04/07/2017

நடவடிக்கை எடுக்கப்படுமா? அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது அம்பலம்...


அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்ய ஆரம்பித்தார் ஓபிஎஸ்.

அப்போது சசிகலா முதல்வராக பதவியேற்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் சகல வசதிகளுடன் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது கூவத்தூர் கிராமமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே கூவத்தூர் விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சென்னை ராயபுரம் மீனவர்கள் நலசங்கத்தினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தனர்.

அதற்கு பதிலளித்த நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட் சட்டவிரோதமாக கட்டியிருப்பதாக கூறியுள்ளார். மேலும் கடலோர ஒழுங்குமுறை விதியில் இருந்து கூவத்தூர் விடுதிக்கு விலக்கு ஏதும் தரவில்லை என அவர் கூறினார்.

கூவத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் நல சங்கத்தினர் புகார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மீனவர்கள் நலச்சங்கத்தினர் புகார் மனு அனுப்பியுள்ளனர்.

மேலும் விடுதி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.