தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிடர்களின் வாரிசுகள் ராஜ ராஜ சோழனை வசை பாடுமளவுக்கு கன்னட/தெலுங்கர்களாகிய விஜயநகர ஆட்சியாளர்களை வசைபாடுவதில்லை என்பதை நான் பல இணையத்தளங்களிலும் வலைப்பதிவுகளிலும், கட்டுரைகளிலும் பார்த்திருக்கிறேன்.
ஏனென்றால் தமிழ்நாட்டில் வாழும் திராவிட எச்சங்களுக்கு அவர்களின் முன்னோர்கள் மீது இன்றும் அவ்வளவு பாசம் உண்டு.
உண்மையில் ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்குப் பின்னர், கன்னடர்/வடுகர்/மராத்தியர்களின் ஆட்சியின் கீழ் தான் தமிழ்நாட்டில் சாதிப்பாகுபாடு வளர்க்கப்பட்டது.
வந்தேறிகளுக்கு தமிழர்களின் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, தமிழர்கள் நிலமற்றவர்களாக்கப்பட்டனர்.
தமிழர்களின் கோயில்களிலிருந்து தமிழ் வெளியேறியது.
ராஜ ராஜ சோழனின் காலத்தில் மதிப்பும், மரியாதை மிக்கவர்களாக இருந்த தேவ அடியார்கள் தேவடியாளாக மாற்றப்பட்டதும், தமிழரல்லாத விஜயநகர, நாயக்க ஆட்சியாளர்களின் காலத்தில் தான் என்ற உண்மையை அவர்கள் பேசுவதில்லை.
பார்ப்பனர்களின் மீதுள்ள காழ்ப்புணர்வால், தமிழ் நாட்டிலுள்ளவர்கள் சிலர் ராஜ ராஜ சோழன் மீது அநியாயமாக குற்றங்களைச் சுமத்துகின்றனர்.
அதாவது தமிழர்கள் யாரைப் போற்றுகிறார்களோ, தமிழர்கள் யாரை எண்ணிப் பெருமைப் படுகிறார்களோ, எந்த ராஜ ராஜனின் கொடி ஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்து, தமது விடுதலைக்கு, ஆயுதமேந்திப் போராடுமளவுக்கு வீரத்தையும், வலுவையும் அளித்ததோ அந்த ராஜ ராஜ சோழனை இழிவு படுத்தி தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை இல்லாமல் செய்வது தான் அவர்களின் நோக்கம்.
ராஜ ராஜ சோழன் காலத்தில் தமிழ் கோலோச்சியிருந்த தமிழ்நாட்டுக் கோயில்கள் எல்லாம், பார்ப்பனர்களின் வசமானது கன்னட/தெலுங்கர்களின் விஜய நகர ஆட்சியில் தான்.
உதாரணமாக, ராஜ ராஜ சோழனின் கல்வெட்டுக்களில் கோயில்களுக்கும், சடங்குகளுக்கும், கோயில்களில் அன்றாடம் பாவனையில் உள்ள பொருட்களுக்கும் தூய தமிழ்ச் சொற்களே உள்ளன.
விஜயநகர (தெலுங்கு, கன்னட)ஆட்சியாளர்கள் தான், தெலுங்கு ரெட்டிகளையும், நாயுடுகளையும், நாயக்கர்களையும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் கிராமத் தலைவர்களாக, அதிகாரிகளாக நியமித்து, தமிழர்களின் விளைநிலங்களைப் பறித்து அவர்களிடம் கொடுத்தார்கள், அவர்களின் காலத்தில் நிலங்களை இழந்த வேளாளர்கள் தான், தமிழ்நாட்டை விட்டு, யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்கள் எனவும் சிலர் கூறுவர்.
விஜயநகர ஆட்சியாளர்களால் தான் இன்றும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் ரெட்டிகளும், நாயுடுக்களும், நாயக்கர்களும், ஏனைய தெலுங்கர்களும், தமிழர்களுடன் ஒப்பிடும் போது, அவர்களை விடக் கூடியளவு நிலச் சொந்தக்காரர்களாக உள்ளனர்.
ஆயிரம் வருடம் பின்னோக்கிப் போய் ராஜ ராஜ சோழனைத் தாக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்சங்கள் தமது முன்னோர்களாகிய விஜயநகர் ஆட்சியாளர்களை குற்றம் கூறாமல், ராஜ ராஜ சோழனை மட்டும் வசைபாடுவதன் சூக்குமத்தை தமிழர்கள் அறியார் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் போல் தெரிகிறது.
உண்மையில் இன்று தமிழ்நாட்டிலுள்ள சாதிப்பிரச்சனைக்கும், உண்மையான தமிழர்களின் நிலமற்ற இழிநிலைக்கும் கன்னட/தெலுங்கு வடுக/ மராத்திய ஆட்சியாளர்களைத் தான் வசைபாட வேண்டும்.
ஆனால் ராஜ ராஜ சோழனைத் தாக்குகிறவர்கள் கன்னட/தெலுங்குவடுக/ மராத்திய ஆட்சியாளர்களைத் அப்படிச் செய்வதில்லை, ஏனென்றால் அவர்களில் பெரும்பான்மையினரின் முன்னோர்கள் கன்னட/தெலுங்கு வடுகர்/மலையாளிகளாக இருப்பதாலோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
ராஜ ராஜ சோழன் காலத்தில் சாதிப்பாகுபாடும், பார்ப்பன ஆளுமையும் இருந்திருந்தால்,அவனுக்குப் பின்னால் ஆண்ட கன்னட/தெலுங்கு/மராத்தியர்கள் ஏன் அதை மாற்றவில்லை.
பிற்காலத்தில் ஆண்ட தம்மவர்களை விட்டு, ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிப் போய் ராஜ ராஜ சோழனை மட்டும் தாக்குவதும், இழிவுபடுத்துவதன் நோக்கம் என்ன என்பதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சியில் சாதிப்பிரச்சனை இருந்தது பற்றிப் பேசுகிறவர்கள், அதற்குப் பின்பு ஆண்ட திராவிடர்கள் (கன்னட/வடுகர்கள்) சாதிப்பிரச்சனையை ஏன் நீக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி அவர்களை ஏன் வசைபாடுவதில்லை என்ற கேள்விக்கு இதுவரை யாரும் பதில் கூறியதில்லை.
சீனக் கம்யூனிஸ்டுகள் கூடத் தான் சீனப்பெருஞ்சுவரை தமது முன்னோர்களின் சாதனையென எண்ணிப் பெருமைப்படுகிறார்கள். அதைப் பெருமையுடன் பாதுகாக்கிறார்கள். அதைப்பற்றிப் பீற்றிக் கொள்கிறார்கள் சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்த்தில் கொல்லப்பட்ட ஏழைகளின் எண்ணிக்கையை விடவா தஞ்சைப்பெரிய கோயில் கட்டப்பட்ட போது கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால் தஞ்சை பெரியகோயில் என்பது இலட்சணக்கான தொழிலாளர்களை கொன்று குவித்ததன் சின்னமாக இருக்கிறது. என்று உளறும் போலி வர்க்கப் போராளிகளை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது.
இன்று சிலைவணக்கத்தை எதிர்க்கும் எகிப்திய அரபு முஸ்லீம்கள் கூட, தமது முன்னோர்கள் கட்டிய பிரமிட்டுகளையும், கோயில்களையும் நினைத்துப் பெருமிதப்படுகிறார்கள், அவற்றைக் கோடிக்கணக்கான பணச்செலவில் பாதுகாக்கிறார்கள். பிரமிட்டுகள் கட்டப்பட்டபோது கொல்லப்பட்ட ஏழைகளையும், அடிமைகளையும், தொழிலாளர்களையும் விடவா, தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட போது இறந்திருப்பார்கள்?
ஐரோப்பாவிலுள்ள பிரமாண்டமான தேவாலயங்களைப் பற்றிப் பெருமிதப்படும் ஐரோப்பியர்கள் தமது முன்னோர்களை அவர்கள் எவ்வளவு கொடிய ஆட்சியாளர்களாக இருந்தாலும் வசைபாடுவதில்லை. ஆனால் ராஜ ராஜ சோழனையும், தமிழர்களின் கட்டிட, தொழிநுட்ப, அறிவியலை உலகுக்குப் பறை சாற்றும் கோயில்களையும், வரலாற்றுச் சின்னங்களையும் சிலர் தூற்றுகிறார்கள், அவர்களைத் தமிழர்கள் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும்.
பிரச்சனை என்னவென்றால், உலகிலேயே மிகச்சிறந்த நிர்வாகிகளில் ஒருவனாகிய ராஜ ராஜ சோழன் தனது ஆட்சியில் நடந்த எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் எழுதி வைத்துப் போனான். அவனுக்குப் பின்னால் ஆண்ட கன்னடர்களும், தெலுங்கு வடுகர்களும், மராத்தியர்களும் தமிழ்நாட்டைச் சுரண்டி, தமிழர்களைத் தமிழ்நாட்டிலேயே தமது அடையாளத்தை இழந்தவர்களாக்குவதில் குறியாக இருந்தார்களே தவிர, ராஜ ராஜ சோழனைப் போல் ஒன்றையும் எழுதி வைத்து விட்டுப் போகவில்லை.
இன்று கூட பல நாடுகளில் மதகுருமார்கள் வரி செலுத்துவதில்லை அத்துடன் விவசாயிகளுக்கு சிறப்பான மானியங்கள் உண்டு. அக்காலத்தில் சமூகத்திலிருந்த சாதிக் கட்டமைப்பின் படி, சமூகத்தில் அவர்களின் சேவையின் தேவையைக் கருதி அவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டிருக்கலாம், உதாரணமாக, கனடாவின் பூர்வீக குடிகளுக்கு வரிவிலக்கு சலுகைகள் உண்டு ஆனால் ஏனைய கனேடியர்கள் தமது வருமானத்தின் கணிசமான பகுதியை அரசாங்கத்துக்கு வரியாகச் செலுத்துகின்றனர்.
·அத்துடன் பணக்காரர்கள், சமூகத்தின் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் குறைந்தளவில் வரி செலுத்துவதாக மேலைநாடுகளில் கூட முறைப்பாடுகள் உண்டு. அதனால், ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிப் போய், ராஜ ராஜ சோழனை இழிவு படுத்துகிறவர்களின் உண்மையான நோக்கம் என்ன, அவர்களின் பின்னணி என்ன என்பதைத் தமிழர்கள் ஆராய வேண்டும்.
·இலங்கையில் இக்காலத்திலும் மத குருமார்களுக்குஅவர்களை மதத்தைக் கற்க, வேத பாடசாலைகளுக்கும், பெளத்த பிரிவேனாக்களுக்கும், கிறித்தவ தேவலாயங்களுக்கும் வரி விலக்குண்டு. பல நாடுகளில் இது இன்றும் வழக்கத்திலுண்டு. அது அந்த நடைமுறை அக்காலத்தில், ராஜ சோழன் காலத்தில் மட்டுமல்ல, கன்னட/தெலுங்கு/நாயக்கர் ஆட்சியிலுமிருந்தது. ஆனால் ராஜ ராஜ சோழனை வசைபாடுகிறவர்கள், அவர்களை ஏன் வசைபாடுவதில்லை.
·அரசர்கள் சம்பளம் எதுவும் கொடுக்காமல் வேலைவாங்கிய அக்காலத்தில் ஆடுமாடுகளை பாராமரிக்குமாறு நம்பிக் கொடுத்து, கோயிலுக்குக் கொடுக்கும் கடமையைச் செய்து விட்டு, மீதியை நீயே வைத்துக் கொள், என்று கூறிய ராஜ ராஜ சோழனின் பெருந்தன்மையை சிலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இலங்கை அரசர்கள் சம்பளம், எதுவுமே கொடுக்காமல் “ராஜகாரியம்” என்ற முறையில் வேலை வாங்கினார்கள், அந்த வழக்கத்தை, இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் தான் தடை செய்தார்கள்.
·சோழர்கள் கட்டிய கோயில்களில் வேலை செய்ய பிறமண்ணிலிருந்து வந்தவர்கள் பிராமணர்கள், அவர்கள் எதற்காக ஊர்காவலுக்கு வரி செலுத்த வேண்டும். ஊர்காவல் வரியை ஊர்ச் சொந்தக்காரர்கள் தான் செலுத்த வேண்டும்.
·வறுமையினால் மக்கள் அடிமையாவது இன்றும் இந்தியாவில் உண்டு. இந்த 21ம் நூற்றாண்டிலும் எத்தனையோ தமிழர்கள் கூட இந்தியாவில் கொத்தடிமைகளாக உள்ளனர். பல ஆபிரிக்க முஸ்லீம் நாடுகளில் இன்றும் அடிமைகளை வைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அடிமை, குடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அதற்கு ராஜ ராஜ சோழனை மட்டும் வறுத்தெடுப்பது ஏன்?
.கோயில்களுக்கும் அரச தேவைகளுக்கும், வேறு பல திட்டங்களுக்கும் நிலங்களை மக்களிடமிருந்து எடுத்துக் கொள்ளும் வழக்கம் எல்லா நாடுகளிலும் உண்டு. சோழர்கள் கட்டிய பெருங்கோயில்களில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்ட பார்ப்பனர்களுக்கு கோயிலுக்கருகில் வீட்டு வசதி செய்து கொடுக்க காணிகள் அரசால் எடுக்கப்பட்டிருக்கலாம். தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களை இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் குடியேற்றிய போது சிங்களக் கிராமங்களிலிருந்து சிங்களவர்களை வெளியேற்றி, அவர்களின் காணிகளைப் பறித்து. தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி, அதில் இந்திய வம்சாவழித் தமிழர்களைக் குடியேற்றினர் ஆங்கிலேயர்கள். .
·மதகுருமார்களுக்கும், மடங்களுக்கும், கோயில்களுக்கும் நிலங்கள் வழங்குவது மானியம் வழங்குவதும், வரிவிலக்கு அளிப்பதும் இன்றும் வழக்கத்தில் உண்டு. பார்ப்பனர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரமதேயங்களில் ஒன்றையாவது காட்ட முடியுமா?
·இன்றும் தேர்தலில் போட்டியிட காசு, பணம், குறைந்தபட்ச கல்வித் தகுதி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் சாதியையும் முக்கியம். அதனால் ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் அப்படி விதிமுறைகள் இருந்தது மட்டுமல்ல, முடியாட்சியிலேயே, சனநாயகத்தைப் புகுத்திய சோழர்களைப் பாராட்ட வேண்டும். இலங்கையில் கூட 1948 வரை படித்த இலங்கையர்களுக்கு மட்டும் தான் வாக்குரிமை இருந்தது. வெள்ளையர்கள் குடியேறிய பிரிட்டிஸ் காலனிகளில் நிலச் சொந்தக்கார்களுக்கு மட்டும் தான் 1800களின் கடைசிப்பகுதி வாக்குரிமை இருந்தது.
·ஆதித்த கரிகாலனை பிராமணர்கள் கொன்றதன் காரணத்தாலோ என்னவோ இராசராசன் தம் நாட்டில் வேதங்கள் ஒலிப்பதற்குப் பதிலாக திருமுறை ஓதுவதற்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறான். ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைக் கண்டு பிடிப்பதில் கால தாமதம் ஏற்பட்டாலும் இராஜ ராஜன் அவர்களை சரியாக அடையாளம் கண்டு அழித்தான் என்றும் இவ்வெற்றியை திருவாலங்காட்டுச் செப்பேடு “பரசுராமனது நாட்டை வென்றது” என்று குறிப்பிடுகிறது.
·பிராமணர்களுக்கு இவன் காலத்தில் நிலக்கொடை வழங்கிய செப்புப்பட்டயம் ஒன்று கூடக் கிடைக்காமலிருப்பதும் இவன் பிராமணர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது..
·மேலேயுள்ள குறிப்புகள் சி, இளங்கோ என்பவர் எழுதிய “இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர்” என்ற புத்தகத்தில் 73ம் பக்கத்தில் உள்ளது.
இதன் படி பார்த்தால் உண்மையில் ராஜ ராஜ சோழன் காலத்துக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள், தஞ்சாவூர்க் கோயில் கல்வெட்டுக்களிலுள்ளவற்றை எல்லாம் ராஜ ராஜ சோழனின் தலையில் போட்டு அந்த மாமன்னனை வசைபாடுகின்றனர் தமிழ்பேசும், தமிழரல்லாத திராவிட எச்சங்கள் என்பது தெரிகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.