18/09/2017

இந்த 7 விஷயங்கள் தெரிந்தால் நீங்களும் விவசாயி தான்...



இன்று உலகமே விவசாயத்தை நோக்கி தன் பார்வையை திருப்பி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை, பன்னாட்டு நிறுவனங்கள் எனப் பலவற்றில் பணிபுரிந்து கைநிறைய சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் கூட... சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆசை கொண்டிருக்கிறார்கள். அதனால், விவசாயம் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படித் தகவல் தேடலில் ஈடுபட்டுள்ளோருக்கான கட்டுரை இது. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஏழு அம்சங்களைத் தெரிந்து கொண்டாலே போதும்... வெற்றிகரமான விவசாயியாக மாறி விடலாம்.

பட்டம்:

'பருவத்தே பயிர் செய்' என்று சொல்வார்கள். ஒவ்வொரு பயிருக்கும் விதைப்பதற்கான பருவம் அல்லது காலகட்டம் உண்டு. அதுதான் 'பட்டம்'. குறிப்பாக பட்டம் என்பது தமிழ் மாதத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்படும். பாரம்பர்ய விவசாயம் மற்றும் நாட்டு ரக விதைகளுக்கு பட்டம் முக்கியமானது. ஒவ்வொரு பட்டத்திலும் அதற்கான பயிரை மாற்றி மாற்றி சாகுபடி செய்து வரும்போது நிலத்தின் வளம் பாதிக்கப்படாமல் அப்படியே இருக்கும். பொதுவாக ஆடிப்பட்டம் அனைத்து பயிர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

பருவம்:

பட்டத்துக்கும் பருவத்துக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு. பருவமழை, குளிர்காலம், கோடைகாலம் போன்ற பருவங்களை அடிப்படையாக வைத்துதான் பட்டங்கள் கணக்கிடப்படுகின்றன. அதனால், பருவங்களையும் அதற்கேற்ற பயிர்களையும் தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக பருவ மழைக்காலங்களை அறிந்திருக்க வேன்டும். நமக்கு தென்மேற்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று மூலம்தான் மழை கிடைக்கிறது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவக்காற்று வீசும். தென்மேற்குப் பருவக்காற்று, ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வீசும். இந்த மழைக்காலங்கள்தான் நமது விவசாயத்துக்கான முக்கிய காலங்கள்.

விதைநுட்பம்:

சாகுபடிக்கு முன்னர் விதைத்தேர்வு அதிமுக்கியமானது. பெரும்பாலும் நாட்டு விதைகளைத்தேர்வு செய்வது நல்லது. வீரிய ரக விதைகளை விதைப்பது தவறில்லை என்றாலும் நமது நாட்டின் அனைத்து சீதோஷ்ண நிலைகளையும் தாங்கி வளர்பவை நாட்டு விதைகளே. எந்த விதையாக இருந்தாலும் நம்பகமானவர்களிடமிருந்து தரமான விதைகளை வாங்க வேண்டும்.

இடுபொருட்கள் :

இன்றைய காலகட்டத்தில் இயற்கை விளைபொருட்களுக்குத் தேவை அதிகரித்து வருவதால், இயற்கை இடுபொருட்கள் குறித்து அறிந்திருப்பது அவசியம். அதிலும், நம் நிலத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இடுபொருட்களைத் தயாரிப்பதுதான் தற்சார்பு விவசாயம். நாட்டு மாட்டு எரு, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, உயிர் உரங்கள், அமுதக் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி, தேமோர் கரைசல் எனப் பல இடுபொருட்கள் உள்ளன. இவற்றைத் தயாரிக்கும் விதத்தையும் பயன்படுத்தும் விதத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டு மாடுகள்:

இயற்கை விவசாயத்துக்கு அவசியமானவை நாட்டு மாடுகள். நாட்டு மாடுகளின் சாணம்தான் சிறந்த உரம். தவிர,  நாட்டு மாட்டுப் பாலில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. நாட்டு மாட்டுப் பாலை குடித்து வந்தால் பல நோய்கள் தவிர்க்கப்படும். நாட்டு மாட்டின் சிறுநீர், சாணம் ஆகியவற்றின் மூலம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் போன்ற இடுபொருட்களைத் தயாரிக்கலாம். காங்கேயம், உம்பளாச்சேரி, சிந்தி, தார்ப்பார்க்கர், சாஹிவால் எனப்பல நாட்டினங்கள் உண்டு.

சீசன் - சந்தை விலை:

எந்த சீசனில் எந்த பொருளுக்குத் தேவை அதிகம் என்பதை அறிந்து அதற்கேற்ப பயிரிட வேண்டும். அப்போதுதான் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். அதனால், விலை நிலவரம், விளைபொருட்களின் தேவை ஆகியவற்றை தெரிந்து கொள்வது அவசியம்.

மதிப்புக்கூட்டல்:

விளைபொருட்களை அப்படியே விற்பனை செய்யாமல், அவற்றை மதிப்புக் கூட்டும்போது நல்ல லாபம் பார்க்க முடியும். உதாரணமாக, விளைபொருட்களை தூசு தும்பு இல்லாமல் சுத்தப்படுத்தி சந்தைக்கு எடுத்துச்சென்றாலே கூடுதல் விலை கிடைக்கும். அவ்வற்றை பதப்படுத்தி மதிப்புக் கூட்டி பழச்சாறு, ஜாம் போன்ற பொருட்களைத் தயாரிக்கும்போது அதிக லாபம் கிடைக்கும். அதேபோல பாலாக விற்பனை செய்யாமல் வெண்ணெய், நெய், பனீர் எனத் தயாரித்து விற்பனை செய்யும்போது கூடுதல் லாபம் பார்க்கலாம். அதனால் மதிப்புக்கூட்டலையும் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

விவசாயமும் ஒரு அறிவியல்தான். அதனால் அது குறித்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொண்டு களம் இறங்கும்போது கண்டிப்பாக வெற்றி பெற முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.