இந்திய தண்டனை சட்டம் [ஐ.பி.சி]328-ன் படி, இந்தியாவில் போதைபொருள்களை விற்பது 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
காலம் காலமாக கடைபிடித்து வரும் இரட்டை வேடத்தை மதுவிலக்கு விஷயத்திலும் கடைபிடித்து நீதிமன்றங்களையும், பொதுமக்களையும் ஏமாற்ற முயல்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
மக்களின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுவது தான் நல்ல அரசுக்கு இலக்கணமாகும். இதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் பொதுமக்களின் விருப்பமாகும்.
தமிழகத்தில் கடந்த மே ஒன்றாம் தேதி நடைபெற்ற கிராம அவைக் கூட்டங்களில், பாட்டாளி மக்கள் கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆயிரக்கணக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருப்பதே மக்களின் மனநிலைக்கு சாட்சியாகும்.
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 328-ன் படி, ஒருவருக்கு காயம் விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது ஒரு குற்றத்தை செய்யும் அல்லது அதற்கு வசதி செய்யும் உட்கருத்துடன் அல்லது அதனால் அனேகமாக அவருக்கு காயம் விளைவிக்கக்கூடும் என்று அறிந்து,
நஞ்சு எதையும் அல்லது மதிமயக்கம் செய்கிற போதை தருகிற அல்லது நலத்தை கெடுக்கிற மருந்துச்சரக்கு அல்லது வேறு பொருள் எதையும் எவர் ஒருவருக்கும் கொடுப்பவர் அல்லது உட்கொள்ளும்படி செய்பவர் எவராயினும்,
பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறைத்தண்டனை வகைகள் இரண்டில் ஒன்று விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். அவரை அபாரதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம் என்கிறது.
அதே போல இந்திய தண்டனை சட்டப்பிரிவு ஐ.பி.சி 319-ன் படி ஒருவருக்கு உடல்வலி, நோய் அல்லது வலிமைகேடு விளைவிக்கிற எவரும் காயம் விளைவிக்கிறார் என்று சொல்லப்படுகிறார்.
ஆனால், தமிழக அரசோ டாஸ்மாக் மதுகடைகளை திறந்து இத்தகைய குற்றங்களை பகிரங்கமாக செய்கிறது.
இதன்மூலமாக மக்களின் உயிருக்கும், உடல் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது அரசின் கொள்கை என்பதை தமிழக அரசு உறுதிபடுத்தியுள்ளது.
கொள்கை முடிவு என்று சொல்லி மக்களின் உயிர்வாழும் உரிமையை தமிழக அரசு பறித்து வருகிறது.
இது அரசியல் சாசனத்தின் 21-வது ஷரத்தின்படி மக்களுக்கு வழங்கியுள்ள உரிமையை பறிப்பதாக உள்ளது.
அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், செயல்படுத்துவதிலும் அமைச்சரவையின் தலைவர் என்ற முறையில் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை இந்திய தண்டனை சட்டம் 328 கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்திட வேண்டும்.
தொடங்கப்பட்ட நாளில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் கொள்கையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்படி ஆய்வு செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது.
மது விற்பது மட்டும் தான் அரசின் பணி என்ற அபத்தக் கொள்கையை விடுத்து, அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு,
மக்கள் நலவாழ்வே அரசின் நோக்கம் என்ற அர்த்தமுள்ள கொள்கையை கடைபிடிக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.