31/07/2017

பாண்டியர் கால நீர்ப்பாசன முறைகள் குறித்த கல்வெட்டு...


பாண்டியர் கால நீர்ப்பாசன முறைகள் குறித்த கல்வெட்டு, குருவித்துறை பெருமாள் கோயிலில் இடம் பெற்றுள்ளதாக, தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்தார்.

தானம் அறக்கட்டளை சார்பில், குருவித்துறை சித்திரை ரத வல்லப பெருமாள் கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய நடைபயணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தொல்லியல் அறிஞர் முனைவர் வெ. வேதாசலம் பேசியது...

பராக்கிரம பாண்டியன் காலத்தில் அரசாங்க அதிகாரியாக குருவித்துறை பகுதியில் பணியாற்றிய மாதவனான சோழ முத்தரையன் என்பவர், தனது நிலத்துக்காக வைகையிலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் மூலமாக பாசனம் செய்து வந்தார்.

அவ்வூரைச் சேர்ந்த மற்றொருவர், அக்கால்வாய்க்கு மேல் மற்றொரு கால்வாயை உருவாக்கி, தனது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சினார்.

இதனால், ஊருக்குள் பெரும் சிக்கல் ஏற்பட்டது. ஊர் சபையாலும் தீர்த்து வைக்க இயலாமல், கடைசியாக பாண்டிய மன்னனிடம் அவ்வழக்குச் சென்றது. பராக்கிரம பாண்டியன் இதனை விசாரணை செய்து, இறுதியாக ஒரு கால்வாய்க்கு மேல் மற்றொரு கால்வாய் உருவாக்குவது சரியான நடைமுறையன்று எனத் தீர்ப்பளித்து, அத்தீர்ப்பினை குருவித்துறை கோயில் கல்வெட்டிலும் பொறித்தார்.

காலுக்கு மேல் கால் கல்லலாகாது என்பது தான் நீர்நிலை குறித்த புகழ்பெற்ற கல்வெட்டுச் செய்தி.

நீர்ப்பாசனத்தில் இந்த நடைமுறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது என்றார்.

வரலாற்று அறிஞர் முனைவர் இரா. வெங்கட்ராமன் பேசுகையில், குருவித்துறைக்கு அருகே ஓடும் வைகை வலமிருந்து இடமாகத் திரும்புகின்ற வலஞ்சுழியில் இப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் இவ்வூர் பாண்டியனின் பெயரால் ஸ்ரீவல்லபபுரம் என்றே அழைக்கப்பட்டது. அப்பெயராலேயே இங்குள்ள திருமாலும் அழைக்கப்படுகிறார் என்றார்.

குருவித்துறையின் வரலாற்றுப் பெருமைகளை விளக்கும் துண்டறிக்கையினை, முனைவர்கள் வெ. வேதாசலம், இரா. வெங்கட்ராமன் ஆகியோர் வெளியிட, குருவித்துறை ஊராட்சித் தலைவர் கர்ணன் பெற்றுக்கொண்டார்.

பாரம்பரிய ஒருங்கிணைப்பாளர் கே.பி. பாரதி மற்றும் நடைபயணக் குழுவினருடன் ஊர்ப் பொதுமக்களும், சோலை வட்டாரக் களஞ்சியத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்பட பலர்பங்கேற்றனர்...

செய்தி - 2016...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.