27/07/2017

அடுத்த பூதம் வருகிறது உஷார்...


‛ஆர்செப்' என சுருக்கமாகவும், ஆர்.சி.இ.பி., - 'ரீஜினல் காம்ரிஹென்சிவ் எகானமிக் பார்ட்னர்ஷிப்' எனும், மண்டல பொருளாதார புரிந்துணர்வு கூட்டமைப்பு தான் அந்த புதிய பூதம்..

டபிள்யு.டி.ஓ., எனப்படும், உலக வர்த்தக மையத்தின் ஆட்டங்களையும், அதன் கேடுகளையும் நாமறிவோம். அதனால் வந்த பல உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், அவற்றின் பின்விளைவுகள், கேடுகளையும் நன்கு அறிவோம்.

(உலகமயமாக்கல், திறந்த பொருளாதாரம் என்றெல்லாம் கதை விட்டு, இதன் பிறகே பல கேடுகளும் வரத் துவங்கின. பகாசுர பன்னாட்டு நிறுவனங்கள், பல சந்தைகளை கைப்பற்றுவதும், ஆளுமை செய்யும் யுக்திகளுடன் இயங்குவதும், இதற்கு பிறகே. சுரண்டலும்,  எளியோரை விரட்டுதலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்குவதும், சிறு அங்காடிகளை அழிப்பதும், இதன் பிறகே பெரிதாக உருவெடுத்தது)

ஆனாலும், நம் அரசுகள் கற்றதாக தெரியவில்லை. அரசு மாற்றம் ஏற்பட்டாலும், தீங்கு விளைவிக்கும் கொள்கைகளிலும், பேராபத்தான ஒப்பந்தங்களிலும் மாற்றம் இருப்பதில்லை.

இந்தியா, சீனா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா மற்றும் பத்து தெற்காசிய நாடுகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு இது; பல நாடுகளுக்கான புரிந்துணர்வு- ஒப்பந்தம் இது.

இதனால் பல பிரச்னைகள் வரும் என, பல வல்லுனர்களும் எச்சரிக்கை விடுகின்றனர். பெரிய நிறுவனங்களுக்கு சாதகமான பல ஷரத்துகள் இதில் உள்ளன.

அவை, பெரும் சக்தி பெற்று, அரசுகளின் மீது சர்வதேச அரங்கில் வழக்கு தொடர சாதகமான ஷரத்துகள் அவை. அவர்களின் நிறைவேற்றாத ஒப்பந்தங்களுக்கு, தவறான பொருள்களுக்கு, அபராதமோ, தண்டனையோ இல்லை.

முதலில், இம்மாதிரி ஒப்பந்தங்களில் இறக்குமதி வரிகள் தகர்க்கப்படும். உதாரணமாக, சமீபத்தில் கோதுமை. கடந்த செப்டம்பரில், 25 சதவீத இறக்குமதி வரியிலிருந்து, 15 சதவீதமாக குறைக்கப்பட்டு, பின், டிசம்பரில், வரியே இல்லாமல் ஆக்கப்பட்டது.

அப்படியென்றால், மகசூலின் போது நம் நாட்டில் விளையும் கோதுமைக்கு என்ன விலை கிடைக்கும்?


இந்த, ஆர்செப்-ஆல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவின் பாலுக்கு சந்தை ஏற்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும், பெரிய அடி விழும்.

உள்நாட்டு முதலீட்டாளர் போல, பன்னாட்டு நிறுவனங்களும் நடத்தப்பட வேண்டும் என்கிறது, ஒரு ஷரத்து.

அரசு உதவியுடன், நில அபகரிப்பு நிகழும். பல நாடுகளில், அன்னியர் நிலம் வாங்குவது கடினம். அந்த ஷரத்துகள் அசைக்கப்படும்; மாற்றப்படும். மொத்தத்தில், சிறு, குறு விவசாயிகளும், பழங்குடியினரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாவர்.

விதை -- ஒரு பெரிய சந்தை. இன்று, உலகின் பெரிய, ஆறு நிறுவனங்கள், ஒன்றை ஒன்று வாங்கி, மூன்றே மூன்று நிறுவனங்களாக திகழ்கின்றன. அவர்களின் சந்தை பசியும், கோர தாண்டவமும், மேலும் பெருகும்.
விதை, அதுவும், அடுத்த தலைமுறைக்கு தாக்கு பிடிக்க முடியாத சோதா விதைகளும், மரபணு விதைகளும் திணிக்கப்படும். விதை சட்டத்திற்கு வழி வகுக்கப்படும் என, தெரிகிறது.

கொலம்பியா மற்றும் பல நாடுகளில் இப்போது கொண்டு வரப்பட்ட தீவிர விதை சட்டங்கள்,- விவசாயிகள் விதைகளை சேமிக்கவோ, பரிமாறவோ, விற்கவோ கூடாது என்பது போல கொண்டு வர, திட்டமிருப்பதாக தெரிவிக்கின்றன.

இதனால், நம் விதை இறையாண்மை மட்டுமல்லாது, விவசாயிகளின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும், நம் கை விட்டு செல்லும். விதைகளின் விலையும், 200  - 400 சதவீதம் அதிகரிக்கும் எனவும், வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

காப்புரிமை, அறிவுசார் சட்டங்கள் என, பல வடிவிலும் அழுத்தங்கள். விதை பன்மயம் மற்றும் உயிரி பன்மயமும் அழியும் அபாயம்.
நியூசிலாந்தின், பொன்டெர்ரா எனும், பெரிய, அரக்கன் போன்ற, பால் நிறுவனம், நம் நாட்டுக்குள் இவ்வளவு நாள் வர முடியவில்லை. உலகின் பெரிய பால் ஏற்றுமதி நிறுவனம் இது.

நம் சந்தையின் மீது நெடுங்காலமாக கண் வைத்திருந்தது. இப்போது வெளிப்படையாகவே நம் பால் சந்தையை, 'அமுல்' போன்ற நிறுவனங்களிடம் இருந்து, பறிப்போம் என, சவால் விடுகிறது, இந்த ஒப்பந்தம்.

சிறு, குறு விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் கதி என்னவாகும்?
தரக்கட்டுப்பாடு எனும் பெயரில், ஜப்பான், ஆஸ்திரேலியா நிறுவனங்களுக்கு, கம்பளம் விரிக்கப்படும். தரம் மற்றும் சுகாதாரம் தேவை தான். ஆனால், அவையே சிறு வியாபாரிகளால் கையாள முடியாத ஷரத்துகளாக மாறினால், கஷ்டம் தான்.

ரசாயன விவசாயத்திற்கு கடை விரிப்பு..

இன்று, உலகின் பெரிய விவசாய, ரசாயன உற்பத்தி நிறுவனம், 'சைனீஸ் கெம்!' அவர்களது கொடிய ரசாயனங்களுக்கு சந்தை தேடுவர்... இல்லையா?

அதனால், கொடிய ரசாயன விற்பனை, உபயோகம் பெருகி, மேலும் பல இன்னல்கள் பெருகும். கால்நடை மருந்துகள், பண்ணை இயந்திரங்கள் என, எல்லாவற்றிலும் சுரண்டல், ஆதிக்கம் பெருகும்.
பெரிய அரக்கன் போன்ற நிறுவனங்கள், பெரிய அளவிலான வியாபாரம் போன்றவற்றால், சிறு வியாபாரிகள், தெருமுனை கடைகள் அழியும்.

இதனால், சாதாரண நுகர்வோரான நமக்கு பெரும் நஷ்டம். தொலை நோக்கில் பல பெரிய பிரச்னைகள் வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள் புறம் தள்ளப்படுவர். பலரின் வாழ்வாதாரங்கள் அழியும். விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்படுவர்.

இப்படி, பெரிய வணிகம் அமைந்த நாடுகளில், விவசாயிகளுக்கு பெரும் இன்னல்களே- கிடைத்துள்ளன.

ஆன்லைன் சில்லரை வியாபாரம் வேறு, பல இன்னல்களை கொண்டு வரும். மொத்தத்தில், சில மேலை நாட்டு நிறுவனங்களின் வியாபாரமும், கொள்ளை லாபமும் பெருக, நம் அனைவரது நல்வாழ்வும், வாழ்வாதாரமும், வாழ்கை தரமும், சமரசம் செய்யப்படும்.

இதில், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களான விவசாயிகள், பொதுமக்கள், நுகர்வோர் மற்றும் மாநில அரசுகள் என, யாரையும் கலந்து ஆலோசனை செய்யாமல், ஒளிவு மறைவுடன் நடக்கும் இந்த ஒப்பந்தங்கள், நல்லதே அல்ல. நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.

நாம் என்ன செய்யலாம்?

நாம் அனைவரும் முதலில், இந்த மாதிரியான திருட்டு ஒப்பந்தங்களின் மறைமுக செயல்திட்டத்தையும், கொடிய விளைவுகளையும் பொதுதளத்தில் அலசி, அரசுக்கும், ஊடகங்களுக்கும், இவற்றை எதிர்த்து குரல் கொடுத்து எழுத வேண்டும்.
பிரதமருக்கும், வர்த்தக அமைச்சருக்கும் நம் ஆட்சேபங்களை எழுதி, தெரிவிக்க வேண்டும்.

மிகவும் சதித்திட்டம் நிறைந்த மற்றும் ஜனநாயக விரோதமான ஒப்பந்தம் இது என, பறைசாற்ற வேண்டும்.

விவசாய தலைவர்கள், வி வசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களும், உடனே அரசுக்கு எழுத வேண்டும். இவற்றை பொது அரங்கில் விவாதிக்க வேண்டும்.

நம் மாநில அரசை, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுத சொல்ல வேண்டும். நம் அண்டை மாநிலமான கேரளா ஏற்கனவே, ‛ஆர்செப்'பை எதிர்த்தும், கண்டித்தும், மத்திய அரசுக்கு எழுத வேண்டும்.

பலதளங்களில் இதன் கேடுகளை எடுத்துரைத்து, உண்மையை பரப்பி, இது வந்துவிடாமலிருக்க ஆவண செய்ய வேண்டும்.

சரி செய்ய முடியாத, மீட்டெடுக்க முடியாத, பல ஷரத்துகள் நிறைந்தது இது. ஆகவே,‛ஆர்செப்'பில் மாற்றங்களை நாம் கேட்க வேண்டாம். ஒட்டு மொத்த ரத்து தான், நம் கோரிக்கையாக இருக்க வேண்டும்.

அனந்து, ஒருங்கிணைப்பாளர்,
பாதுகாப்பான உணவிர்கான கூட்டமைப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.