29/10/2017

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 44...


பகிராத எண்ணத்தை உணர முடியுமா?

தியானத்தைப் பற்றி இது வரை சற்று விரிவாகவே விளக்கியதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல நம்மை நாம் முழுமையாக அறிய தியானம் மிகவும் உதவுகிறது என்பது தான். எத்தனையோ சக்திகள் இருந்தும் வாழ்நாள் முழுவதும் அதை அறியாமல், அறியாத காரணத்தால் அதைப் பயன்படுத்தாமல் மனிதர்கள் பலவீனர்களாய் வாழ்ந்து மடியும் அவலம் இன்று அதிகம் இருக்கிறது.

நாம் உண்மையை அறிய ஐம்புலன்களையே நம்புகிறோம். ஐம்புலன்களின் உதவி இல்லாமலேயே அவற்றால் அறிய முடிந்தவற்றைக் காட்டிலும் அதிகமாக, நுட்பமாக, துல்லியமாக சிலவற்றை அறிய முடியும் என்று சொன்னால் நம்புவதில் நாம் பெரும் சிரமத்தை உணர்கிறோம். காரணம் அதை எளிதில் விளக்கவோ, விளங்கிக் கொள்வதற்கோ முடிவதில்லை.

ஆனால் தாவரங்கள், விலங்குகள் கூட அசாத்தியமான, எப்படி முடிகிறது என்று விளக்க முடியாத பல அபூர்வசக்திகளைப் பெற்றுள்ளன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. இதில் சிலவற்றை முன்பே சிறிது சொல்லி இருந்தாலும் கூடுதல் தகவல்கள் அறிந்து கொள்வது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

1960களில் க்ளீவ் பாக்ஸ்டர் Cleve Baxter என்ற விஞ்ஞானி தாவரங்களை வைத்து சில பரிசோதனைகள் செய்தார். தாவரங்களில் polygraph electrodesஐ
இணைத்து செய்த பரிசோதனைகளில் தாவரங்கள் மனித எண்ணங்களை அறிந்து கொண்டு அதன்படி செயல்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார். அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற அவர் தயாரானபோதே அந்த செடி இலைகளில் அதற்கேற்ற ஒரு மாற்றம் உருவானதைக் கருவிகள் அடையாளம் காண்பித்தது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது.

அவர் அதற்கு தீங்கு விளவிப்பது போல மனதில் கற்பனை செய்தால் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று ஆராய, மனதில் அதன் இலைகளைத் தீப்பற்ற வைப்பது போல் மனதில் கற்பனை செய்தால் அதன் இலைகள் அதை உணருமா என்பதை அறிய முயற்சித்தார். ஆனால் அவர் கற்பனைக்கு வடிவம் தரும் முன்னேயே, அவருக்கு எண்ணம் எழுந்தவுடனேயே அந்தத் தாவர இலைகளில் அதற்கேற்றாற்போல் மாற்றம் பதிவானது அவருடைய ஆச்சரியத்தை மேலும் அதிகப்படுத்தியது. அவருடைய தொடர்ந்த ஆராய்ச்சிகளில் தாவரங்கள் தங்களை அழிக்க வருபவர்கள் அருகில் வரும் போதும், தங்களை வளர்ப்பவர்கள் மற்றும் நேசிப்பவர்கள் அருகில் வரும் போதும் அதற்கேற்றாற்போல் வேறு வேறு விதமாக உணர்கின்றன என்பதைக் கண்டுபிடித்தார். மனித எண்ணங்களை எப்படி தாவரங்கள் அறிகின்றன என்பதற்கு இன்னமும் சரியான விஞ்ஞான விளக்கமில்லை.

அதே போல் விலங்குகளில் நாய் மற்றும் குதிரை தங்கள் எஜமானர்களின் எண்ணங்களை உணர வல்லவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களுடைய மனநிலைகளுக்குத் தகுந்தபடி நடந்து கொள்கின்றன என்று சொல்கிறார்கள். நாய்களை மிகவும் நேசித்து வளர்த்துபவர்கள் வீட்டிற்குச் சென்றால் அவர்களுடைய நாய்கள் எந்த அளவு புரிந்து கொண்டு நடக்கின்றன என்பதைக் கதை கதையாய் சொல்வார்கள்.

அதே போல் வேட்டைக்குச் செல்பவர்களும் விலங்குகளின் சில விசேஷ நடவடிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். காடுகளில் விலங்குகளை வேட்டையாட அவர்கள் மறைந்து பதுங்கி இருக்கும் போது மோப்பத்தினால் கூட அவை அறிய முடியாத தூரத்தில் வரும் போதே ஏதோ ஒரு விதத்தில் அபாயத்தை உணர்கின்றன என்பதை அனுபவபூர்வமாகச் சொல்கிறார்கள். பார்க்க முடியாதபடி மறைந்திருந்தாலும், மோப்பம் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும் அவை ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டு, பின் சிலிர்த்துக் கொண்டு அந்த வழியே வராமல் வேறு வழியாகப் பயணிப்பதைத் தெரிவிக்கிறார்கள். ஒரு சில விலங்குகள் அபாயத்தை எதிர்கொள்ளும் போது எழுப்பும் ஒலியை அந்த சமயங்களில் எழுப்பி விட்டுச் செல்வதாகவும் சொல்கிறார்கள். இது போன்ற அபாயத்தை உணரும் அபூர்வ சக்திகளை காட்டு விலங்குகள் அதிகம் பெற்றிருப்பதாகவும் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் காலப்போக்கில் அந்த சக்திகளை இழக்க ஆரம்பித்து விடுவதாகவும் விலங்கின ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

ஒரு தாவரமோ விலங்கோ கூட மனிதனின் நோக்கத்தையும், எண்ணத்தையும் அறிவிக்காமலேயே அறிந்து கொள்கின்றன என்றால் மனிதன் இன்னொரு மனிதனின் எண்ணங்களையும், நோக்கங்களையும் சொல்லாமலேயே தெரிந்து கொள்வதில் ஆச்சரியம் என்ன இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து கொண்டிருந்த ஆதிமனிதன் இன்றைய மனிதனைக் காட்டிலும் இது போன்ற அபூர்வ சக்திகளை அதிகம் பெற்றிருந்தான் பயன்படுத்தினான் என்றே சொல்லலாம்.

சிட்னி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஏ.பி.எல்கின் Dr. A.P. Elkin என்பவர் ஆஸ்திரேலிய நாட்டின் பழங்குடி மனிதர்களான புதர்மனிதர்கள் எனப்படுபவர்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். அந்த புதர்மனிதர்கள் காணாமல் போன பொருட்களையும், வழிதவறிப் போன ஆடுமாடுகளையும், திருடர்களையும் அனாயாசமாகக் கண்டு பிடிப்பதில் வல்லவர்களாக இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்.

அவர் எழுதிய Aboriginal Men of High Degree என்ற புத்தகத்தில் அந்தப் புதர்மனிதர்களை ஆராய்ச்சி செய்ய ட்ரெக்கிங் சென்ற போது அவர் வருகையையும், வரும் நோக்கத்தையும் அவர்கள் முன் கூட்டியே அறிந்து வைத்திருந்தனர் என்று கூறுகின்றார். பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அவர்கள் மற்ற பகுதிகளில் வசிக்கும் அவர்களது வேண்டப்பட்டவர்களின் மரணத்தையோ, உறவினர்கள் வீட்டில் குழந்தை பிறப்பதையோ உடனடியாக அறிந்தார்கள் என்றும் கூறுகிறார். அவரிடம் அந்த புதர்மனிதர்கள் “எண்ணங்கள் பார்க்க முடியாதவையாக இருந்தாலும் அவற்றைக் காற்று வெளியில் அனுப்புவதும் பெறுவதும் எளிது” என்று தெரிவித்தார்களாம்.

அவருடைய புத்தகத்தால் கவரப்பட்டு லிண்டன் ரோஸ் Lyndon Rose என்ற மனவியல் நிபுணர் அந்த புதர்மனிதர்களை வைத்து மேலும் பல பரிசோதனைகள் செய்தார். மூடிய பெட்டிகளில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத விடைகளை அவர்கள் சரியாகச் சொன்னார்கள். சரியாகச் சொல்லாத பொருட்கள் கூட பெரும்பாலும் இதுவரை அந்தப் பழங்குடியினர் கண்டிராத பொருட்களாக இருந்தன.

ஒரு காலத்தில் பக்கம் பக்கமாக எண்களைக் கையாலேயே கூட்டி கணக்கிடும் பழக்கம் இருந்தது. சில வயதான கணக்குப் பிள்ளைகள் இப்போதும் ஒரு முறை கூட்டும் போதே சிறு பிழை கூட இல்லாமல் கூட்டி கணக்கிடுவதை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம். ஆனால் கால்குலேட்டர் உபயோகப்படுத்தப்படும் இக்காலத்தில் அந்தக் கணக்கிடும் திறனை இழந்து விட்டிருக்கிறோம். மிக எளிய இரண்டு எண்களைக் கூட்டக் கூட நமக்கு கால்குலேட்டரே தேவைப்படுகிறது. அதே போலத் தான் எந்தத் திறமையும், சக்தியும், நாம் உபயோகிக்காமல் விட்டு விட்டால் காலப்போக்கில் அந்தத் திறனை முழுமையாக இழந்து விடுகிறோம். அப்படித்தான் எத்தனையோ இயல்பான ஆழ்மன சக்திகளை மனித சமுதாயம் இழந்து விட்டிருக்கிறதோ? சிந்தியுங்கள்.

புலன்கள் வழியே மட்டும் பலவற்றையும் அறியத் துவங்கிய மனிதர்கள் அனைவரும் ஒரே ஒரு கட்டத்தில் புலன்கள் துணையில்லாமலேயே எல்லாவற்றையும் அறிகிறார்கள். அது எப்போது தெரியுமா?

மேலும் பயணிப்போம்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.