தமிழகத்தில் மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகள் தொடங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று (11.9.2017) பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற்கக் கூடிய ஒன்றல்ல.
1986 -ல் கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்தக் கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பள்ளிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், குறிப்பாக தமிழகத்தில் இருக்கிற SC/ST மாணவர்களுக்கு இதனால் பெரிதும் பயன் இல்லை.
காரணம் . . .
6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வரை இரு பாலரும் படிக்கும் பள்ளியாக தொடங்கப்பட்டது. இதில் ஹிந்தி முதன்மையாகவும், ஆங்கிலம் இரண்டாவதாகவும் மாநில மொழி கடைசியாகவும் கற்பிக்கப்படுகிறது. இப்போதுள்ள மொழியறிவுக் கல்வித்தரத்தின் அடிப்படையில் SC/ST மாணவர்கள் உடனே இதில் நுழைய முடியாது. அதற்கான அவசியமும் இல்லை.
உதாரணத்துக்கு : புதுச்சேரியில் உள்ள நவோதயாவில் 6 – 12 வரை சேர்க்கைக்கான இடங்கள் காலியாக உள்ளன. ஆனால் கிராமப்புற SC/ST மாணவர்கள் இதில் எளிதாக சேர முடியாது. எளிதில் இடமும் கிடைக்காது.
நுழைவுத் தேர்வின் முதல் தாளான ஹிந்தியில் வெற்றி பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும். அல்லது CBSE பள்ளியில் படித்து ஹிந்தியை பாட மொழியாகக் கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது மத்திய அரசு வெளியே நடத்திக் கொண்டிருக்கும் “பிராத்மிக் தொடங்கி ப்ரவின் உத்தரார்த்” வரை ஹிந்திப் படித்தவராக இருக்க வேண்டும். அதிலும் கூட இப்போதுள்ள நுழைவுத் தேர்வு முறையில் ஹிந்தி வினாத்தாள் – விடைத் திருத்தம் அந்தந்த பள்ளியில் நடை பெறாது.
இந்த சிக்கலை எதிர் கொள்வதற்காக தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கு விலக்கு கேட்டு, 25 சதவிகித தமிழ் பயின்ற மாணவர்களை ஹிந்தி நுழைவுத் தேர்வு வைக்காமல் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி அரசு 2006 -ல் இருந்து கோரிக்கை வைத்தது. ஆனால் அதற்கும் அனுமதி மறுத்து விட்டது.
இதனால் புதுச்சேரி நவோதயாவில் மத்திய அரசின் நோக்கமான கிராமப்புற SC/ST மாணவர்களின் சேர்க்கை மிக மிக பின் தங்கியிருக்கிறது. படிப்பவர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சார்ந்தவர்கள்.
உண்டு, உறைவிடம் என்கிற தரம் முதன்மையாக இருந்தாலும் இப்பள்ளிகளில் SC/ST -க்கு என்று இட ஒதுக்கீடு எதுவும் கிடையாது. கிராமப்புற மாணவர்களை உள்ளே புகுத்த தனி துரிதப்பயிற்சிகள் (Crash Course Programme) கிடையாது.
நவோதயா பள்ளிகளில் படித்து விட்டால் NEET போன்ற தேர்வை எதிர் கொள்ளலாம் என்கிற உள்நோக்கம் இதில் இருக்கிறது. ஆனால் மருத்துவத்தில் இடம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏற்கனவே IIT போன்றவைகளை இதன் மூலம் எதிர் கொள்ள முடியவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு என இதே போலத்தான் கேந்திரிய வித்யாலயா தொடங்கப்பட்டது. அதில் பொதுவாக சேர்க்கப்படும் 10 சதவிகித சேர்க்கையில் கிராமப்புற SC/ST மாணவர்கள் எத்தனை சதவிகிதம் வருகிறார்கள் என கணக்கிட்டால் ஒரு சதவிகிதப் பயன்பாடு கூட மிக மிகக் குறைவு.
பெரும்பான்மையான இடங்கள் MP கோட்டாவுக்கு போய் விடுகிறது. ஒரு MP -க்கு 6 சீட் என கணக்கிட்டாலும் தற்போதைய நிலையில் ஒரு MP – கோட்டா சீட் 3 லட்சத்துக்கு விற்கப்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். நோக்கம் அரசு ஊழியர்களுக்கானது போல் தெரிந்தாலும் வருசத்துக்கு 3000 MP சீட் வசதி படைத்தவர்களுக்குத் தான் போய்ச்சேருகிறது. அப்படி இருக்கும்போது எதிர் காலத்தில் இப்பள்ளிகளும் கேந்திரிய வித்யாலயா போல் ஆகாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது.
தமிழகத்தில் ஆதி திராவிட நலத்துறையின் கீழ் 49 உயர்நிலைப் பள்ளிகளும், 56 மேல்நிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான SC/ST மாணவர்கள் நடப்புக் கல்வியாண்டில் படித்து வருகிறார்கள்.
ஹிந்தியைத் தவிரவும், தரம் உதர்த்தலைத் தவிரவும் நவோதயா வழியாக வேறென்ன கிடைத்து விடப்போகிறது?
எனவே தற்போதைய அறிவிப்பின் மூலம், நவோதயா பெயரில் மாவட்டந்தோறும் 30 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதை நிறுத்தி விட்டு அவற்றுக்கு ஒதுக்கீடு செய்துள்ள 20 கோடி ரூபாயை கிராமப்புற ஏழை மற்றும் SC/ST மாணவர்களுக்கு அப்படியே வழங்கி மாநிலப் பட்டியலுக்குள் நுழையாமல் இருப்பதே மத்திய அரசாங்கம் கிராமப்புற வளர்ச்சிக்கு செய்கிற நல்ல விசயம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.