றல் இருந்திருந்தால், அவர் எப்படி வைகோவின் ம.தி.மு.க.வுக்கு வந்தார் என்பதுதான் கேள்வி.
கடைசியில், எல்லாம் வைகோவின் தூண்டுதல் காரணமாக இந்த கலகங்கள் நடப்பதாக கலைஞர் அறிவித்தார். அவரை நீக்க வேண்டும் என்று குரல்களும் எழுந்தன. இந்த நிலையில், எல்லா பிரச்னைக்கும் மன்னிப்பு கேட்கிறேன் என்று கருணாநிதியிடம் விழுந்தார் வைகோ.
என்னடா இது. வெளியே போ என்றால், போகாமல் இங்கேயே இருக்கிறானே என்று நினைத்த கருணாநிதி. தனக்கு எதிராக கணக்கு கேட்ட எம்.ஜி.ஆரையே, ஒரு கணக்காக அனுப்பி வைத்தவர்தானே கருணாநிதி.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார் என்று எம்.ஜி.ஆரை அனுப்பி வைத்தார்.
வைகோ போர்வாள் ஆயிற்றே! அவரை எப்படி வெளியே அனுப்பலாம் என்று சிந்தித்த போதுதான், அவருக்கு மத்திய உளவுத்துறையிலிருந்து மர்மமான கடிதம் வந்தது.
அது மத்திய உளவுத்துறை அனுப்பிய கடிதம்தானா என்று இன்றளவும் சந்தேகம் இருக்கிறது.
விடுதலைப் புலிகள் மூலம் என்னை வைகோ கொலை செய்ய திட்டமிட்டதாக டெல்லியிலிருந்து உளவுத்துறை தனக்கு தகவல் கொடுத்து எச்சரிக்கையாக இருக்கும்படி ஓர் அறிக்கை வெளியிட்டார் கலைஞர்.
இது கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற சதி? என்றார் வைகோ.
வைகோ உடனே வெளியேறினாரா? இல்லை, ‘நாங்கள்தான் உண்மையான தி.மு.க. எங்களுக்குத்தான் அறிவாலயம் சொந்தம்’ என்று முழக்கமிட்டார்.
காரணம், அவருக்கு தி.மு.க.வில் இருந்து கிடைத்த உச்சப்பட்ட ஆதரவு. 30 மாவட்டச் செயலாளர்களில் கிட்டத்தட்ட 12 பேர் பகிரங்க ஆதரவு கொடுத்தார்கள். அன்றைய பொருளாளர் சாதிக்பாட்சா, வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள் மறைமுகமாக வைகோவை ஆதரித்தார்கள்.
அதுமட்டுமா, வைகோ என்ற நபருக்கு ஒரு நாளிதழே களத்தில் இறங்கியது. அது அன்றைய கே.பி.கந்தசாமி நடத்திய ‘தினகரன்’ நாளிதழ்தான். தி.மு.க.வை கைப்பற்ற முயற்சித்தார். கடைசியில், அம்முயற்சி பலனளிக்காமல் போனதால், ம.தி.மு.க. உருவானது.
அதுவும் நள்ளிரவில் சுடுகாட்டில். காரணம், வைகோ நீக்கியதை கண்டித்து பத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்தனர். அவர்களில் ஒருவரது சவ ஊர்வலம் முடிந்த பின்னர், அதே சுடுகாட்டில் சூளூரைத்தார் வைகோ.
அங்கே மலர்ந்ததுதான் மறுமலர்ச்சி தி.மு.க...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.