பருவ மழை பொய்த்து போனதால் நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது.
இந்நிலையில், வறட்சியை சமாளிக்க செயற்கை மழையைப் பொழிய வைக்கும் திட்டத்தை கர்நாடகா அரசு செயல்படுத்தியுள்ளது
கடந்த ஆண்டு வறட்சியை சமாளிக்க ‘வருணா' என்னும் பெயரில் செயற்கை மழையைப் பொழிய வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. அதற்காக ரூ.35 கோடி ஒதுக்கியது. அமெரிக்காவில் இருந்து அதிநவீன வசதிகள் கொண்ட விமானம் பெங்களூரு ஜக்கூர் விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. முதற்கட்டமாக பெங்களூரு, யாதகிரி, கதக் ஆகிய 3 இடங்களில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட்,22) ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டு, ரேடார் கருவிகள் மூலம் எந்தெந்த பகுதிகளில் மேகத்தில் ரசாயன பொடிகளை தூவி, செயற்கை மழையைப் பொழிய வைக்கலாம் என கண்காணிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கர்நாடக வேளாண்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். பெங்களூருக்கு வரவழைக்கப்பட்ட அதிநவீன விமானம் பெங்களூரு புறநகர் ஆனேக்கல், ராமநகர் பகுதிகளில் வானில் பறந்தபடி செயற்கை மழை பெய்வதற்காக ரசாயன பொடிகளை தூவியது. ஆனால், மழை பொழிய வில்லை.
வழக்கமாக மதியம் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தான் செயற்கை மழை பொழிய வைப்பதற்கான சரியான நேரம். அப்போது ரசாயன பொடியை தூவினால், 15-20% வரை மழை பொழியும். ஆனால் பெங்களூரு புறநகர்ப் பகுதிகளில் மேகக் கூட்டங்கள் கலைந்து விட்டன. எனவே, சரியான நேரம் பார்த்து மீண்டும் ஒரு நாள் செயற்கை மழை பொழிய வைக்கப்படும் எனக் கர்நாடக வேளாண்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தெரிவித்துள்ளார்.
கடந்த 2003ஆம் ஆண்டு கர்நாடகாவில் செயற்கை மழை பொழிய வைக்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.