03/11/2017

ஆறுமுக நாவலர்...


தமிழ் சைவம் இரண்டும் என் இரு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்; அவை வாழப் பணி புரிவதே என் வாழ்வின் குறிக்கோள், என வாழ்ந்தவர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்.

அவர் யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தருக்கும், சிவகாமிக்கும் 1822 டிசம்பர் 12ல் (சித்திரபானு மார்கழி 5) தோன்றியவர்.

அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர்; சாத்திரங்கள், சிவாகமங்கள் கற்றவர்; ஆங்கிலத்திலும் சமசுகிருதத்திலும் வல்லவர்; சிவனடியை மறவாத சிந்தனையாளர்; உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென வாழாத் தகைமையாளர்; தவக்கோலச்சீலர்; இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர்.

அவர் இயற்றிய நூல்கள்: 23; உரை செய்தவை: 8; பரிசோதித்துப் பதிப்பித்தவை: 39; யாத்த பாடல்கள்: 14.

விவிலிய நூலுக்குச் சிறந்த மொழிப்பெயர்ப்பு செய்தது, திருக்குறள் பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தது, பெரிய புராண வசனம் எழுதியது அவருடைய பெருமைக்குச் சான்றுபகர்வன. அவர் இயற்றிய சைவ வினா விடை, பாலபாடம் இன்றும் போற்றப் படுபவையாகும்.

யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்தில் மேலவீதியில், சைவப்பிரகாச வித்தியாசாலை (1864) (தற்போது மேல்நிலைப்பள்ளி) சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திர சாலை (1860) ஆகியவற்றை நிறுவியவர். சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளம் வடகரையில், அவருடைய விருப்பப்படி, சேக்கிழார் கோயில் நிறுவப்பட்டது (1890).

திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சிறீ(ஸ்ரீ)லசிறீ(ஸ்ரீ) சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் ‘நாவலர்’ பட்டம் பெற்றவர் (1865).

அவருடைய சமகாலச் சான்றோர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் சங்கரபண்டிதர், சிவசம்புப் புலவர், ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை, விஸ்வநாதப் பிள்ளை, பர்சிவல்துரை; தமிழ்நாட்டில், சிதம்பரம் வடலூர் இராமலிங்க அடிகளார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாலிங்க அய்யர், இராமநாதபுரம் பொன்னுசாமிதேவர், அவருடைய மாணக்கர்களில் சிலர்: சதாசிவம் பிள்ளை (முதல் மாணாக்கர்),பொன்னம்பலம்பிள்ளை, செந்தில்நாத அய்யர், கைலாசப்பிள்ளை.

1879 டிசம்பர் 5ல் (பிரமாதி கார்த்திகை 21 மகம்) சிவப்பேறு பெற்றார்.

“தமிழ்க்குலம் உலகப்புகழ் எய்தத் தாழாதுஞற்றுங்கள் அ?தொன்றே எனக்குத் தமிழர் செய்யும் கைம்மாறு”. – ஆறுமுக நாவலர்.

தமிழிலே பிரசங்க மரபை முதன் முதலாக ஆரம்பித்து வைத்தவர் ஆறுமுகநாவலர் அவர்களே என்பதைச் “சைவமென்னுஞ் செஞ்சாலி வளரும் பொருட்டுப் பிரசங்கம் என்னும் மழையை முதன் முதற் பொழிந்தார்” என்று த. கைலாசபிள்ளை கூறுவது கருதற்பாலது.

சைவ ஆகமங்கள் பற்றியும், சமயகுரவர் பற்றியும் பிரசங்கங்கள் செய்து மக்களுக்குச் சமய உண்மைகளை எடுத்து விளக்கியவர் நாவலர். 1846 ஆம் ஆண்டு தனது வீட்டுத் திண்ணையில் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்ல்க் கொடுக்க ஆரம்பித்த நாவலர், பின்னர் பொதுமக்கள் நன்மையின் பொருட்டு 1847ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31ஆம் திகதி வண்ணார்பண்ணைச் சிவன்கோவிலிலே சைவப்பிரசங்கத்தை ஆரம்பித்தார். இப்பிரசங்க மரபானது அவரது இறுதிக்காலம் வரை நடத்தப்பட்டது.

நாவலரின் பிரசங்கங்களின் பயனாகப் பலர் சிவதீட்சை பெற்றனர்; மாமிச போசனத்தைத் தவிர்த்தனர்; கோவிலுக்கு ஒழுங்காகச் சென்று வழிபட்டு வரத் தொடங்கினர். சைவாசிரம தர்மங்களைக் கடைப்பிடித் தொழுகவும் தலைப்பட்டனர். இங்ஙனம் நாவலர் தமது சமயப் பிரசாரப் பணியைக் கிராமங்களிலும் மேற்கொள்ளத் தொடங்கினார்.

நமது சமயத்தின் மீது கிறிஸ்தவர்கள் நடத்தி வந்த தாக்குதல்களை எல்லாம் புறங் காணும் நோக்கத்தோடு நாவலர், ‘சுப்பிரபோதம்‘, ‘சைவ தூஷண பரிகாரம்‘ என்னும் நூல்கள் இரண்டை எழுதி வெளியிட்டார்.

“தாம் கொண்ட கொள்கையை நிறுவத் தமது சமய உண்மைகளைப் பாதுகாப்பதற்காக எடுத்தாண்ட நூல்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாயிருக்கிறது. எந்தெந்த வகையிலெல்லாம் எதிர்ப்பும் மறுப்பும் தோன்றக்கூடுமோ அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவற்றுக் கெல்லாம் தர்க்க ரீதியான பதில் கூறி விளக்கியிருக்கும் சாதுரியத்தை உண்மையிலேயே முதல் தரமான நுண்ணறிவு படைத்த ஒருவரிடத்திலே தான் காண முடியும். இந்நூல் நமக்குப் பெருந் தீங்கையன்றோ விளைவிக்கின்றது?”

இவ்வாறாக 1855 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலே அச்சிடப்பட்ட வெஸ்லியன் மெதடிஸ்த அறிக்கையிலேசைவதூச(ஷ)ண பரிகாரம் என்ற நாவலருடைய நூலைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

சைவசமயத்தின் அடிப்படை அறிவைப் பெறாதவர்களே புராணங்களை விமர்சிக்கப் புறப்பட்டு, சிவனும், சுப்பிரமணியரும் தத்தமது சக்திகளை உண்மையாகவே திருமணம் புரிந்ததாகக் கூறி வருகிறார்கள். “சுவரூபி, எங்கும் நிறைந்தவர் என்பதையும் ‘கடவுள் திருமணம் புரிந்தார்’ என்பது அபத்தம், என்பதையும் ஓரளவு சமய அறிவு படைத்தவர் எவரும் அறிவர்.” என்று நாவலர் தமது சுப்பிரபோதத்திலே கூறியுள்ளார்.

கோவில்களிலே தாசியர் நடனங்களை நடத்தும் துராக்கிருதமான செயல்களைத் தவிர்த்து அதற்குப் பதிலாக, தேவாரப் பண்களை இசைத்தல், சமயப் பிரசங்கங்களைச் செய்வித்தல் போன்ற நல்ல காரியங்களைச் செய்விக்குமாறு கோவில் அதிகாரிகளுக்கும் அந்நாளிலே நாவலர் அறிவுரை வழங்கினார்.

நாவலரின் சைவப்பிரசங்கக்களுக்குக் கிறிஸ்தவ தேவாலயங்களிலே நடக்கும் பிரசங்கங்கள் வழிகாட்டியாக அமைந்தன. கிறிசு(ஸ்)த்தவர்களது வேகமான பிரச்சாரத்தால் மக்கள் மதிமயங்கி உண்மை அறியாது தவித்த நேரத்தில் இவர்களில் அக்கறை உடையவர்களாக சைவக்குருக்கள் விளங்கினார்கள் இல்லை.

மதமாற்றத்தைக் கண்டும், அதைத் தடுக்க ஆவா செய்யாத சைவக் குருக்கள் மீதும், சைவசமயத்தைத் துறந்து சொந்த லாபம் பெறும் நோக்குடன் மதம் மாறினோர் மீதும் நாவலர் சொல்லம்புகள் துளைக்கத் தவறவில்லை. சைவசமயிகளை நோக்கி அவர் கூறிய அறிவுரைகளைப் பார்க்கும்போது நாவலர் நெஞ்சம் வருந்தி வேதனைப்பட்டது புலனாகின்றது.

“யாழ்ப்பாணத்திலுள்ள சைவசமயிகளே! உங்களிடத்துள்ள அன்புமிகுதியினாலே நாஞ்சொல்பவைகளைக் கேளுங்கள். நீங்கள் சிவதீட்சை பெறும் என்னை! விபூதி ருத்திராசதாரணம், பஞ்சாசரசெபம், சிவாலய தரிசனம், இவைகளை நியமமாகச் செய்தும் என்னை!

உங்கள் சமயக் கடவுளாகிய சிவபெருமானுடைய இலக்கணங்களையும் புண்ணிய பாவங்களையும், அவைகளின் பயன்களாகிய சுவர்க்க நரகங்களையும், சிவபெருமானை வழிபடும் முறைமையையும், அதனாலே பெறப்படும் முக்தியின் இலக்கணங்களையும், கிரமமாகப் படித்தாயினும், கேட்டாயினும் அறிகின்றீர்களில்லை.

உங்கள் பிள்ளைகளுக்கு இவைகளைப் படிப்பிக்கின்றீர்களில்லை. உங்கள் கோயில்களிலே சிவபக்தியை வளர்ப்பதற்கு ஏதுவாகிய வேதாபாராயாணம், தேவார திருவாசக பாராயாணம், சைவசமயப் பிரசங்கம் முதலிய நற்கருமங்களைச் செய்விக்கின்றீர்களில்லை.”

என உள்ளம் நொந்து நாவலர் சைவசமயிகளுக்கு விடுத்த விண்ணப்பத்தில் ‘உங்களிடத்திலுள்ள அன்பு மிகுதியினாலே நாஞ் சொல்பவைகளைக் கேளுங்கள்’ என்ற அவர் கூற்று சமுதாயத்தின் அக்கால நிலைமையை வெளிப்படுத்துகின்றது.

சைவ சமயத்தவர்களின் நலன் கருதி உழைக்காத சைவக்குருக்கள் போக்கும் நாவலரை வேதனைக்குள்ளாக்கியது. இவை யாவற்றுக்கும் பரிகாரமாகவே பிரசங்க மரபை அவர் தொடக்கினார். நாவலரோடு ஒருகாலை மாணாக்கராயிருந்த கார்த்திகேய ஐயரும் இடையிடையே பிரசங்கம் செய்து வந்தார்.

தான் மட்டும் பிரசங்கங்கள் செய்து மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் கொண்டவராக விளங்காது சைவப்பிரசங்கங்கள் செய்ய வல்லரவர்களுக்குத் தேர்ச்சி கொடுத்து இத்தொண்டிற் பலரை ஊக்குவிக்கவும் முயன்றிருக்கின்றார்.

“தமிழ்க்கல்வியும், சைவசமயமும் அபிவிருத்தியாவதற்குக் கருவிகள் முக்கிய ஸ்தலந்தோறும் வித்தியாசாலை ச(ஸ்)தாபித்தலும், சைவப்பிரசாரணஞ் செய்வித்தலுமேயாம். இவற்றின் பொருட்டுக் கிரமமாகக் கற்றுவல்ல உபாத்தியாயர்களும் சைவப்பிரசாரகர்களும் வேண்டப்படுவார்கள்.

ஆதலினாலே நல்லொழுக்கமும், விவேகமும், கல்வியில் விருப்பமும், இடையறாமுயற்சியும், ஆரோக்கியமும் உடையவர்களாய்ப் பரீட்சக்கப்பட்ட பிள்ளைகள் பலரைச் சேர்த்து அன்னம், வசுத்(ஸ்)திரம் முதலியவை கொடுத்து உயர்வாகிய இலக்கண விலக்கியங்களையும், சைவசாத்(ஸ்)திரங்களையுங் கற்பித்தல் வேண்டும். அவர்களுள்ளே தேர்ச்சியடைந்தவர்களையே உபாத்தியாயர்களாகவும் சைவப்பிரசாரகர்ளாகவும் நியமிக்கலாம்.”

மேற்குறிப்பிட்ட ஆறுமுகநாவலர் கூற்றிலிருந்து தமிழ், சைவம் என்ற இரண்டினையும் அபிவிருத்தி செய்வதற்காக இளஞ்சந்ததியினரை ஊக்குவிப்பதற்கு நாவலர் ஒரு திட்டத்தினையே மனதிற் கொண்டிருந்தார் என்பது தெளிவாகின்றது.

நாவலரின் கடைசிப் பிரசங்கம்

நாவலர் பிரசங்கங்களையும் புராண படலங்களையும் இருந்து கொண்டு செய்வார். ஏனைய சமூக, பொருளாதார விடயங்கள் பற்றிப் பிரசங்கங்கள் செய்யும் போது நின்றுகொண்டு செய்வார். பிரசங்கம் செய்யும்போது தரித்திருக்கும் பட்டாடையும் திரிபுண்டரமும் கௌரிசங்கமும் தாழ்வடமும் எவரையும் வசீகரிக்கும்.

இவரது இனிமையான குரல் வெகுதூரம் கேட்கும். எல்லா வகையான இராகங்களும் நாவலருக்கு வரும். சிலசமயம் நான்கு மணி நேரம் வரையும் காலெடுத்து மாறி வையாமலும் உடலுறுப்புக்களை அசைக்காமலும் ஒரே மாதிரியிருந்து கொண்டு பிரசங்கிப்பார்.

நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை தினமான ஆடிச்சுவாதியன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடைபெற்றது. அன்று பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை என்ற சுந்தரரின் தேவாரத்தைப் பீடிகையாக வைத்துப் பிரசங்கித்தார்.

நிலையில்லாத இந்தச் சரீரம் உள்ள பொழுதே எனது கருத்துக்கள் நிறைவேறுமோ என்னும் கவலை இராப்பகலாக என்னை வருத்துகிறது. அதாவது சைவமும் தமிழும் வளர்ச்சியடைவதற்கு வித்தியாசாலைகளைத் தோற்றுவித்தலும், சைவப் பிரசங்கத்தைச் செய்வித்தலும் இன்றியமையாதனவாகும். நான் உங்களிடத்துக் கைமாறு கருதாமல் முப்பத்திரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பணியும் சைவப் பணியும் செய்துள்ளேன்.

எனக்குப் பின் சைவ சமயம் குன்றிப்போகும் எனப் பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள். எனவே உங்களுக்காக சைவப் பிரசாரகரைத் தேடிக்கொள்ளுங்கள். இதுவே என்னுடைய கடைசிப் பிரசங்கம், இனிமேல் நான் உங்களுக்குப் பிரசங்கம் பண்ணமாட்டேன் என்ற கருத்துப்பட பேசினார்..

அப்பிரசங்கத்திற்கு வந்தவர்களில் கண்ணீர் விட்டழாதவர் எவருமில்லை.

மறுநாள், நேற்றிரவு ஏன் இவ்வாறு பிரசங்கம் செய்தீர்கள்? என்று அன்பரொருவர் கேட்டபோது தமக்கு அந்நேரம் ஒன்றும் தெரியவில்லை என்றாராம் நாவலர்.

நாவலரது கூற்றுப்படியே அப்பிரசங்கம் அவரது கடைசிப் பிரசங்கமாக அமைந்தது. இப்பிரசங்கம் நடைபெற்று நான்கு மாதங்களின் பின் அவர் சிவபதமடைந்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.