தனது தாயகத்தை அடையாளம் காண முடியாமலும், அதன் மீதுள்ள அடிமை நுகத்தடியை நொறுக்க முடியாமலும் பலவீனமாய் உள்ள பாட்டாளி வர்க்கம் சோஷலிப் புரட்சி நடத்திடுமா?
இந்த வினா, இந்தியாவில் அடிமை நிலையில் வைக்கப்பட்டுள்ள எல்லாத் தேசிய இனங்களுக்கும் பொருந்தும்.
ஏகாதிபத்தியத்திடமிருந்து காலனி நாடுகள் விடுதலை பெறத்தான் தன்னுரிமையை (சுயநிர்ணய உரிமையை) பயன்படுத்த வேண்டுமே தவிர, இந்தியா போன்ற விடுதலை அடைந்த நாடுகளில் தன்னுரிமையைப் பயன்படுத்தக்கூடாது என்று சில கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறுவது சரியா?
இந்தக் கருத்து சரியல்ல.
ஒரு தேசிய இனம் தனக்கான தேச அரசை நிறுவிக் கொள்வது அதற்குள்ள அடிப்படை உரிமையும் கடமையும் ஆகும்.
ஒரு மக்கள் சமுதாயம் ஒரு தேசிய இனமாக இருக்கும் காலம் வரை அது தனக்கான சுதந்திர அரசை அமைத்துக் கொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகப் பெற்றுள்ளது.
ஏகாதிபத்தியத்திடமிருந்து மட்டுமல்ல ஒடுக்குகின்ற ஒரு பெருந்தேசிய இனத்திடமிருந்தும் விடுதலை பெற வேண்டும்.
தனது அரசியல், பொருளியல், பண்பியல் உரிமைகளையும் மொழியையும் ஒடுக்குகின்ற எந்த அரசிடமிருந்தும் ஒரு தேசிய இனம் விடுதலை பெறுவதற்கான தன்னுரிமை அதனிடம் எப்போதும் உள்ளது.
அது மட்டுமல்ல, 'ஏகாதிபத்தியம்", 'காலனி" என்ற வரையறுப்புகளில் ஏற்பட்டுள்ள இக்கால வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
லெனின் காலத்தில் இருந்த ஏகாதிபத்தியங்களும் காலனிகளும் அதே வடிவத்தில் இன்றில்லை.
இந்தியா காலனியாக இருந்தது மட்டுமே காரல் மார்க்சுக்குத் தெரியும். இந்தியாவில் வளர்ச்சியடைந்த பல தேசிய இனங்கள் இருப்பது அவருக்குத் தெரியாது என்று இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு கூறினார்.
காலனியாக இருந்த இந்தியாவில் இருந்த தேசிய இனங்கள் பற்றி லெனின் எதுவும் சொல்லவில்லை.
ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையடைந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெரும்பான்மை தேசிய இனம், சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக்குகின்றன.
இதற்கு வசதியாக வாக்குரிமையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஜனநாயகப்படி தான் ஆட்சி நடக்கிறது என்று பெருந்தேசிய இன ஒடுக்குமுறையாளர்கள் கூறுக்கொள்கின்றனர்.
தமிழர்களும் இந்திக்காரர்களும் இன்னபிற இனத்தாரும் ஒரே அரசின் கீழ் யாரால் பிடித்து வைக்கப்பட்டார்கள்?
தமிழர்களையும் சிங்களர்களையும் ஒரே அரசின் கீழ் கட்டிப் போட்டவர்கள் யார்?
தனித்தனி அரசு நடத்திக் கொண்டிருந்த வெவ்வேறு தேசிய இனங்களை ஒரே ஆட்சியின் கீழ் பிடித்துவைத்தவர்கள் ஏகாதிபத்திய ஆக்கிரமைப்பாளர்கள் தாம்.
ஏகாதிபத்தியம் போனபின், பற்பல தேசங்கள், தங்கள் ஒப்புதலின்றி ஒரே ஆட்சியில் நீடிக்க வேண்டிய கட்டாயம் என்ன?
மெய்யான சம உரிமை நிலவி, தேசிய இனங்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தி, அவை தம் சொந்த விருப்பத்தின் பேரில் சேர்ந்திருந்தால் தவறில்லை.
காலனிய நிலையிலிருந்து விடுதலை பெற்ற பின், பெருந்தேசிய இனம் தனது பெரும்பான்மையைப் பயன்படுத்தி சட்டதிட்டங்களை உருவாக்கிக் கொண்டு, தனது பெரும்பான்மையின் காரணமாகத் தேர்தல்களில் கூடுதல் இடங்களைப் பிடித்துக் கொண்டு சிறுபான்மைகளை அடக்கிவைக்கிறது. அடையாளம் தெரியாமல் வைக்கிறது.
அதுமட்டுமல்ல இந்தியர், இலங்கையர் என்ற தனது முகமூடியைத் தமிழர்களுக்கு மாட்டிவிட்டது. இது புதுவகைக் காலனியம் ஆகும். புதுவகை ஏகாதிபத்தியம் ஆகும்.
முன்னது அயல் ஏகாதிபத்தியம்( Foreign Imperialism) பின்னது அண்டை ஏகாதிபத்தியம்((Neighbour Imperialism )) முன்னது பீரங்கிகளை வைத்துக் காலனி பிடித்தது. பின்னது வாக்குச்சீட்டுகளை வைத்து காலனியம் நடத்துகிறது.
அயல் பிரித்தானிய ஏகாதிபத்தியம் அப்போது இந்தியாவிற்கு நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்தது. அண்டை இந்திய ஏகாதிபத்தியம் இப்போது மார்வாடி குசராத்தி சேட்டுகள் மூலம் நிதி மூலதனத்தைத் தமிழ்நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது.
இன்று அயல் ஏகாதிபத்தியங்களும், அண்டை ஏகாதிபத்தியமும், கூட்டு சேர்ந்தே இருக்கின்றன.
ஏகாதிபத்தியமும், இந்திய தேசியமும் தவிர்க்க முடியாத கூட்டாளிகள், ஏனெனில் இந்த இருவகை ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நலனும் ஒருங்கிணைந்தவைதாம்.
அயல் ஏகாதிபத்தியத்திய ஆட்சியில் இந்தியக் காலனிக்கு ஒரே எஜமானன். அண்டை ஏகாதிபத்திய ஆட்சியில் தமிழ்நாட்டுக் காலனிக்கு பல எஜமானர்கள்.
ஒரு எஜமானன் இந்திய அரசு மற்ற எஜமானர்கள் அமெரிக்கா உள்ளிட்ட அயல் ஏகாதிபத்தியங்கள்.
ஏகாதிபத்தியக் காலனிகளுக்கு தான் தன்னுரிமை பொருந்தும் எனில், அண்டை ஏகாதிபத்தியக் காலனியாக அடிமைப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கும் அது பொருந்தும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் முன்வைக்க வேண்டியது தமிழ்த் தேசத் தன்னுரிமையே. தனி தமிழ் நாடே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.