26/07/2017

ஆரிய வித்து தேடி அலையும் ஹிட்லர் வாரிசுகள், அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள் ...


உலக வரலாற்றில் ஓர்ஆச்சரியமான இணைமுரண் உண்டு. மிகச் சிறிய இனமாக இருந்தாலும், உலகெங்கும் உள்ள அதிகார மய்யங்களில் பரவி, நுழைந்து அதன் உச்சியை எட்டி, ஆட்டிப் படைப்பவர்கள் யூதர்கள். தங்களைத் தொடர்ந்து அத்தளத்தில் இறுத்திக் கொள்ளவும் சரியான நகர்வுகளைச் செய்பவர்கள். அரசியல், அதிகாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்துத் துறைகளின் மூலம் தங்கள் ஆதிக்கத்தை உலகம் முழுவதும் வைத்திருப்பவர்கள். இதே பண்பு நலன்களைக் கொண்ட மற்றோர் இனம் உண்டென்றால் அது சர்வ நிச்சயமாக இந்தியாவில் இருக்கும் ஆரிய இனம் தான்; பார்ப்பனர்கள் தான்.

இவ்விரு இனத்தினைக் கூர்ந்து நோக்குபவர்களுக்கு இவ்வுண்மை புலப்படும். சரி இது இணை, முரண் என்ன? உலகின் உயர்ந்த இனம் என் ஆரிய இனம் தான் என்று நெஞ்சு நிமிர்த்திய ஹிட்லர் தான் யூத இனத்தைப் பூண்டோடு தன் நாட்டிலிருந்தும் தான் பிடிக்கும் நாட்டிலிருந்தும் அழிக்க முனைந்தவன் என்பது தான் அந்த முரண்!

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிளம்பிய ஆரியர்கள், கைபர், போலன் கணவாய்களின் வழியாக இந்தியா வந்தார்கள். பிறகு இந்தியப் பெருநிலமெங்கும் பரவினார்கள். இந்தியாவின் அதிகாரங்களில் மதத்தின் வாயிலாகவும், பண்பாட்டு வாயிலாகவும் ஆதிக்கத்தைச் செலுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இப்படி நாம் சொல்லத் தொடங்கினால்... சேச்சே... ஆரியர்களாம்... கணவாய்களாம்... சுத்த பேத்தல்... ஆர்யன இன்வேஷன் தியரி இஸ் எ மித்-னு ப்ரூவ் ஆயிடுச்சு தெரியுமா? என்று எதையோ தின்ற பாணியில் முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்பவர்களைப் பார்த்திருப்போம்.

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை மறுக்க முடியாமல் சிலர் ஆரியர்கள் வேறு; பார்ப்பனர்கள் வேறு. இவர்கள் அந்தணர்கள். இங்கேயே வாழ்ந்தவர்கள் என்று மழுப்புபவர்களும் உண்டு. டி.என்.ஏ-விலேயே மாற்றம் இல்லை தெரியுமா? என்று அறிவியலைக் காட்ட முற்படுவோரும் உண்டு.

இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் பணி நமக்கு வேண்டாம்... பரிசுத்த ஆரியர்கள் அதைச் செய்வார்கள். அவர்களிடம் செல்வோம் வாருங்கள்!

காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதி! இயற்கை எழில் சூழந்த இப்பகுதியில் வாழும் பல்வேறு பழங்குடி இன மக்களில் டார்ட்களும், அவர்களில் சிறு குழுவினரான ப்ரோக்பாக்களும் யார் என்பதை அவர்கள் வாயிலாகவே தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஆறு அடிக்குக் குறையாத உயரமும், சிவந்த மேனியும், கூர்மையான முக அமைப்புகளும், நீல நிறக் கண்களும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் இவர்கள். நாங்கள் உண்மையான ஆரியர்கள். எங்களின் பூர்வீகம் கில்கித். எங்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் சிதையாமல் அழியாமல் காத்துவருகிறோம். எங்கள் மூதாதையர்கள் எங்களுக்கு அந்த உணர்வை ஊட்டியிருக்கிறார்கள். என்கிறார்கள் இம்மக்கள்.

நாங்கள் அலக்சாண்டரின் படை வீரர்கள் என்று என் தாத்தா சொல்வார். அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்துவிட்டுத் திரும்பும்போது, போரில் தோற்றுவிட, சிலர் இமாலயப் பகுதியிலேயே தங்கிவிட்டார்கள். அவர்களின் வாரிசுகள் தான் நாங்கள். நான் அலெக்சாண்டர் படம் பார்த்தேன். அதில் அவர்கள் அணிந்திருக்கும் போர் உடை எங்களின் பாரம்பரிய உடையை அப்படியே ஒத்திருப்பதைக் கண்டேன். என்கிறார் அவ்வினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

ப்ரோக்பா மக்களிடையே மனைவிகளை மாற்றிக் கொள்ளும் பழக்கம் உண்டு என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி (2006 மார்ச் 13) ஒன்று தெரிவிக்கிறது. பலதார மணம் இரு பாலருக்கும் முற்காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த நூற்றாண்டில் பெண்கள் பலரைத் திருமணம் செய்யும் பழக்கம் நிறுத்தப்பட்டு, ஆண்களுக்கு மட்டும் இப்போது பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார் சார்ட் இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞரான டாஷி என்பவர்.

முன்பு யார் இருந்தாலும், அவர்களின் முன்னிலையில் மாறிமாறி முத்தம் பரிமாறிக் கொண்டிருந்ததாகவும், வரிசையில் நின்று முத்தமிட்டுச் செல்லும் பழக்கம் 1970களுக்குப் பிறகு மாற்றப்பட்டு, வெளியாட்கள் இல்லாமல் தான் இப்போது அது நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் உள்ள ஆரிய இன மக்கள் பற்றி தன்னுடைய ஆவணப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சஞ்ஜீவ் சிவன் (பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர்).

தூய ஆரியர்கள் எனப்படும் இம்மக்கள் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து பலரும் மேற்கொண்டு வருகின்றனர். பல நாடுகளில் இருந்தும் வரும் மாணவர்கள் இவர்களின் பூர்வீகம், பண்பாடு போன்றவற்றை ஆய்வு செய்துவருகிறார்கள். அவ்வாறு வருவோரில் ஜெர்மனில் இருந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமானது. அதிலும் ஜெர்மானியப் பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கது. அவர்களின் நோக்கம் வெறும் ஆய்வு மட்டுமல்ல என்கிறது சஞ்சீவ் சிவனின்ஆத்துங் பேபி: தி ஆர்யன் சாகா என்ற ஆவணப்படம்.

2010 கோவா திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. வெகு எளிதில் யாரும் சென்று பழகி, பதிவு செய்துவிடமுடியாத செய்திகளைத் தருகிறது இவரது ஆவணப்படம். அப்பகுதியில் உலவும் ஜெர்மானியப் பெண்களைத் தொடர்ந்து சென்றும், அவர்களின் நடவடிக்கைகளைப் படம்பிடித்தும், பின்னர் அவர்களிடம் பேசி பேட்டி வாங்கியும் பதிவு செய்துள்ளார் தனது ஆவணப்படத்தில்!

ஆரிய இனத்தூய்மை பற்றியும், மேன்மை பற்றியும் பேசி, அதற்காக பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்த ஹிட்லரின் சிந்தனைகளும், இனப்பற்றும் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதையே அவை உறுதி செய்கின்றன.

ஆய்வுக்காக என்று வரும் பெரும்பாலான ஜெர்மன் பெண்களின் முக்கிய நோக்கம், தூய ஆரிய இனத்தை மீண்டும் தங்கள் நாட்டில் உருவாக்குவது. அதற்காக அவர்கள் மேற்கொண்டிருக்கும் பணி, தூய ஆரிய இனம் என்று கருதப்படும் லடாக் பகுதியில் வாழும் டார்ட் இனத்து ஆண்களுடன் பழகி, தூய ஆரிய வித்துகளைப் பெற்று, அவர்களின் மூலம் கரு உருவாக்கிக் கொண்டு செல்லுவது! இதை அந்தப் பெண்கள் பெருமையுடன் ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள்.

நான் இந்தப் பணியை மேன்மையானதாக நினைக்கிறேன். இதைச் செய்வதிலும் சொல்வதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என் பிள்ளைக்கு நான் அவனின் தந்தை பற்றிச் சொல்வேன். அவன் மிகச் சிறந்த ஆரிய இனத்தவனாக, அறிவாளியாக வளர்வான். என்கிறார் இவ்வாறு ஆரியக் கருவைச் சுமக்க வந்திருக்கும் ஜெர்மானியப் பெண் ஒருவர். இவர்களுக்கு வித்து தானம் தந்து ஆரிய இனத்தைப் பெருக்கும் முயற்சியில் உறுதுணையாயிருக்கும் ப்ரோக்பா இனத்து ஆண்களும் அதை பெருமையோடு ஒப்புக்கொள்கிறார்கள்.

ஒரு ஜெர்மன் பெண் என்னிடம் வந்தாள். நான் அவர்களோடு தங்கினேன். மகிழ்ச்சியாக இருந்தோம். அவர்களோடு உறவு கொண்டேன். எனக்கு ஒன்றும் செலவு இல்லை. அனைத்தையும் அவ்ர்களே பார்த்துக் கொண்டார்கள். அதற்கு அவர்கள் பணமும், பரிசுகளும் தருவார்கள். சாக்லெட் தருவார்கள். அதை என் பிள்ளைகளுக்கு நான் கொடுப்பேன். என் குடும்பத்துக்கு இது தெரியாது. அவர்கள் ஜெர்மனியில் இருந்து வருகிறார்கள். நாங்கள் ஆரியர்கள். தூய ஆரிய இனத்தின் வித்துகளை அவர்கள் அங்கே எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். என் குழந்தைகள் வருங்காலத்தில் ஜெர்மனியில் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்ததும் தந்தையாகிய என்னை வந்து சந்தித்து அவர்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறார் ஒருவர்.

5, 6 ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஜெர்மானியப் பெண்கள் வந்தார்கள். அவ்ர்கள் ஆரிய இன வித்துகளைப் பெற விரும்பினார்கள். என்கிறார் மற்றொரு இளைஞர். இது ஒருவர், இருவரோடு முடியும் விசயமில்லை. இவ்வாறு ஆரிய விதைகளைப் பெற்றுக் கொண்டு செல்ல ஜெர்மானியப் பெண்கள் வருவது இப்போது மட்டும் நடைபெறுவதில்லை. பல்லாண்டுகளாக இது நடைபெற்றுவருவதாகக் கூறுகிறார் நியூ ஜெர்ஸி பல்கலைக் கழகத்தின் மானுடவியல் ஆய்வாளர் மோனா பான்.

நான் யார் என்பது அவசியமில்லாதது. இது நான் தொடங்கியதில்லை... என்னோடு முடியப்போவதுமில்லை. என்று ஆவணப்படத்தில் ஒளிமறைவில் பேட்டியளித்திருக்கும் ஜெர்மானியப் பெண் சொல்வது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

1979-ஆம் ஆண்டுவாக்கில் இரண்டு ஜெர்மானியப் பெண்கள் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உலவுவதைப் பார்த்துப் பிடித்த ராணுவம் அவர்களை விசாரித்தபோது இவ்வுண்மை தெரியவந்ததாகச் சொல்கிறார் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்குப் பேட்டியளித்த டாஷி.

இது குறித்து மேலும் நாம் தகவல்களைத் தேடியபோது, எவரெஸ்ட் ஏறிச் சாதனை படைத்தவர்களில் ஒருவரான ஹெச்.பி.எஸ். அலுவாலியா எழுதி, 1980-ல் வெளிவந்த தனித்து வாழும் அரசாட்சி: லடாக் (Hermit Kingdom: Ladakh) நூல் இது குறித்த தகவல்களை வெளிப்படுத்துகிறது.  இது பற்றிக் குறிப்பிடும் அலுவாலியா, ஜெர்மானியப் பெண்கள் தூய ஆரியர்களைத் தேடிவந்து கருவுற்றுச் செல்வது தொடர்ந்து நடக்கிறது. இது ஆரிய இனப் பெண்களுக்குத் தெரிகிறதோ, இல்லையோ, அவ்வினத்து ஆண்கள் இவ்வெள்ளைக்காரப் பெண்களுடன் உறவு கொள்வதை மகிழ்ச்சியாகவே நினைக்கிறார்கள். என்கிறார்.

ஜெர்மனியில் மீண்டும் துளிர்த்துவரும் ஆரிய இன மேன்மைக் கோட்பாட்டின் வெளிப்பாடாக இதை நாம் கருதலாம். ஹிட்லர் சொன்ன ஆரிய இனமும், லடாக்கில் வசிக்கும் ஆரிய இனமும் ஒன்று தானா? ஹிட்லரின் ஆரிய இனக்கோட்பாடு வெள்ளைக் காரர்கள் உருவாக்கிய போங்கு என்றெல்லாம் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். உண்மை ஆரியர்கள் இவர்களே என்றும் அவர்கள் சொல்கிறார்கள். சரி, இந்த உண்மை ஆரியர்கள் வேறு; நம்மூர் பார்ப்பனர்கள் வேறா என்னும் கேள்வி ஒன்று தொக்கி நிற்கிறதல்லவா? அதற்கும் விடை கிடைக்கிறது வேறு சிலரின் ஆய்வில். புத்த மதத்தைத் தழுவியிருக்கும் இவர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் இந்து பார்ப்பனர்களுடையதாகவே இருக்கிறது.

கோமாதா வழிபாடும், இவர்களின் தெய்வங்களும் பார்ப்பனப் பண்பாட்டை ஒத்துள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மஹாபாரதம் மற்றும் இந்து ஓவியங்களில் இவர்கள் குறிப்பிடப்பட்டிருக் கிறார்கள் என்றும் சொல்கிறது அத்தகவல்.

ஆடு, மாட்டு ஓட்டி வந்த ஆரியக் கூட்டம் இங்கிருந்த பெண்களுடன் கலந்து தான் இந்தோ-ஆரிய இனம் உருவானது. அதனால் தான் பஞ்சமர்களுக்கும் கீழாக பெண்களைக் கருதுகின்றன இந்து மதத் தத்துவங்கள். அதே போல, கிரேக்கர்களின் டி.என்.ஏ-வை ஒத்த டி.என்.ஏ-க்கள் வடஇந்தியாவில் உள்ள ஆரியர்களிடம் இருப்பதாகக் கூறும் ஆய்வும் ஆரியப் படையெடுப்பை நிறுவும் ஆதாரங்களாக வருங்காலத்தில் இருக்கும்.

ஆரிய இனத்தின் மேன்மை என்னும் கருத்தாக்கத்தில் ஸ்வஸ்திக் சின்னம் கொண்ட நாஜிக் கும்பலும், காவிக் கும்பலும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள் என்பதில் இனியும் அய்யமிருக்க முடியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.