பொதுத்துறை வங்கிகளுக்கு 2.11லட்சம் கோடியை மத்திய அரசு கொடுக்கவிருக்கிறது என்று நேற்று இந்திய ஒன்றியத்தின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்புக்கும் நெல்லையில் கடன் தொல்லையால் தீக்குளித்த இசக்கிமுத்து குடும்பத்தின் மரணத்திற்கும் என்ன சம்பந்தமென்று தானே கேட்கீறீர்கள்.
சம்பந்தமிருக்கிறது அன்பான தோழர்களே...
இந்திய வங்கிகளில் கார்ப்ரேட் முதலாளிகள் வாங்கி குவித்திருக்கும் கடன்கள் சற்றொப்ப 20லட்சம் கோடியை தாண்டி நிற்கிறது.
இதில் வரவே வராது என்று முடிவு செய்யப்பட்ட கடன்கள் மட்டும் 9லட்சம் கோடிகளை தொடுமென்று இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் நேற்று அறிவித்திருக்கிறார்.
இப்படி வங்கிகளில் வாங்கிய கடன்களை முதலாளிகள் கட்டாத காரணத்தால் வங்கிகள் திவாலாகும் நிலைமைக்கு சென்றது.
இந்த இக்கட்டான நிலைமையை சரிசெய்ய பலரும் அரசுக்கு ஆலோசனை வழங்கி கொண்டிருந்தார்கள். ஆனால் ஒருவரும் கார்ப்ரேட் கம்பெனிகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டுமென்று தவறியும் சொல்லவில்லை.
இதனையடுத்து இந்த சிக்கலுக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டதுதான் ஏழை எளிய மக்களின் கையில் இருக்கும் காசை புடுங்கி அதனை வங்கிகளுக்கு பகிர்ந்தளிப்பது என்ற திட்டம்.
அதன்படி முதலில் கொண்டு வரப்பட்டது தான் 500 மற்றும் 1000ரூபாய் நோட்டு தடை எனும் 'பணமதிப்பிழப்பு' நடவடிக்கை.
இதன்படி நவம்பர் 8 2016 அன்று நாட்டில் புழக்கத்திலிருந்த 86% நோட்டுகளான 500 மற்றும் 1000 ரூபாயை ஒரே நாளில் செல்லாது என்று அறிவித்தார் மோடி.
இதனால் இந்தியா முழுவதுமுள்ள மக்கள் தம்மிடமிருந்த பணத்தை வங்கிகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால் 10 நாட்களில் மட்டும் 3.2லட்சம் கோடி பணம் வங்கிக்குள் வந்ததென்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அப்போது அறிவித்தது. ஒரு வங்கிக்கே இந்த நிலைமையென்றால் மற்றவங்கிகளுக்கு எவ்வளவு வந்திருக்குமென்று நினைத்து பாருங்கள்.
அடுத்து இதை நிரந்தரமாக்க கொண்டு வரப்பட்ட திட்டம் தான் சரக்கு மற்றும் சேவை வரி திட்டம். இதன்மூலம் நாட்டிலுள்ள அனைவரும் விரும்பியோ விரும்பமலோ வங்கிகளுக்குள் செல்லும் நிலைமை உண்டாக்கி விட்டார்கள்.
அதிகபடியான வரியால் அரசாங்கத்திற்கும் வருமானம் அதிகரித்தது. உதாரணத்திற்கு ஜீலை 94,063 கோடியும் ஆகஸ்டில் 90,669 கோடியும் மற்றும் செப்டம்பரில் 92,150 கோடியும் வருவாய் வந்திருக்கிறது.
இப்படி நாட்டிலுள்ள குடிமக்களை வரி என்ற பெயரில் கசக்கி பிழிந்ததனால் கிடைத்த அதிக வருவாயை கொண்டு தனது சதிதிட்டத்தை மெல்ல மெல்ல மோடி அரசு ஆரம்பித்திருக்கிறது.
அதில் முதலாவதாக ’மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தின் மூலம் உள்நாட்டு முதலாளிகளுக்கும், வெளிநாட்டு முதலாளிகளுக்கும் இராணுவத்திற்கு ஆயுதம் தயாரிக்கிறமென்று பல ஆயிரம் கோடிகளை அள்ளி கொடுத்திருக்கிறது.
அடுத்ததாக உள்நாட்டு கார்ப்ரேட் கம்பெனிகளால் திவாலாகும் நிலைமையிலுள்ள வங்கிளை காப்பாற்ற நம்மை கசக்கி பிழிந்து எடுத்த பணத்திலிருந்து 2.11லட்சம் கோடியை கொடுத்திருக்கிறது.
ஆனால் தவறியும் இதுவரை கடன் வாங்கிய பணக்காரர்களை நோக்கி எந்த அரசும் தங்களது சுண்டு விரலையும் நீட்டவில்லை.
இப்படி முதலாளிகளுக்காக ஏழை எளிய மக்களின் மேல் அதிக சுமையை செலுத்தியதனால் ஏற்பட்ட சூழலை சமாளிக்கவே இசக்கிமுத்து போன்றவர்கள் கந்துவட்டி என்ற அடாவடி கும்பல்களிடம் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
அதிலிருந்து மீள முடியாதளவிற்கு இந்த அரசுகள் புதிய புதிய சட்டங்களின் போட்டு இசக்கிமுத்துகளை மீண்டும் மீண்டும் கடன் வாங்கும் சூழலுக்கு தான் தள்ளிக்கொண்டிருக்கிறது.
இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ளும் கந்துவட்டி எனும் இந்த அடாவடி கும்பல்கள் இசக்கிமுத்துகளிடம் கொடுத்ததை விட அதிக பணத்தை அநியாய முறையில் பறிக்க முயலுகிறார்கள். பணத்தை செலுத்த முடியாத இசக்கிமுத்துகல் சாவை தேர்ந்தெடுக்கிறார்கள்.
நமக்கு நெல்லையில் நடந்த ஒரு சம்பவம் தெரிய வந்திருக்கிறது இதுபோல எண்ணெற்ற சாவுகள் நம் பார்வைக்கு வராமலையே இந்தியாவெங்கும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
எனவே இதுபோன்ற சாவுகள் இனியும் நடக்காமலிருக்க வேண்டுமென்றால் இந்த சாவுக்கு முதன்மை காரணமான 1% பணக்காரர்களுக்காக 99% மக்களை வாட்டி வதைக்கும் கொள்கையை திட்டங்கள் என்ற பெயரில் தொடர்ந்து கொண்டு வந்து கொண்டிருக்கும் அரசுகளை நோக்கி நாம் கேள்விகளை கூர்மையாக்க வேண்டும். அரசுகளின் கொள்கைகள் மாறினால் இந்த சூழலை பயன்படுத்த நினைக்கும் ரவுடி கும்பல்களும் உள்ளூர் பொறுக்கி அதிகாரிகளும் தன்னால் மாறுவார்கள்...
- மே 17 இயக்கம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.