11/11/2017

கொரியாவின் மகாராணி செம்பவளம் ஒரு தமிழ் இளவரசி அதிசய வைக்கும் ஆய்வு முடிவுகள்...


மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு.... இடைசொறுவல் செய்த வட ஆதிக்க சக்தியும்... இன்று அம்பலம்..

Orissa Balasubramani..

கொரியாவின் மகாராணி ஒரு தமிழ் இளவரசி அதிசயவைக்கும் ஆய்வு முடிவுகள்..

சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றில் இந்திய கொரிய பண்பாடு பரிமாற்ற கருத்தரங்கம் ஒன்று 06.10.2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

கொரிய தூதரகமும், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் பேசிய கொரிய நாட்டின் வரலாற்று ஆய்வாளர் ஒருவர் பேசி முடித்தபின் தமிழ் வாழ்க என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

காரணம், கொரிய மொழியில் ஐநூறு தமிழ் சொற்கள் உள்ளதை ஆய்வு செய்து கட்டுரை சமர்ப்பித்தவர் அவர்.

அவர் மட்டுமல்ல கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த 11 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களும் அடுக்கடுக்கான தகவல்களை அளித்து வியப்பில் ஆழ்த்தினார்கள்.

சரி...எதற்காக இந்த கருத்தரங்கை கொரிய அரசாங்கமே தூதரகம் மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதிகமில்லை ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று வந்தால் சுலபமாக புரியும்.

இந்தியாவின் இளவரசி ஒருவர் கொரிய நாட்டின் மன்னரான சுரோ என்பவரை திருமணம் செய்தார்.

இதற்காக 20 பேர் கொண்ட ஒரு குழுவோடு கடல் வழியாக அந்த இளவரசி அயுத்தா என்ற கிழக்கு இந்திய பகுதியில் இருந்து தென்கொரியா சென்றார்.

செல்லும்போது ஏழு மிதக்கும் கற்கள் தம்முடன் எடுத்து சென்றார் என்பது வரலாறு.

அந்த கற்களை இன்னமும் கொரியாவில் வைத்து பாதுகாத்து, வணங்கி வருகிறார்கள் கொரிய மக்கள்.

இந்த வரலாற்று தகவல்களை ஆய்வு செய்த இந்திய ஆய்வாளர்கள் வழக்கம்போல தமிழ்நாட்டில் இதெல்லாம் நடந்திருக்காது என்று எண்ணினார்களோ என்னவோ..

அந்த இளவரசி அயோத்யா இளவரசி என்று சொல்லி வைக்க, கொரிய அரசும் பய பக்தியோடு அயோத்யாவில் இந்திய இளவரசியும், கொரிய ராணியுமான அவருக்கு நினைவிடம் கட்டிவிட்டார்கள்.

2005 ம் ஆண்டில் பார்த்த சாரதி என்கிற இந்தியாவுக்கான முன்னாள் கொரிய தூதர் எழுதிய இது தொடர்பான நாவல் ஒன்றில் அந்த இளவரசி மாமல்லையில் இருந்து சென்றதாக குறிப்பிட்ட பிறகு கொரிய அரசாங்கத்திற்கே இந்திய மருமகளை பற்றி ஆய்வு செய்யும் உந்துதல் ஏற்பட்டிருக்கிறது.

2005 இல் இருந்து தமிழ் மரபு அறக்கட்டளையின் நாராயணன் கண்ணன் அவர்கள் கொரிய தரவுகள் தமிழ் சார்ந்தது என்று சிந்தனையில் செயல் பட 2010 இல் இருந்து அவர் சார்ந்த மின் தமிழ் மடலாடும் குழுவின் முனைவர் நாகராஜன் மற்றும் கடல் சார் ஆய்வாளார் ஒரிசா பாலு என்கிற ஆய்வாளர்களும் இதில் களமிறங்கிய பிறகு தமிழ்நாட்டுக்கும் கொரியாவுக்குமான தமிழ் உறவு தெளிவாக புலப்பட தொடங்கியுள்ளது கண்டு கொரிய மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.

இதில் அயுத்தா என்கிற இடத்தின் பெயர் ஆய் என்று கண்டுபிடித்தவர் ஒரிஸ்ஸா பாலு.

கடல் ஆய்வின் தனித்திறன் வாய்ந்த ஒரிசா பாலு ஆய் துறை என்பது கன்னியாகுமரி ,தூத்துக்குடி ராமநாதபுரத்தின் இருந்த துறைமுக நகரங்களில் ஒன்று என்று நிரூபித்து உள்ளார்.

காரணம், 20 பேர் கொண்ட ஒரு குழுவோடு 60 நாட்களில் கொரிய செல்வதற்கான வாய்ப்புகள் ஆய் துறையில் இருந்துதான் சாத்தியம் என்று நிரூபித்தார்.

ஆமை வழித்தடங்களை பின்பற்றி உலகின் அத்தனை நாடுகளுக்கும் கடல் வழியாக சென்று திரும்பி வந்த "திரை மீளர்கள்" (கடலுக்குள் சென்று மீண்டு வருபவர்கள்) தமிழர்கள்தான் என்பதை நிரூபணம் செய்தவர் ஒரிசா பாலு.

மேலும் தமிழ்நாட்டின் இளவரசி கொண்டு சென்ற மிதக்கும் கற்கள் தமிழ்நாட்டின் குறிப்பாக ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதியில் மட்டுமே கிடைப்பவை என்பது அவரது வாதத்திற்கு வலு சேர்க்கிறது.

இது ஆய்வு குறித்த பின்னணி தகவல்கள் அவ்வளவே..

ஆய்வாளர்கள் கூறிய ஒப்புவமைகள்தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயங்கள்.

கிபி 48 ம் ஆண்டு தமிழ்நாட்டு மன்னர் ஒருவர் கொரிய இளவரசருக்கு தனது மகளை பெண் கொடுத்து இருக்கிறார் என்றால் அதற்க்கு முன்னர் இருந்தே இரு நாடுகளுக்கும் நல் உறவு இருந்திருக்க வேண்டும்.

கடல் கடந்த நாட்டின் இளவரசர் ஒருவருக்கு தனது மகளை மனம் முடிக்க வைக்கும் நம்பிக்கை தமிழ்நாட்டின் மன்னருக்கு ஏற்பட்டு இருக்கிறது என்றால் தமிழர்களின் கடல் கடந்த உலகளாவிய உறவுகள் எப்படி இருந்திருக்க வேண்டும் ? என்கிற கேள்வியை வலுவாய் கேட்கிறார் ஒரிசா பாலு.

வெறுமனே கற்கள் மட்டுமல்ல, நாம் ஏற்கனவே முன்னர் பார்த்த கொரிய ஆய்வாளர் சொன்னது போல ஐநூறு தமிழ் சொற்கள் அல்ல 4 ஆயிரம் தமிழ் வார்த்தைகள் கொரிய மொழியில் உள்ளது என்றும் அடித்து சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அணிந்திருந்த அணிகலன்கள், நகைகள் அதே வடிவத்தில் கொரியாவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. உடைகள் ஒத்துபோகின்றன. உணவு முறைகள் ஒத்து போகின்றன. தமிழ் நாட்டின் சுண்டக்கஞ்சி அங்கே மக்கோழி ரைஸ் பீர் என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டின் ஊறுகாய் அங்கே கிம்சி என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டின் அமுக்கரான் கிழங்கு அங்கே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் விசேட நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது வழக்கம். அதே வழக்கம் கொரியாவிலும் உள்ளது.

அங்கே மாமரம் இல்லை என்பதால் மிளகாய் செடி இலைகளை தோரணமாக கட்டுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய இசைக் கலையான தப்பாட்டத்திற்கும் கொரியாவின் டிரம் கலைக்கும் 12 விதங்களில் 8 விதங்கள் ஒரே மாதிரி உள்ளன. 4 மட்டும் கொஞ்சம் வேறுபடுகின்றன.

தமிழர்களின் தற்காப்பு கலையான களரியின் பல அம்சங்கள் கொரிய தற்காப்பு கலையோடு ஒத்து போகின்றன என்பது உட்பட பல அம்சங்களை புகைப்பட ஆதாரங்களோடும், வீடியோ ஆதாரங்களோடும் முன்வைத்தார்கள் அறிவுசார் ஆய்வாளர்கள்.

இதைவிட அறிவியல் பூர்வமான ஒரு ஆய்வு அனைவரையும் அசர வைத்து. அதாவது இரும்பு பயன்பாட்டில், அவற்றை உருக்குவதிலும், பயன்படுத்துவதிலும் கொரியாவில் பின்பற்றப்படும் முறை தென்னிந்தியாவில் இருந்து கற்றுக் கொள்ளப்பட்டது குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து தான் கற்று கொடுக்க பட்டிருகிறது என்று ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டது சிறப்பு, அதை நிரூபிக்க ஒரிசா பாலு பல் வேறு தரவுகளை கொடுத்தார் .

வீட்டின் கட்டமைப்பு, வேளாண்மை செய்யும் முறைகள், சமையலறை உட்பட பல அம்சங்களில் இரு நாடுகளுக்கும் வேறுபாடே கண்டு பிடிக்க இயலாத அளவுக்கே உள்ளன.

பவளங்கள் உட்பட பல கற்கள் தமிழ்நாட்டு பாரம்பரியத்தோடு ஒத்துபோகின்றன.

இதைவிட வியப்பான தகவல் அந்த ராணியின் வம்சா வழியில் அதாவது ரத்த உறவுகளில் வந்தவர்களில் சுமார் என்பது லட்சம் பேர் கொரியாவில் தற்போதும் வசித்து வருகிறார்கள்.

தமிழ் மொழியில் இருந்துதான் கொரிய மொழி உருவாகியிருக்க வேண்டும் என்றும் கணிக்கிறார்கள் முனைவர் நாராயணன் கண்ணன் போன்ற ஆய்வாளர்கள்.

தமது நாட்டின் முன்னாள் மகராணி, மருமகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதை அறிந்து தமிழ்நாட்டை புனிதமான நாடாக பார்க்க தொடங்கி இருக்கிறார்கள் கொரியர்கள்.

இதற்கான முயற்சியில் கொரிய தமிழக தூதுவர் கிம் அவர்கள் மிகவும் மும்முரமாக உள்ளார்கள்.

சரி... இவ்வளவு சொன்னார்களே அந்த இளவரசி பெயர் என்னவென்று சொல்லவே இல்லையா என்ற கேள்வி எழலாம். ஏன் சொல்லவில்லை. அவர் பெயர் செம்பவளம் என்று முனைவர் நாராயணன் கண்ணன் சொல்கிறார்.

இந்த கருத்தரங்கிற்காக சுமார் 16 கட்டுரைகளை உலக தமிழ் ஆய்வு நிறுவனம் நூலாக வெளி இட இருக்கிறது.

கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை உலக தமிழ் ஆய்வு நிறுவன முனைவர் சிதம்பரம் அவர்களும் கொரியா தூதர செயலாளர் திருமதி சுதா அவர்களும் திறன் பட செய்தார்கள்.

- சிந்தியா லிங்கசாமி, சமூக, வரலாற்று ஆய்வாளர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.